அவனுடைய சிறு இதயம் வேகமாகத் துடிக்கத் தொடங்கியது. நெஞ்சை அழுத்திப்பிடித்தபடியே திரும்பவும் இருமத் தொடங்கினான்.
"நல்லாத் தூங்கு மகனே, எல்லாம் சரியாயிடும். நீ குணமாயிடுவே" என்று அம்மா சொன்னாள்.
அம்மாவின் பேச்சுக்குப் பணிந்து சின்ன சுவான் இருமியபடியே தூங்கத் தொடங்கினான். அவன் சீராக மூச்சு விடும்வரை காத்திருந்த கிழவி, கிழிந்து கந்தலாகிப் போன போர்வையை அவன் மீது போர்த்தினாள்.
கடையில் கூட்டம் நிரம்பியது. ஒருவர் பின் ஒருவராக வந்து போய்க் கொண்டிருந்த வாடிக்கையாளர்களுக்கு, பெரிய செப்புக் கெட்டிலில் மும்முரமாகத் தேனீர் தயாரித்துக் கொண்டிருந்தான் சுவான் கிழவன். அவனுடைய கண்களின் கீழே கருவளையங்கள்.
"உடம்புக்குச் சுகமில்லையா. பெரிய சுவான்? என்ன ஆச்சு உனக்கு?" என்று வினவினான் ஒரு நரைத்த தாடிக்காரன்.
"ஒண்ணுமில்லே."
"ஒண்ணுமில்லையா? நீ சிரிக்கிறதைப் பார்த்தா ஒண்ணுமில்லேன்னுதான்..." கிழவன் தன்னைத் தானே திருத்திக் கொண்டான்.
"ஒண்ணுமில்லே. பெரிய சுவானுக்கு வேலை நிறைய," என்று கூனன் சொன்னான். "இவனோட மகன் மட்டும்..." அவன் சொல்லி முடிப்பதற்குள், தடியான ஒரு மனிதன் திடுதிடுவென உள்ளே நுழைந்தான். கரும் பழுப்புநிறச் சட்டை பித்தான் போடப்படாமல் அவனுடைய தோளில் இருந்து தொங்கிக் கொண்டிருந்தது. இடுப்பைச் சுற்றி அதை முடிச்சாகப் போட்டிருந்தான். உள்ளே நுழைந்ததுமே, பெரிய சுவானைப் பார்த்து கத்தினான்.
"என்ன சாப்பிட்டானா? ஏதாவது குணம் தெரியுமா? உன்னோட நல்ல காலம் பெரிய சுவான். என்ன நல்ல காலம் போ. எனக்கு மட்டும் உடனே தெரியாமல் போயிருந்தா."
கெட்டிலை ஒருகையில் பிடித்தபடியே, இன்னொரு கையை மரியாதையாக நீட்டியவாறு, புன்னகையுடன் கேட்டுக் கொண்டிருந்தான் பெரிய சுவான். அங்கே இருந்த எல்லோருமே அந்த ஆள் பேசுவதை மரியாதையுடன் கேட்டுக் கொண்டிருந்தனர். புன்னகைத்தபடியே கிழவியும் வெளியே வந்தாள். அவளுடைய கண்களிலும் கருவளையம் இட்டிருந்தது. கிண்ணத்திலே தேயிலைகளையும், கூடவே ஆலில் இலையையும் போட்டு எடுத்து வந்தாள். புது ஆளுக்காக அந்தக் கிண்ணத்தில் கொதிநீரை ஊற்றினான் பெரிய சுவான்.
"இந்தாபாரு. இதுல நிச்சயம் குணமாகும். இது மத்த விஷயங்களைப் போல இல்லே" என்று கூறிய தடியான ஆள். "கொஞ்சம் நினைச்சுப் பாரு. சூடா எடுத்துட்டு வந்து. சூடா தின்னு."
"நிஜம்தான். காங் மாமா உதவி இல்லாம இது எங்களுக்கு கிடைச்சிருக்காது." கிழவன் மிகவும் அன்போடு நன்றி சொன்னாள்.
"நிச்சயமா குணமாகும் பாரு. இது போல சூடா. மனித ரத்தத்துல முக்கி எடுத்த ரொட்டியைத் தின்னா எந்தக் காசநோயும் ஓடிப் போயிடும் இல்லே."
|