• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-01 20:56:54    
மஞ்சள் பேரரசரின் மாண்பு

cri

சீன மக்களின் நிறம் மஞ்சள், ஆப்பிரிக்காக் கண்டத்தில் வாழ்கிறவர்கள் கருப்பு, ஐரோப்பாவில் தோன்றியவர்கள் வெள்ளை, தெற்காசிய நாடுகளில் வசிப்பவர்கள் வெண்மை அல்லது சிவப்புடன் கருப்பு கலந்த பொது நிறம் என்று பாகுபடுத்தினால், சீன மக்கள் மஞ்சள் நிறத்தில் தகத்தகவென தங்கமாக ஜொலிக்கிறார்கள். இதற்கு ஒரு புராணக்கதை உண்டு. நுவா என்ற தேவதை மஞ்சள்களி மண்ணைப் பிடித்து, படைத்த மனிதர்கள்தான் சீனர்கள் என்று புராணம் கூறுகிறது. ஒரு வரலாற்றுப் பின்னணியும் உண்டு. அதைக் கேட்கலாமா?

இன்றைய சீன மக்களின் மூதாதையர்கள் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் நதிப் பள்ளத்தாக்குப் பகுதிகளில் குடியேறினார்கள். அப்போது அவர்கள் பல இனங்களாகப் பிரிந்திருந்தனர். அவர்களிலே முக்கியமான இரண்டு இனங்களின் சிற்றரசர்கள். இருவரும் ஒரு தாய்க்கும் இரண்டு தந்தைகளுக்கும் புதல்வர்களாகப் பிறந்த உடன்பிறப்புக்கள். அதனாலேயே அவர்களுக்குள்ளே போட்டியும், பொறாமையும், பூசல்களும் மலிந்திருந்தன. அவர்களிலே ஒருவனின் பெயர் ஹுவாங் தி-அதாவது மஞ்சள் பேரரசன். சீன மொழியில் ஹுவாங் என்றால் மஞ்சள் எனப் பொருள்படும். மஞ்சள் நதியின் பெயர் ஹுவாங் ஹெ. இன்னொரு அரசனின் பெயர் யான் தி. இவர்களுக்கு இடையிலே நிலவும் போட்டி போதாது என்று, யாங்ச்சி பள்ளத்தாக்குப் பகுதியிலே மற்றொரு இனம் வந்து குடியேறியது. அதனுடைய அரசனின் பெயர் ச்சி யு (Qi You). இந்த இனங்களைச் சேர்ந்த மக்கள் மனிதர்களைப் போலத் தோற்றமளிக்க மாட்டார்களாம். காட்டு விலங்குகளைப் போலக் கொடூரமாக நடந்து கொள்வார்களாம். அவர்களுடைய தலைகளும், புருவங்களும் வெண்கலம் அல்லது இரும்பு போல மிகவும் கடினமாக இருக்குமாம். அவர்களின் வயிற்றுக்குள்ள கல், மணல் எதைப் போட்டாலும் செரித்து விடுமாம். அவர்களால் எல்லா வகையான ஆயுதங்களையும் கையாள முடிந்தது. அதோடு பில்லி சூனியம் வைக்கும் மாயமந்திரங்களிலும் வல்லவர்களாகத் திகழ்ந்தனர். இந்த மூன்று மன்னர்களிலே ச்சியு, மற்ற இரண்டு இனங்களுக்குத் தொந்தரவு கொடுத்துக் கொண்டிருந்தான். அவனுடைய தாக்குதல்களை எதிர்த்து நிற்க முடியாமல், யான் தி மன்னன் தனது வட்டாரம் முழுவதையும் பறிகொடுத்து விட்டு, தப்பியோடி மஞ்சள் பேரரசனான ஹுவாங் தியிடம் உதவி கோரி அடைக்கலம் புருந்தான்.

உடனே ஹுவாங் தி போர் ஏற்பாடுகளை மும்முரமாகச் செய்யத் தொடங்கினான். மற்ற இனத்தவர்களிடம் புதிதாக ஆயுதங்களைத் தயாரிக்கும் படி சொன்னான். யிங் லாங் என்னும் துணிச்சல் மிக்க தளபதியைக் காட்டுக்கு அனுப்பி, எல்லாவகையான கொடிய மிருகங்களைப் பிடித்துவரச்செய்து, அவை யிங் லாங் கட்டளைக்கு மட்டுமே கீழ்ப்படியுமாறு பயிற்சி அளித்தான். இந்த மிருகங்கள் யிங்லாங் தலைமையில் ஒளிந்திருந்து திடீர்த்தாக்குதல் நடத்த வேண்டும் என்று கூறி விட்டு, தானே தலைமையேற்று, படை நடத்திச் சென்று ச்சியுவை தாக்கினான்.

காட்டமான போர். கடும் சண்டை. நடுவிலேயே பயந்து போய் பின்வாங்குவது போல ஹுவான் தி புறமுதுகிட்டு ஓடினான். இதனுடைய நோக்கம் ச்சியூவை, மிருகங்கள் ஒளிந்திருக்கும் இடத்திற்கு வரச்செய்வது, கோழை போல பயந்தோடும் ஹுவான் தியைத் துரத்திக் கொண்டு, ச்சியூ வந்த போது, ஒளிந்திருந்த யின் லாங் திடீரென காட்டு மிருகங்களை அவன் மீது ஏவி விட்டான். கொடூரமான விலங்குகள் தங்களது கூரிய நகங்களையும், பற்களையும் கொண்டு கடுமையாகத் தாக்கத் தொடங்கின. இதைத் தாக்குப் பிடிக்க முடியாமல் ச்சியூ படைகள் சிதறி ஓடின. இதைக் கண்டு கலங்கிய ச்சியூ உடனே மாயமந்திர வித்தைகளைக் காட்டத் தொடங்கினான். தனது மந்திர சக்தியால் பெரும் புயல் வீசச் செய்தான். கருமேகங்கள் கவிந்து அனைவரின் பார்வையையும் மறைத்தன. 'இனி என்னை எதிரி என்ன செய்ய முடியும்?' என்று வெற்றி எக்காளமிட்ட ச்சியூவை நோக்கி, ஹுவாங் தி பாய்ந்து வந்தான். புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட தேரில் ஏறி வந்தான் அவன், அந்தத்தேரில் பொருத்தப்பட்டிருந்த திசை காட்டும் கருவி அவனுக்கு எதிரியின் வழியைக் காட்டிக் கொடுத்தது. தைரியம் மிக்க தளபதி யிங் லாங் தனது அகன்றவாளை எடுத்தான். ஒரே வீச்சு. ச்சி யூவின் தலை மண்ணில் உருண்டது. அப்போது வானிலே பொன்னிற ஒளி வட்டம் தோன்றி, ஹுவாங் தி மீது பாய்ந்தது. மஞ்சள் நிறத்தில் அவன் தகத்தகவென ஜொலித்தான். அதைக் கண்டு ஆச்சரியப்பட்ட பழங்குடிகள் அனைவரும் 'இவன் சாதாரண மனிதனல்ல, சொர்க்கத்தின் புதல்வன்' என்று வியந்தனர். எல்லாப் பழங்குடிகளின் கூட்டுத்தலைவனாக அவனை ஆக்கினார்கள்.