ச்சுவான் கிழவன் கண்விழித்து திரும்பவும் நடக்கத் தொடங்கிய போது, பலர் கடந்து செல்வதைக் கண்டான். அவர்களில் ஒருவன் இவனைத் திரும்பிப் பார்த்தான். அவனைத் தெளிவாக பார்க்க முடியவில்லை. ஆனாலும் அவன் பார்வையில் பஞ்சத்தில் அடிபட்டவன் உணவைக் கண்டது போன்ற ஒரு பேரார்வம் மின்னியது. கிழவன் சுவான் தனது லாந்தர் விளக்கைப் பார்த்தான். அது அணைந்து விட்டிருந்தது. தனது பையைத் தட்டிப் பார்த்துக் கொண்டான். கட்டியான பொட்டலம் பத்திரமாக அங்கே இருந்தது. சுற்றிமுற்றிப் பார்த்தான். வழிதவறிய பிசாசுகளைப் போல பலர் இரண்டு, மூன்று பேராக திரிந்து கொண்டிருந்தனர். அவர்களையே உற்றுப்பார்த்த போது, வித்தியாசமாக எதுவும் தென்படவில்லை.
அப்போது சில படைவீரர்கள் ரோந்து சுற்றிவந்தனர். அவர்களின் சீருடையின் முன்னும் பின்னும் பெரிய வெள்ளை வட்டங்கள் தூரத்தில் இருந்தே தெளிவாகத் தெரிந்தன. அவர்கள் கிட்டே நெருங்க நெருங்க வட்டத்தின் சிவப்பு விளிம்பும் தெரிந்தது. அடுத்த நொடியே, தடதடவென்று ஒரு கும்பல் முந்திச்சென்றது. தொடர்ந்து, ஏற்கனவே வந்திருந்த ஒரு கூட்டம் முண்டியடித்துக் கொண்டு முன்னேறியது. கூட்டுச் சாலைக்கு சற்று முன்பு அக்கும்பல் திடீரென நின்று, ஒரு அரைவட்டமாக வளைந்தது.
கிழவன் சுவான் அந்தத் திசையிலும் பார்த்தான். ஆனால் மனிதர்களின் முதுகுகளே தெரிந்தன. எக்கி எக்கிப் பார்த்த அவர்கள் கண்ணுக்குத் தெரியாத கரம் தூக்கிப் பிடிக்க எட்டிப் பார்க்கும் வாத்துகளைப் போலத் தென்பட்டனர். ஒரு கணம் எல்லாம் ஸ்தம்பித்தது. திடீரென பார்வையாளர்களிடையே ஒரு சலசலப்பு. பின்வாங்கிய கூட்டத்தில் இடிபட்டு, சுவான் தடுமாறினான்.
"ஏய், பணத்தைக் கொண்டா. நான் சரக்கு தர்றேன்," கருப்பு உடை அணிந்த ஒருவன் அவன் முன்னால் வந்து நின்றான். வாள்வீச்சு போல் மின்னிய அவனுடைய பார்வையின் வேகத்தில் கிழவன் பாதியாகக் குன்றிப் போனான். அந்த மனிதன் முரட்டுக் கையை நீட்டியபடி நின்றான். அவனுடைய இன்னொரு கையில் வேக வைத்த ரொட்டி இருந்தது. அதிலிருந்து செந் நிறத் துளிகள் தரையில் சொட்டிக் கொண்டிருந்தன.
அவசர அவசரமாக சுவான் கிழவன் வெள்ளிப் பணங்களை தடுமாற்றத்தோடு எடுத்துக் கொடுத்தான். ஆனால் அந்தச் சரக்கை தொட்டு வாங்கும் துணிவு இல்லை. மற்றவன் பொறுமை இழந்து போய், "எதுக்கு பயப்படறே? எடுத்துக்கோ," என்று கத்தினான். சுவான் கிழவன் தயங்கிய போது அவனுடைய லாந்தர் விளக்கை அந்த ஆள் பிடுங்கி, அதில் ஒட்டப்பட்டிருந்த தாளைக் கிழித்து, அதில் ரொட்டியை வைத்துச் சுருட்டினான். அந்தப் பொட்டலத்தை சுவானின் கையில் திணித்தபடியே, வெள்ளிப் பணத்தை பிடுங்கினான். அதைத் தொட்டுத் தடவிப் பார்த்துவிட்டு, "முட்டாள் கிழவன்" என்று முனங்கியபடியே திரும்பிச் சென்றான்.
"யாருக்காக இத வாங்குறே? என்ன உடம்புக்கு?" யாரோ கேட்டார்கள்.
கிழவன் பதில் சொல்லவில்லை.
அந்தப் பொட்டலத்திலேயே கவனமாக, அது ஏதோ ஒரு பழைய வீட்டின் ஒரே வாரிசு என்பது போல ஏந்திச் சொன்றான். இப்போது அவனுக்கு எதுவுமே முக்கியமில்லை. இந்தப் புதிய உயிரைத் தனது வீட்டில் கொண்டு போய் நட்டு, மகிழ்ச்சியை விளைவிக்க வேண்டும். சூரியனும் மேலே எழும்பி வந்துவிட்டான். அவனுடைய வீட்டை நோக்கிச் சென்ற நீண்ட சாலை பகல் வெளிச்சத்தில் அவனுக்கு முன்னால் பிரகாசித்தது. அவனுக்குப் பின்னால் கூட்டுச்சாலையில் "பண்டைய அரங்கு" என பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு மங்கியது.
|