
மாவ் நன் இன மங்கை
மாவ் நன் இனம், சீனாவில் மக்கள் தொகை குறைவான தேசிய இனங்களில் ஒன்றாகும். 60 ஆயிரத்துக்கும் அதிகமான இவ்வினத்தவர்கள், முக்கியமாக, தென் சீனாவின் குவாங் சி சுவாங் இன தன்னாட்சிப் பிரதேசத்தின் மாவ் நன் இன தன்னாட்சி மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் வாழ்கின்றனர். அங்கு தனிநபர் சராசரி விளை நிலம் மிகக் குறைவு. மாவ் நன் இனத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில், மாவ் நன் இனத்தின் வளர்ச்சியில் நிலவும் பிரச்சினைகள் குறித்து தாம் கவலைப்படுவதாக, இம்மாவட்டத்தின் தலைவர் ஜிங் க் சியாங் எடுத்துக்கூறினார். அவர் கூறியதாவது:
"ஒன்று. அடிப்படை வசதி ஒப்பீட்டளவில் பலவீனமாக உள்ளது. குறிப்பாக, மலைப்பிரதேசத்தில் மக்களின் குடிநீர் பற்றாக்குறை. இரண்டு. போக்குவரத்து வசதியாயில்லை. கிராமத்திலிருந்து வெளியேறுவதற்கு மூன்று ஐந்து மணிநேரம் தேவை." என்றார், அவர்.

மாவ் நன் இனத்தவர்கள்
தற்போது, சீனாவில் மாவ் நன் இனம் போன்று, ஒதுக்குப்புற மலைப்பிரதேசத்தில், இயற்கை நிலைமை மோசமான இடங்களில் ஒரு லட்சத்துக்கு கீழ்ப்பட்ட எண்ணிக்கையிலான சிறுபான்மை தேசிய இனங்கள் சீனாவில் உள்ளன. வழக்கமாக, மக்கள் தொகை குறைவான தேசிய இனம் என அவர்கள் அழைக்கப்படுகின்றனர். அவற்றின் மொத்த மக்கள் தொகை, சுமார் 6 லட்சத்து 30 ஆயிரமாகும். மாவட்டத் தலைவர் ஜிங் கவலைப்படுவது போலவே, அவர்கள் பொதுப் பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். அதாவது, மோசமான உற்பத்தி மற்றும் வாழ்க்கை வசதிகள், கடுமையான வறுமை, பின்தங்கிய பொருளாதார வளர்ச்சி ஆகியவை இப்பிரச்சினைகளாகும்.
சீனாவின் பெருமளவிலான மக்கள் தொகையில், இந்த 22 சிறுபான்மை தேசிய இனங்களின் விகிதம் மிகமிகக் குறைவு என்ற போதிலும், அரசு அவற்றுக்கு மேலும் அதிகமான ஆதரவும் சலுகையும் வழங்கியிருக்கின்றது. 2004ம் ஆண்டு, ஷாங்காயில் வறுமை ஒழிப்பு பற்றிய உலக மாநாட்டில், சீனத் தலைமை அமைச்சர் வெங் சியாங் பாவ் உரையாற்றுகையில், "மக்கள் தொகை குறைவான 22 சிறுபான்மை தேசிய இனங்கள் வாழும் பிரதேசங்கள் வறுமையில் இருந்து விடுபடுவதற்காக, அங்கு, வறுமை ஒழிப்புத் திட்டத்தைச் செயல்படுத்த முன்னுரிமை வழங்கி பாடுபடுவோம்" என்று வாக்குறுதி அளித்தார். ஆகஸ்ட் திங்களின் இறுதியில், குறைவான மக்கள் தொகையுடைய தேசிய இனத்து வளர்ச்சிக்கு ஆதரவான திட்டத்தை அரசவை பரிசீலித்து அங்கீகரித்தது. 2005 முதல் 2010 வரையான ஐந்தாண்டுகளுக்குள், இந்த 22 சிறுபான்மை தேசிய இனங்களின் வளர்ச்சிக்கு உதவியாக பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என இத்திட்டம் வகுக்கின்றது.
|