• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-08 09:22:16    
சொர்க்கத்தின் புதல்வன்

cri
அன்றில் இருந்து ஹுவாங் தியை சொர்க்கத்தின் புதல்வன் என்றே அழைத்தனர். எல்லா மக்களும் சொர்க்கத்துக்கும், பூமிக்கும் கடவுள்களுக்கும், ஆவிகளுக்கும் படையலிட வேண்டும் என்று அவன் கட்டளையிட்டான். மக்களை எல்லாம் ஒன்று திரட்டி விவசாய உற்பத்தியைப் பெருக்கினான். பண்பட்ட வாழ்க்கை வாழ வழிகாட்டினான். அவன் காலத்தில் கலாச்சாரம் செழித்தோங்கியது.

சீனாவின் முதலாவது நாள்காட்டியை உருவாக்கினான். அது இன்றைக்கும் ஹுவாங் காலண்டர் என்றே அழைக்கப்படுகிறது. அக்காலத்தில் வாழ்ந்த புகழ் பெற்ற ச்சி போ என்னும் அறிஞரின் துணையுடன் சீன மருத்துவ முறையைத் தோற்றுவித்தான். ச்சி போ எழுதிய நூலுக்கு மஞ்சள் பேரரசரின் பாரம்பரிய அகமருத்துவம் என்று தலைப்பிடப்பட்டது.

மன்னனின் மாண்புகள் இப்படி என்றால், பட்டத்து ராணி சும்மா இருப்பாளா? அவள் துணிகளுக்குத் தோய்ப்பதற்கென பல்வேறு சாயங்களை கண்டிபிடித்தாள். பட்டுப்புழு வளர்ப்பு பற்றி மக்களுக்குக் கற்றுக்கொடுத்தாள். ஹுவாங் தியின் அரசவை ஆசான் காங் ஜியே (Cang Jie) எழுத்து முறை ஒன்றை உருவாக்கினார். பல்வேறு இசைக் கருவிகளை அரசவைக் கலைஞர் கண்டுபிடித்தார். பற்பல புதிய கண்டுபிடிப்புக்களில் மக்கள் ஈடுபட மன்னன் ஹு வாங் தி தூண்டுதலாக இருந்தான். நாடோடி வாழ்க்கை நடத்திய அவர்கள் வீடுகளைக் கட்டினார்கள். நதியைக் கடக்க படகுகளை உருவாக்கினார்கள். வெண்கலத்தால் ஆயுதங்களைத் தயாரித்தனர். இந்த ஆக்கங்களின் விளைவாக மஞ்சள் நதிப்பள்ளத்தாக்கு சீனப் பண்பாட்டின் தொட்டிலாகவும், பண்டைய மனிதகுல நாகரிகத்தின் மையமாகவும் மாறியது.

மஞ்சள் நதிப் பள்ளத்தாக்கில் குடியமர்ந்த பழங்குடிகள் தங்களை ஹுவா இனத்தவர்கள் என்று அழைத்துக்கொண்டனர். 'ச்சோங் ஹுவா மின் சு' என்னும் சீன தேசம் இவ்வாறாக உருவெடுத்தது. ஹு வாங் தி நூறாண்டுகள் வாழ்ந்தான் என்றும், அவனுடைய நூறாவது பிறந்த நாளன்று சொர்க்கத்தில் இருந்து இறங்கிய ஒரு தெய்வீக டிராகன் மீதேறி, ஹு வாங் தி தான் தோன்றிய சொர்க்கத்திற்கே திரும்பிச் சென்றான் என்று புராணம் கூறுகிறது. அவன் நினைவாக, பிற்காலத்தில் பண்டைய சீனாவின் தலைநகரான சியானில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான சமாதிக்கு ஹுவாங் தி சமாதி எனப் பெயரிடப்பட்டது. அது இன்றைக்கும் உலக அதிசயங்களில் ஒன்றாக சீன தேசத்தின் பாரம்பரியப் பெருமையைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது.