• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-11 17:50:52    
மண்ணும் மனிதரும்

cri
பூமியுடன் மக்களுக்குள்ள நெருங்கிய பாசப்பிணைப்பு ஆஸ்திரேலிய-சீன மக்களிடையே புராணத் தொடர்புக்கு ஒரு சான்றாக விளங்குகிறது. தங்களுடைய மூதாதையர்கள் பூமிக்கு அடியில் இருந்து தோன்றி, வாழ்க்கைப் பயணத்தை முடித்த பிறகு மீண்டும் பூமிக்குள்ளேயே போய் விட்டதாக ஆஸ்திரேலியப் பூர்வகுடிகள் நம்புகின்றனர். ஆஸ்திரேலியக் கண்டத்தின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிளில் இந்த நம்பிக்கை வலுவாக வேரூன்றியுள்ளது. பூமிக்குள்ளிருந்து தோன்றி, திரும்பவும் பூமிக்குள்ளே போய் மறையும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளும் வாழ்க்கை நடவடிக்கைகளை ஒரு கனவு என்கின்றனர். சீனாவிலும், ஆதிதேவதையான நுவா மண்ணுக்கு அடியில் இருந்தே தோன்றியதாகக் கூறப்படுகிறது.

ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் புராணக்கதைகளில், மூதாதையரின் ஆவி நாடு முழுவதும் சுற்றியலைந்து, பல்வேறு நில அமைப்புக்களாக வடிவெடுத்ததாகக் கூறப்படுகிறது. இந்த உருமாற்றம் சீனாவில் பன்கு புராணம் எனப்படுகிறது. பாதிமனிதன்-பாதிக் கடவுளாக அவதரித்த பன்கு, இறந்த போது அவனுடைய உடம்பில் இருந்து இந்தப் புவி தோன்றியதாக ஒரு நம்பிக்கை உள்ளது. பன்குவின் கண்கள் சூரியனாகவும் சந்திரனாகவும் மாறின. அவனுடைய ரத்தம் ஆறுகளாக மாறியது. தலைமுடி மரங்களாகவும் செடிகளாகவும் உருமாற்றம் பெற்றன; வியர்வை மழையானது; அவனுடைய உடம்பு மண்ணானது என்ற நம்பிக்கை, சீனப் பாரம்பரியத்தில் மண்ணின் மகத்துவத்தை எடுத்துக் காட்டுகிறது.

ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் பழங்கதைகளில் கனவுலக மூதாதையர்களின் ஆவி உறைவதற்காக சுரிங்கா எனப்படும் கற்பலகைகள் நடப்பட்டதாக சொல்லப்படுகிறது. மூதாதையரின் உலாவும் ஆவிகள் இந்தக் கற்பலகையில் இறங்குவதாக நம்பப்பட்டது. சீனாவிலும் இதே போன்ற நம்பிக்கை நிலவுகிறது. சீன மொழியில் மூதாதை என்பதைக் குறிக்கும் 'சு'(Zu) என்ற சொல்லின் எழுத்து அமைப்பு, ஒரு கல்லை செங்குத்தாக நட்டு, அதன் மீது இரண்டு கற்பலகைகளை அடுக்கி வைத்தது போல் இருக்கிறது. இப்படி நடப்படும் கற்களின் மீது, கை நரம்பை வெட்டி மனிதரத்தம் தெளித்து புனிதமாக்கப்படுவதாகவும் சொல்லப்படுகிறது. தமிழ் நாட்டிலும், முன்பு மாண்டவர்களை அடக்கம் செய்த இடத்தில் நடுகல் நடும் பழக்கம் இருந்தது. இன்றைக்கும் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் ஒருகல்லை. வைக்கும் வழக்கம் சில இடங்களில் நிலவுகிறது. மேலும் பேயோட்டிகள், கோடாங்கி அடித்தபடி, பேய்பிடித்தவரின் தலையில் கல்லை ஏற்றி, ஊர் எல்லை வரை கொண்டு சென்று, ஒரு கிணற்றில் அந்தக் கல்லை எறியச் செய்து, பேய் விரட்டும் வழக்கமும் நிலவுகிறது. இவ்வாறு கற்களுக்கும் ஆவிகளுக்கும் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை உணர முடிகிறது. நடுகல்லுக்கு ரத்தப் பலி காட்டுவதன் மூலம், மண்ணின் விளை திறனைப் பெருக்க வழிபட்டனர். சீனாவிலும், இதே போல கி. மு. 24ஆம் நூற்றாண்டிற்கு முன்பே வூ ஹுவாய் (Wu Huai) காலத்தில் பூமிவழிபாடு நிலவியதாக வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன.

ஆஸ்திரேலியாவின் மத்தியப் பகுதியில் உள்ள அருன்ட்டா பூர்வகுடிகளிடையே பல சூரியன்கள் இருந்ததாகவும், அவை ஒவ்வொன்றாக விண்ணுக்குச் சென்றதாகவும் ஒரு நம்பிக்கை உள்ளது. மூதாதையர் ஆவி போன்று, சூரியன் பூமிக்கு அடியில் இருந்து முளைத்து, தீப்பந்தை ஏந்தியபடி, வானுக்குச் சென்று ஒளி தந்து விட்டு, மாலையில் திரும்பவும் பூமிக்குள்ளே இறங்கி விடுவதாகவும் கூறப்படுகிறது. சீனாவிலும் 10 சூரியன் கதை உண்டு. கிழக்கு சீனக் கடலுக்கு அப்பால் இருந்த டாங்கு (Tanggo) ஏரியில், தோன்றிய 10 சூரியன்கள் கிழக்கில் இருந்து மேற்காக காலை முதல் மாலை வரை நகர்ந்து விட்டு, மாலையில் டாங்கு ஏரிக்குள் இறங்கி விட்டதாகவும், அந்தச் சூரியன்கள் ஒவ்வொன்றையும் வில்வித்தையில் கெட்டிக்காரனான யி (Yi) அம்பு எய்து வீழ்த்தியதாகவும் நம்பிக்கை.

ஆஸ்திரேலியப் பூர்வகுடிகளின் மண உறவு எட்டுவர்க்கங்கள் என்ற அடிப்படையில் அமைந்தது. சீனாவிலும் அதே போல, திருமண பந்தத்தை உருவாக்கியவர்கள் பேரரசர் Fuxi நுவா தேவதை என்றும், ஒன்றன் மீது ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்ட மூன்று எட்டு முக்கோணங்கள் அடங்கிய 64 எண்கோண வடிவங்களை Fuxi பேரரசர் கண்டு பிடித்த பின்னர், அவர் நுவா தேவதையை மணந்து திருமண பந்தத்தை உருவாக்கினார் என்றும் சொல்லப்படுகிறது.