
ஆகஸ்ட் 15 முதல் 20ம் நாள் வரை சீனத் தலைநகர் பெய்சிங்கில் நடைபெறவுள்ள 11வது உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் கலந்துகொள்ள 79 பேர் கொண்ட குழுவை சீனா அறிவித்துள்ளது. 39 தடகள வீரர்களும் 40 தடகள வீராங்கனைகளும் கொண்ட இந்தக் குழுவில் கடந்த ஆண்டில் நடைபெற்ற உலக இளைஞர் தடகள போட்டிகளில் தங்கம் வென்ற 5 பேரும் அடக்கம். மொரோக்கோ நாட்டில் மாராகேஷில் நடைபெற்ற கடந்த ஆண்டு நடைபெற்ற உலக இளைஞர் தடகள போட்டிகளில் பெண்கள் உயரம் தாண்டும் போட்டியில் கு பிவெய் தங்கம் வென்றார். இவரைப்போலவே ட்ரிப்பில் ஜம்ப் எனும் ஒரு வகை நீளம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற ஷா லீ, ஈட்டியெறிதலில் தங்கம் வென்ற ஷாங் லீ, ஆண்கள் உயரம் தாண்டும் போட்டியில் தங்கம் வென்ற ஹுவாங் கெய்சியாங், கழிதாண்டும் போட்டியில் தங்கம் வென்ற யாங் யான்ஷெங் ஆகியோர் தங்களது விளையாட்டில் தற்போதைய 11வது உலக இளநிலை தடகள சாம்பியன் ஆவதற்கு முயற்சிப்பார்கள்.உலக ஜூனியர் அல்லது உலக இளநிலை தடகள சாம்பியன் போட்டிகளுக்கும், உலக இளைஞர் தடகள போட்டிகளுக்கும் முக்கிய ஒரு வித்தியாசம் உண்டு.

உலக இளைஞர் தடகள போட்டிகளில், போட்டி நடைபெறும் ஆண்டில் 17 வயதுக்கு உட்பட்டவராக உள்ளவர்கள் மட்டுமே போட்டியிடமுடியும். ஆனால் உலக இளநிலை அல்லது ஜூனியர் தடகள போட்டிகளில் வயது உச்சநிலை 20 வயதாகும். ஆக தற்போது நடைபெறவுள்ள 11வது உலக இளநிலை தடகள போட்டிகளில் உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 20 வயதுகுட்பட்ட தடகள விளையாட்டு வீரர்களும் வீராங்கனைகளும் கலந்துகொள்வார்கள்.
இரண்டாவது சர்வதேச யுத்தக் கலை விளையாட்டு போட்டிகள்

வருகின்ற 22ம் நாள் முதல் 29ம் நாள் வரை வடகொரியாவின் பியோங்யாங் நகரில் சர்வதேச யுத்தக் கலை விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. மார்ஷியல் ஆர்ட்ஸ் எனப்படும் யுத்தக் கலை விளையாட்டுகள் சர்வதேச அளவில் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பியோங்யாங்கில் நடைபெற்றது. தற்போது நடைபெறவுள்ள போட்டிகள் 2வது சர்வதேச யுத்தக் கலை விளையாட்டு போட்டிகளாகும். சீனா, ரஷ்யா, இந்தியா, ஈரான், க்ரீஸ் உட்பட குறைந்தது 40 நாடுகள் மற்ரும் பிரதேசங்களைச் சேர்ந்த 600 பேர் இவ்வாண்டு நடைபெறும் 2வது சர்வதேச யுத்தக் கலை விளையாட்டு போட்டிகளில் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டேய்க்வான்டோ, வூஷூ, கராத்தே, மல்யுத்தம் உள்ளிட்ட பல யுத்தக் கலை விளையாட்டுகள் இப்போட்டிகளில் இடம்பெறும்.
|