ஈரோடு மாவட்டம் சானார் பாளையம் எஸ். குணசேகரன் எழுதிய கடிதம். கடந்த ஏபரல் 4ம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சிகளை கேட்டோம். சீன பண்பாடு, தமிழ் மூல சீனம் ஆகியவை சிறப்பாக அமைந்தன. மலர்ச்சோலை நிகழ்ச்சியில் கேள்விப்படாத பல அதிசயமான செய்திகள் கேட்டு ஆச்சரியப்பட்டோம், பாராட்டுக்கள். நேயர் நேரத்தில் சில குறிப்பிட்ட நேயர்களின் கடிதங்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து ஒலிபரப்புகிறீர்கள், எல்லோருடைய கடிதங்களையும் வாசிக்கவேண்டும். மின்னஞ்சல், தொலைபேசி போன்றவை வசதியுள்ள நேயர்கள் மட்டுமே பயன்படுத்துகின்றனர்தயவு செய்து அனைத்து நேயர்களின் கடிதங்களும் நிகழ்ச்சியில் சேர்த்துக் கொள்ளுங்கள் என்று எழுதியுள்ளார்.
அன்புக்குரிய குணசேகரன் அவர்களே, தாங்கள் கூறியதைப் போல நேயர்களிடையே பாகுபாடோ, பாராமுகமோ எப்போது நாம் காட்டியதில்லை.நீங்கள் எழுதும் கருத்துக்களுக்குத்தான் நேயர் நேரம் நிகழ்ச்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, தனி நபர் பற்றிய விருப்பு வெறுப்பாக இந்நிகழ்ச்சியை கருத வேண்டாம். மேலும், கடிதங்கள் பொதுவாக நீங்கள் எழுதி அஞ்சல் செய்த அடுத்த சில நாட்களிலேயே வந்து சேர்வது கிடையாது. கடிதங்கள் வந்து சேர்வதில் ஏற்படும் தாமதமும், அப்படி வந்து சேரும் கடிதங்களை கொஞ்சம் கொஞ்சமாக முதலில் வந்து சேர்ந்தவை முதலில் என்ற முறைப்படி நிகழ்ச்சியில் சேர்த்துக்கொள்ளப்படுகின்றன. கடிதங்களில் நிகழ்ச்சிகளைப் பற்றிய கருத்துக்களும், விமர்சனங்களும் முறையாக தொகுக்கப்பட்டு நிகழ்ச்சியில் வாசிக்கப்படுகின்றன. நல விசாரிப்புகள், இலவச அஞ்சல் உறைகள் தேவை போன்ற கோரிக்கைகள் எல்லாம் நேயர் நேரம் பகுதியில் இணைக்கப்படமுடியாது என்பது நேயர்களுக்கு தெரியும் ஆனால் நிகழ்ச்சிகளை பற்றி நீங்கள் எழுதும் கருத்துக்கள் இடம்பெறாமல் போக வாய்ப்பில்லை. எல்லா நிகழ்ச்சிகளையும் பற்றிய எல்லா கருத்துக்களும் இணைக்க முடியாது ஆனால், தொடர்ந்து கடிதங்களை எழுதி அனுப்பும் நேயர்களின் கருத்துக்கள் நிகழ்ச்சியில் இடம்பெறுவதில் ஆச்சரியப்பட ஒன்றுமில்லை. மொத்தத்தில் நேயர்களை சமமாகவே கருதுகிறோம், நேயர்கள் எழுதும் கடிதங்களை ஆர்வமுடன் எதிர்நோக்குகிறோம் என்பதே உண்மை.மீண்டும் சொல்கிறோம், நீங்கள் எழுதும் கருத்துக்களுக்குத்தான் நேயர் நேரம் நிகழ்ச்சியில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது, தனி நபருக்கான விருப்பு வெறுப்பாக தயவு செய்து இந்நிகழ்ச்சியை பார்க்கவேண்டாம்.மின்னஞ்சலில் இடம்பெறும் நேயர்களின் பெயர் ஒருவேளை தொடர்ந்து இடம்பெறக்கூடும், அதற்கு காரணம் மின்னஞ்சல் அனுப்பும் நேயர்கள் குறைவான எண்ணிக்கையே. ஆனால் அதற்காக அவர்கள் எழுதும் கருத்துக்களை நிகழ்ச்சியில் இணைக்காமல் தவிர்க்கவும் முடியாது. அன்பு நேயர்களே, உங்கள் கடிதங்களை கூடிய வரை நிகழ்ச்சியில் இணைக்க நாங்கள் தொடர்ந்து செயல்படுகிறோம் என்பதை மறந்துவிடவேண்டாம்.
|