• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-15 19:52:53    
ஓட்டின் மேல் எழுத்து

cri

1899ஆம் ஆண்டில் ஒரு நாள். பெய்ச்சிங் நகரில் இருந்த வாங் யிரோங் என்ற தொல்லியல் அறிஞர் திடீரென நோய்வாய்ப்பட்டார். அவருக்குச் சிகிச்சையளித்த சீனப் பாரம்பரிய மருத்துவர் கொடுத்த மருந்துகளில் 'டிராகன் எலும்பு' என்பதும் ஒன்று. அது பண்டைய விலங்குகளின் எலும்புகள் மற்றும் ஓடுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட ஒரு மருந்து. அந்த எலும்புகளை உற்று நோக்கிய தொல்லியல் அறிஞரின் பார்வையில், ஏதோ விசித்திரமான வடிவங்கள் தென்பட்டன. அதைக் கண்டு வியப்படைந்த அவர், "வெகு காலத்திற்கு முன்பே நிலத்துக்கு அடியில் புதைக்கப்பட்டு விட்ட இந்த எலும்புகளில் இத்தகைய வடிவங்கள் எப்படித் தோன்றியிருக்க முடியும்? இதற்கு என்ன பொருள்?" என்று சிந்திக்கத் தொடங்கினார். மருந்துகளை விற்கும் கடையில் போய் விசாரித்தார். அந்த எலும்புகள் ஹென்னான் நகரில் வாங்கப்பட்டன என்று மருந்துக் கடைக்காரர் சொன்னதும், அறிஞர் வாங் யிரோங், எலும்புகளை விற்கும் வணிகரைத் தேடி ஹென்னான் நகருக்குச் சென்றார். அங்கே அவரிடம் இருந்த வடிவங்களும், உருவங்களும் பொறிக்கப்பட்ட எல்லா எலும்புகளையும் கூடுகளையும் நிறையப்பணம் கொடுத்து வாங்கினார். அவற்றை உற்று நோக்கி, முழுமையாக ஆராய்ந்த போது, அவை பண்டைய சீன எழுத்துக்களின் வடிவம் என்ற முடிவுக்கு வந்தார்.

இந்தக் கண்டுபிடிப்பு பல அறிஞர்களின் ஆர்வத்தைத் தூண்டியது. கி.மு. 1600 முதல் 1100 வரை ஷங் வமிச ஆட்சியில், ஹென்னான் மாநிலத்தின் ச்சியாவ்துன் என்னும் கிராமம் தலைநகராக இருந்தது. அந்தக் கிராமத்தில் ஏராளமான எலும்புகளும் ஓடுகளும் கிடைத்தன. சீன மூதாதையர்கள் ஆமைகளின் ஓடுகளின் மீதும், ஆடு, மாடு மற்றும் மான்களின் எலும்புகளிலும் எழுதி வைத்திருந்தனர். அதன் அடிப்படையிலேயே, ஏதாவது நிச்சயமாகச் சொல்ல வேண்டுமானால், "ஆமை ஓடு மற்றும் எலும்புகளின் மீதான எழுத்து" என்ற பழமொழி உருவெடுத்தது. போலி வாக்குறுதிகளை நாம் 'நீர் மேல் எழுத்து' என்று வர்ணிப்பதில்லையா?

சரி, எலும்புகளிலும், ஆமை ஓட்டின் மீதும் எழுதப்படும் வழக்கம் எவ்வாறு வந்தது? அந்தக் காலச் சீனர்கள் மூட நம்பிக்கை மிகுந்தவர்களாக இருந்தனர். வாழ்க்கையில் எல்லாமே சொர்க்கக் கடவுள் விதித்தபடியே நடக்கும் என்று நம்பினார்கள். ஆகவே, எந்த ஒரு காரியத்தையும் செய்வதற்கு முன்னால் குறி கேட்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தனர். போரில் வெற்றி கிடைக்குமா, தோல்வி ஏற்படுமா என்று தெரிந்து கொள்ளவும், வேட்டைக்குப் போனால் பயனுண்டா? வானிலை எப்படி இருக்கும்? வாழ்க்கையில் நல்லது நடக்குமா? என்றெல்லாம் அறிந்து கொள்ளவும் தெய்வங்களிடமும், ஆவிகளிடமும் குறிகேட்டனர். தமிழ் நாட்டில் பூக்கட்டிப் பார்ப்பது போலவும், சோழிகளை உருட்டிப் பார்ப்பது போலவும், எதுவும் இல்லா விட்டால் இரண்டு விரல்களை நீட்டி எதையாவது ஒன்றைத் தொடு என்று கேட்டுத் தெளிவு பெறுவது போலவும், சீனர்களும் ஆருடம் கணிப்பதிலும், அறிகுறி காட்டும்படி கடவுளிடம் கேட்பதிலும் மூடத்தனமான நம்பிக்கை கொண்டிருந்தனர். ஆனால் குறிபார்ப்பதற்கு அவர்கள் பின்பற்றிய முறை சற்றே விசித்திரமானதாகவும், வேடிக்கையாகவும் இருந்தது.

ஆமை ஓடு ஒன்றை எடுத்து, அதைத் தேய்த்துத் தேய்த்துப் பளபளப்பாக்கி, அதில் ஒரு சிறு துளை போடுவார்கள். அல்லது அதை லேசாக நெளிப்பார்கள். பிறகு அதன் மீது நெருப்பை வைப்பார்கள். வெப்பத்தினால் ஆமை ஓட்டின. துளையைச் சுற்றிலும் கீறல்கள் விழும் அல்லது நெளிக்கப்பட்ட பகுதியில் புடைப்பு ஏற்படும். இந்தக் கீறல்களும், புடைப்பும் எந்த வடிவில் இருக்கின்றன என்பதை பொறுத்து குறி சொன்னார்கள். அவர்கள் சொல்லும் குறி, நாம் ஜாதகம் எழுதுவதைப் போல, ஆமை ஓடுகளின் மீதும், எலும்புகளிலும் பொறிக்கப்பட்டன. இந்தக் குறி வடிவங்களே சீன எழுத்துக்களின் தோற்றம் என்று கருதப்படுகிறது.