• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-08-16 07:55:43    
மருந்து 6

cri
"உனக்குத் தெரியாது. அவனை உஷார்படுத்தறதுக்கு செங்கண்ணன் போனான். ஆனா அவனோட உட்கார்ந்து பேச ஆரம்பிச்சுட்டான். மகா மஞ்சுப் பேரரசு நம்மளோடதுன்னு சொன்னானாம். இதுல ஏதாவது அர்த்தம் இருக்க சொல்லுங்க. செங்கண்ணனுக்குத் தெரியும். வீட்டுல அவனோட அம்மா மட்டும்தான் இருக்காங்க. ஆனா அவன் இவ்வளவு ஏழையா இருப்பான்னு நெனச்சி கூடப் பார்த்தது இல்லே. அவன் கிட்டே இருந்து எதையும் கறக்க முடியலே. எக்கேடும் கெட்டுப் பேர்ன்னு ரெண்டு அடி கொடுத்துட்டு வந்துட்டான்."

"செங்கண்ணன் நல்ல குத்துச் சண்டை வீரனாச்சே. அடி பலமாவே விழுந்துருக்கும்" சுவரோரமாகச் சாய்ந்து உட்கார்ந்திருந்த கூனன் சொன்னான்.

"அந்தப் போக்கிரிக்கு அடிப்பாங்களேன்னு பயமே இல்லே. அடி வாங்கிக்கிட்டு அய்யோ பாவம்னு வருத்தப்பட்டானாம்."

"அவனைப் போல போக்கிரியை அடிச்சதுக்கு வருத்தப்படவே வேணாம்" என்றான் நரைத்தாடிக் கிழவன்.

"உனக்கு ஒண்ணுமே புரியலே" என்று வெறுப்போடு கூறிய காங். "அவன் தன்னை அடிச்ச செங்கண்ணனுக்காக வருத்தப்பட்டானாம்" என்றான்.

அவனுடைய பேச்சைக் கேட்டவர்கள் எல்லாம் திகைத்துப் போய் நின்றனர். யாரும் பேசவில்லை. சின்னச் சுவான் அரிசிக் கஞ்சியைக் குடித்து, பருக்கைகளை தின்று முடித்தான். வியர்த்துக் கொட்டியது. தலை கனத்தது.

திடீரென ஏதோ வெளிச்சத்தைக் கண்டது போல நரைத்தாடிக் கிழவன் பேசத் தொடங்கினான். "செங்கண்ணனுக்காக வருத்தப்படறானா? கிறுக்குத்தனமில்லே இது."

"சுத்த கிறுக்குத் தனம்," எதிரொலித்தான் இருபது வயசு இளைஞன்.

திரும்பவும் வாடிக்கையாளர்கள் காரகாரமாகப் பேசத் தொடங்கினார்கள். வாதம் வலுத்தது. அந்தக் கூச்சலுக்கு இடையில், சின்ன சுவான் அடுக்கடுக்காக இருமத் தொடங்கினான். காங் அவனருகில் போய், "நிச்சயமாகக் குணமாகும் அப்படி இருமாதே, சின்ன சுவான். நிச்சயமாக் குணமாகும்!"

"கிறுக்குத் தனம்" என்று முணுமுணுத்தான் கூனன் தலையை ஆட்டியபடியே.

மேற்கு வாசலுக்கு வெளியே நகரின் சுற்றுச்சுவரை ஒட்டினாற்போல் இருந்த நிலம் பொதுநில மாகத்தான் இருந்தது. குறுக்கு வழிக்காக ஆட்கள் நடந்து நடந்து உருவான குறுக்கும் நெடுக்குமான பாதை எல்லைக்கோடு போலாகிவிட்டது. அந்தப் பாதைக்கு இடது புறத்தில் மரணதண்டனை நிறைவேற்றப்பட்ட கிரிமினல்கள் அல்லது சிறையில் அலட்சியப்படுத்தப்பட்டு உயிரிழந்த கைதிகள் புதைக்கப்பட்டிருந்தனர். வலது புறத்தில் ஏழை எளிய மக்களின் இடுகாடு இருந்தது. இருபுறமும் வரிசையாகப் புதை குழிகளின் மண்மேடு எழுந்து நின்று, பணக்காரனின் பிறந்த நாளுக்கு அணிவகுப்பு மரியாதை செலுத்துவது போல் இருந்தது.

அந்த ஆண்டின் சிங்மிங் பண்டிகையின் போது, அசாதாரணமான குளிர். வில்லோ மரங்களில் சிறுசிறு தானியமணிகள் போல் குருத்துக்கள் முளைவிட்டிருந்தன. பொழுது விடிந்ததுமே பெரிய சுவானின் மனைவி நான்கு வகை உணவுப் பண்டங்களை சமைத்து, ஒரு கிண்ணம் சாதத்தையும் எடுத்துக் கொண்டு, வலதுபுறத்தில் புதிதாகத் தோன்றிய புதை குழிக்கு முன்னால் படைத்துவிட்டு, ஒப்பாரி வைத்தாள். காகிதப்பணத்தை எரித்துவிட்டு, எதையோ எதிர்பார்த்துக் காத்திருப்பது போல பிரம்மைபிடித்தாற்போல் உட்கார்ந்திருந்தாள். எதை எதிர்பார்க்கிறாள்? அவளுக்கே தெரியவில்லை. மெல்லிய தென்றல் வீசி, அவளுடைய குட்டைத் தலைமுடிகளை கலைத்தது. அந்தத் தலைமுடி, முந்தைய ஆண்டில் இருந்ததை விட மேலும் நரைத்திருந்தது.