இந்திய சீன நட்புறவு ஆண்டுக்கான கட்டுரை போட்டிக்கு திருச்சி அண்ணா நகர் வி.தி.இரவிச்சந்திரன் எழுதிய கட்டுரை இதோ
முன்னுரை
இந்தியாவும் சீனாவும் தூதாண்மை உறவு கொண்டு பொன் விழா கண்ட நாடுகள். வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட இவ்விரு நாடுகளும் அந்நிய ஆதிக்கம் எனும் கொடிய பிடியிலிருந்து போராடி வெற்றிக் கண்ட நாடுகள். நவசீனா நிறுவப்பட்டதும் உறவு கரம் நீட்டிய அண்டை நாடுகளில் இந்தியா முதன்மை பெறுகின்றது. வணிக தொடர்பும் புத்தமதமும் இவ்விரு நாடுகளை பழங்காலம் தொட்டே இணைத்து வந்துள்ளன. சமாதான சகவாழ்வுக்கான ஐந்து கோட்பாடுகளைக் கொண்ட பஞ்ச சீலக் கொள்கையை உலகுக்கு தந்த பெருமை இந்தியாவிற்கும் சீனாவிற்கும் உண்டு. பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற நிலையில் மாணவர்களின் வருகை அதிகரித்துள்ளது. இந்தி, தமிழ் மொழிகளைப் பயில சீன மாணவர்கள் இந்தியாவிர்கும், சீன மொழி, அக்குப் பஞ்சர், ஓவியக் கலை பயில இந்திய மாணவர்கள் சீனாவிற்கும் செல்வதும் அதிகரித்துள்ளது. இவ்வாறு சிறப்பு கொண்ட இரு நாடுகளின் உறவுகள் வளர நாம் என்ன செய்யலாம்?
என்ன செய்யலாம்?
வர்த்தக துறை....வர்த்தகத் துறை இரு நாட்டு உறவுகளை வளர்ப்பதில் இத்துறைக்கு முக்கிய பங்கு உண்டு. சீனா உலக வர்த்தகத்தில் இணைத்துக் கொள்வதற்கு முந்திக் கொண்டு மகிழ்ச்சியுடன் கையெழுத்திட்ட நாடு இந்தியா. சீன துணிகள், ஆயத்த ஆடைகள், பின்னலாடைகள், உள்ளாடைகள் போன்றவை உலகின் பல நாடுகளில் சந்தையை பிடித்து வருகின்றன. இந்தியாவிற்குள்ளும் வந்து விட்டது. இதன் வளர்ச்சியை மேலும் அறிய சீனாவிற்கு தமிழகத்தின் திருப்பூர் துணி ஆலை முதலாளிகள் சீனாவிற்குச் சென்று பின்னலாடை தொழில்கள், ஆயத்த ஆடைகள் உற்பத்தி பற்றியும் நாட்டின் வளம், அங்குள்ள வசதிகள் பற்றியும் அறிந்து வர செல்கின்றனர்.
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் பல ஒற்றுமைகள் உள்ளன. பரந்த உள் நாட்டு வணிக தொழிலாளர்களின் ஒப்பிடக் கூடிய ஊதியம், கடன் சுமை போன்றவை உதாரணமாகும். எனவே வளர்ந்து வரும் நாடுகள் இவை இரண்டும் இந்த விடயத்தில் பரிமாற்றம் செய்து கொண்டு தொடர்வது இரு நாட்டு நட்புறவும் பொருளாதாரமும் அசைய முடியா பலம் கொண்டு மென்மேலும் வளரும்.
நாம் என்ன செய்ய வேண்டும்?
இரு நாடுகளுமே தங்களது பலத்தின் மூலம் பரஸ்பரம் ஆதாயமடைகின்றன. சீனாவிற்கான இந்தியாவின் ஏற்றுமதிகள் ஆண்டிற்கு 30 விழுக்காடு முதல் 40 விழுக்காடு அதிகரித்துள்ளது. இதனால் இருதரப்பும் சிறப்பாக செயல்படுகின்றன. இந்தியா அறிவு சார் சொத்துக்கள் பக்கம் திரும்புகின்றது. மென் பொருள் நிறுவனங்கள் அதிவேகமாக சந்தை பங்கை பெறுகின்றன. குறுகிய கால நோக்கில் இந்தியா அறிவு சார் சொத்து சம்மந்தமான ஏற்றுமதியில் கவனம் செலுத்துகின்றது. சீனா முதலீடு சார்ந்த ஏற்றுமதியல் கவனம் செலுத்துகின்றது. இது இரு நாடுகளையும் அவர்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியுமோ அவ்வளவு சிறப்பாக செயல்பட வைக்கும். இது பொருளாதார வளர்ச்சிக்கும் உலக பொருளாதார வளர்ச்சிக்கும் நல்லது. இதனை வைத்துக் கொண்டு என்ன செய்யலாம் என்ற நோக்கில் இரு நாட்டு தலைவர்கள், பிரதிநிதிகள், தொழில் துறை வல்லுனர்கள், இரு நாடுகளுக்கும் பரஸ்பரம் வருகை மேற்கொண்டுள்ளனர். இது போன்ற பரிமாற்றங்கள் இரு நாட்டின் நட்புறவை மேலும் ஆழமாக்கும்.
சீனாவுக்கு தொழிலே மூச்சு. உலகிலேயே மிகப் பெரிய புதிய நிறுவனம் என்றால் அது சீனா தான். மாறிவிட்ட மிகப் பெரிய நாடு. எவ்வளவு வேகமாக அவர்கள் முன்னேற முடியுமோ அவ்வளவு வேகமாக அவர்கள் முன்னேறி வருகின்றனர். சீனா மாறிய நாடு. ஏனெனில் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் மன்னர் ஆட்சி வரலாறு கண்டது. வர்த்தகப் பாரம்பரியம் உடையது. சிறந்த கல்வியை போதிக்கின்றது. சீனாவிடமிருந்து இந்தியா கற்றுக் கொள்ள வேண்டிய சில விடயங்கள் உண்டு. அதில் ஒன்று உள் கட்டமைப்பு. இந்த விடயத்தில் சீனா செய்திருப்பவை நம்மை தலைச்சுற்ற வைக்கும். சாலைகள், துறைமுகங்கள், விமானநிலையங்கள், உலகதின் மிகச் சிறந்த தொலை தொடர்பு அமைப்பு என பட்டியல் நீண்டு வருகின்றது. இந்தியா இவ்விடயத்திலும் சீனாவை பின்பற்றுவது நலம். சீனா இந்தியாவின் மென் பொருள் வளர்ச்சிக் குறித்து அறிய ஆவல் கொண்டு. சீனா அதிபர் அன்மையில் இந்தியாவின் பெங்களுர் நகருக்கு வருகை தந்துள்ளார். எனவே நமது இரு நாடுகளும் இது போன்ற விடயங்களில் பரிமாற்றம் செய்வதும் முக்கிய கடமையாகும். நாம் செய்ய வேண்டிய முதன்மையும் ஆகும். இதனால் இரு நாட்டு நட்புறவு மேலும் ஆழமாக வேரூன்றும்.
முடிவுரை.
சீனாவும் இந்தியாவும் பண்பாடு, கலாச்சாரம் மிக்க பாராம்பரிய நாடுகள். அதிவேகமாக தற்போது முன்னேறி வருகின்றன. மேற்கூறிய விடயங்களில் இவை இரண்டும் ஒன்றுக் கொன்று பரிமாற்றம் செய்து கொண்டு செயல்பட்டால் இரு நாடுகளும் அவரவர் பலத்தில் பரஸ்பர ஆதாயம் பெறலாம். இது நம் இரு நாட்டு உறவுகளை வளர்க்க வழி வகுக்கும்.
|