இலையுதிர் காலம். விடியற்காலை நேரம். நிலா மெல்லமெல்ல கீழிறங்கி மறைந்து விட்டது. ஆனாலும் சூரியன் இன்னும் எழுந்திருக்கவில்லை. வானம் கருநீலத் திரையாக விரிந்து கிடந்தது. ஒருசில இரவுப் போக்கிரிகளைத் தவிர ஊரே ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது. திடீரென படுக்கையில் எழுந்து உட்கார்ந்தான் பெரிய ச்சுவான். ஒரு தீக்குச்சியை உரசி, எண்ணெய் பிசுக்கேறிய விளக்கை ஏற்றினான். அந்தத் தேனீர் விடுதியின் இரண்டு அறைகளிலும் பிசாசு போல வெளிச்சம் பரவியது. "இப்போ போறீங்களாப்பா?" கிழவி கேட்டாள். உள்ளே மச்சுவீட்டிற்கு உள்ளிருந்து தொடர்ச்சியாக இருமல் ஒலித்தது. "ஹ்ம்..." இருமல்களைக் கேட்டபடியே உடை அணிந்து கிழவன், "சரி, வாங்கிட்டு வந்துடுறேன்" என்று தீர்மானமாகக் கூறியபடியே, கைகளை நீட்டி சோம்பல் முறித்தான். அவனுடைய மனைவி தலையணைக்கு அடியில் துழாவி, சில வெள்ளிப் பணங்களின் பொட்டலத்தை தேடி எடுத்துக் கொடுத்தாள். கை நடுக்கத்தோடு அதை தனது பையில் போட்டுக் கொண்ட கிழவன், காகித லாந்தரை ஏற்றிவிட்டு, எண்ணெய் விளக்கை ஊதி அணைத்தான். மச்சுவீட்டுக்குள் போனான். லேசாக புரளும் ஓசை கேட்டது. உடனே அடுக்கடுக்காய் இருமல்கள். அவை ஓய்ந்ததும், பெரிய ச்சுவான் மெல்லக் கூப்பிட்டான். "மகனே! எந்திரிக்க கூடாதா? கடையை அம்மா பாத்துக்கிடுவா. நீ எழும்பு..." பதில்வரவில்லை. மகன் திரும்பவும் தூங்கிவிட்டான் என நினைத்தபடியே தெருவில் இறங்கினான் கிழவன். இருட்டிலே எதுவும் தெரியவில்லை. பழுப்புச் சாலை மட்டும் நீண்டு கிடந்தது. நடந்து செல்லும் அவனுடைய காலடியில் மட்டும் ஒளியைச் சிந்தியது லாந்தர் விளக்கு. அங்கும் இங்குமாய் சில நாய்கள் தோன்றின. ஆனால் அவை குரைக்கவில்லை. வெளியே ரொம்பக் குளிராக இருந்தது. ஆனாலும் கிழவனின் ஊக்கம் குறைந்துவிட வில்லை. திடீரென இளமையாகிவிட்டது போல, ஏதோ ஒரு அதிசயமான உயிர்த் துடிப்பு தன்னுள் புகுந்து கொண்டது போல, உணர்ந்தான். வேகமாக பெரிய எட்டுகளாக எடுத்துப் போட்டான். வானத்தில் வெளிச்சம் விரியவிரிய, சாலை தெளிவாகத் தெரிந்தது. தன்னை மறந்து நடந்து கொண்டிருந்த பெரிய ச்சுவான், தனக்கு எதிரே கூட்டுச்சாலை சந்திப்பை திடீரெனக் கண்டு திடுக்கிட்டான். சில எட்டுக்கள் பின்வாங்கி, ஒரு பூட்டிய கடையின் தாழ்வாரத்தில் ஒதுங்கினான். சிறிது நேரத்தில் அவனுக்கு குளிர் நடுக்கத் தொடங்கியது. "ஹெ, ஒரு கிழட்டுப் பயல்," "தண்ணியடிச்சிட்டு வந்துட்டானோ..."
|