• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-07-26 12:17:55    
மருந்து 3

cri

ச்சுவான் கிழவன் வீட்டை அடைந்த போது கடை வெறிச்சோடிக் கிடந்தது. தேனீர் மேஜைகள் வரிசைவரிசையாக பளபளத்தன. வாடிக்கையாளர்கள் யாரும் வந்திருக்கவில்லை. அவனுடைய மகன் மட்டுமே சுவரை ஒட்டிய மேஜை முன் அமர்ந்து தின்று கொண்டிருந்தான். அவனுடைய நெற்றியில் வியர்வை முத்துக்கள் சரம் கோர்த்திருந்தன. கோடுபோட்ட சட்டை அவனுடைய முதுகோடு ஒட்டிக்கிடந்தது. தோள்பட்டை எலும்புகள் துருத்திக் கொண்டு, வி என்ற ஆங்கில எழுத்து தலை கீழாகத் தொங்குவது போலத் தோற்றம் தந்தது. அதைக் கண்டதும், தெளிவாக இருந்த சுவான கிழவனின் முகம் சுருங்கியது. சமையலறையில் இருந்து வேகவேகமாக வந்தாள் அவனுடைய மனைவி. அவளுடைய கண்களில் ஏதோ எதிர்பார்ப்பு, உதடுகள் நடுநடுங்க கேட்டாள்.

"கிடைச்சுதா?"

"ஆமா..."

இருவரும் சமையலறைக்கு உள்ளே சென்று சிறது நேரம் ஏதோ கலந்தாலோசித்தார்கள். பிறகு கிழவி வெளியே போய், ஒரு உலர்ந்த தாமரை இலையைக் கொண்டுவந்து மேஜையில் விரித்தாள். லாந்தர் விளக்கு காகிதத்தில் சுற்றியிருந்த செந்நிறக் கறைபடிந்த ரொட்டியைப் பிரித்து இலையில் வைத்தான் கிழவன். அதற்குள் சின்ன சுவான் தனது உணவை உண்டு முடித்துவிட்டிருந்தான். ஆகவே கிழவி அவசர அவசரமாக.

"சின்ன சுவான், அப்படியே உட்கார்ந்திரு. எந்திரிச்சிராதே" என்று கெஞ்சினாள்.

அடுப்பில் நெருப்பை கிண்டிவிட்ட படியே, தாமரை இலையில் வைக்கப்படிருந்த, சிவப்பும் வெள்ளையுமான லாந்தர் காகிதப் பொட்டலத்தை அடுப்பில் வைத்தான். சிவப்பும் கருப்புமாக ஜுவாலை குப்பென்று எழும்பியது. கடை முழுவதும் ஒருவித விநோதமான வாசனை பரவியது.

"நல்ல வாசனையா இருக்கே என்ன திங்கிறே" என்று கேட்டபடியே வந்து சேர்ந்தான் கூனன். அவன் நாள் முழுவதும் தேனீர்க்கடையிலேயே பழியாகக் கிடப்பவன். முதல் ஆளாக வருவான். கடைசி ஆளாகத்தான் வெளியேறுவான். இப்போது தடுமாறியபடியே தெருவை நோக்கியுள்ள மூலை மேஜையில் போய் உட்கார்ந்தான். அவனுடைய கேள்விக்கு யாரும் பதில் சொல்லவில்லை.

"அவல் கஞ்சியா?"

அப்போது பதில் இல்லை. அவனுக்குத் தேனீர் தயாரிப்பதற்காக சுவான் கிழவன் விரைந்தான்.

"இங்கே வா. சின்ன சுவான்!" அவனுடைய அம்மா உள்ளறைக்குள் இருந்து அழைத்தாள் நடுவில் போடப்பட்டிருந்த ஒரு ஸ்டூலில் அவனைப் பிடித்து உட்கார வைத்து, அன்போடு சொன்னாள்.

"தின்னு மகனே! இதைத் தின்னா நீ சரியாயிடுவே."

சின்ன சுவான் அந்தக் கருப்புப் பொருளைக் கையில் எடுத்துப் பார்த்தான் மெல்ல அதைப் பிய்த்தான். கருகிக்கரிந்த அந்த ரொட்டித் துண்டுக்குள் இருந்து, வெண்ணிற ஆவி வெளியேறியது. உள்ளே வெள்ளையாக இருந்த இரண்டு ரொட்டித் துண்டுகளையும் வேகவேகமாகத் தின்று முடித்தான் சிறுவன். தட்டு காலியானது. தாயும் தந்தையும் இரண்டு பக்கங்களிலும் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தனர். அவர்களுடைய பார்வை எதையோ கொடுத்து, எதையோ பெறுவது போல் இருந்தது.