க்ளீட்டஸ்: நிகழ்ச்சியின் முதல் கடிதம் சென்னிமலை நேயர் த. வடிவேல் எழுதியது. பள்ளி ஆசிரியராக பணிபுரியும் இவர் சீன வானொலி நிகழ்ச்சிகளை தான் கேட்பதோடு தனது மாணவர்களிடமும் அறிமுகபடுத்தி அவர்களையும் கேட்கும்படி கூறுவதாக குறிப்பிட்டுள்ளார். சீன வானொலியின் நிகழ்ச்சிகளில் சீனப் பண்பாடு, அறிவியல் உலகம், சீன உணவு அரங்கம், சீன தேசிய இனக்குடும்பம் ஆகிய நிகழ்ச்சிகளை விரும்பி கேட்பதாகவும், சீனாவைப் பற்றி கூடுதலான தகவல்களை இவை மூலம் அறிய முடிகிறது என்றும் எழுதியுள்ளார்.
வாணி: அடுத்து திருச்சி காஜாமலை நேயர் ஜி.பிரபாகரன் எழுதிய மார்ச் 29ம் நாள் இடம்பெற்ற நிகழ்ச்சி குறித்து எழுதிய கடிதம். நேயர் திரு. நாச்சிமுத்துவோடு தமிழ்பிரிவுத் தலைவர் உரையாடியதைக் கேட்டேன். கடிதங்களில் சொந்தமாக கருத்துக்களை எழுதவேண்டும் என்பதே எனது கருத்தும், நிகழ்ச்சியில் வழங்கியவற்றை அப்படியே கடிதத்தில் எழுதினால் ஆண்டுக்கு 1800 கடிதங்கள் கூட எழுதலாம். மேலும் சீனாவின் இடங்கள் மற்றும் பெயர்களை ஓரளவுக்கு அப்படியே எழுதவேண்டும் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. ஒரு சிறந்த நேயர் கூறிய கருத்துக்கள் புதிய நேயர்களுக்கு பயனுள்ளதாக அமையும் என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து ராசிபுரம் எஸ். சுப்பு மணிகண்டன் எழுதிய கடிதம். மே 18ம் நாள் ஒலிபரப்பான சீன இசை நிகழ்ச்சியில் ஒலித்த சீன பாடல்கள் என்னைக் கவர்ந்தன. மீனா அவர்கள் சிறப்பான இசை நிகழ்ச்சியை வழங்கினார். மேலும் அன்றைய நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியில் தண்ணீர் குடிப்பதன் அவசியம் பற்றி விளக்கமாக எடுத்துக் கூறப்பட்டது. நீரின்றி உலகம் இயங்காது என்பதை உணர்த்தும் வகையிலும், நீரின் மகத்துவத்தை விளக்குவதாகவும் நிகழ்ச்சி அமைந்தது என்று எழுதியுள்ளார்.
வாணி: அடுத்து சேந்தமங்கலம் நேயர் கே. சுந்தரம் மே 19ம் நாள் ஒலிபரப்பான உங்கள் குரல் நிகழ்ச்சி குறித்து எழுதிய கடிதம். உங்கள் குரல் நிகழ்ச்சியில் இலங்கை நேயர்களின் குரல் முதன் முறையாக இடம் பெற்றது. காத்தான்குடி நேயர்களின் குரல் கேட்டோம். தமிழின் மணம் கமழும் உச்சரிப்பை கேட்டு மகிழ்ந்தோம். இவர்கள் மன்றம் மேலும் வளர்ச்சியடைய வாழ்த்துக்கள் என்றூ எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து இலங்கை காத்தான்குடி நேயர் மு.மு.மபாஸ் எழுதிய கடிதம். மே 22ம் நாளன்று ஒலிபரப்பான செய்தித் தொகுப்பில் விரைவாக வளர்ந்துவரும் சீன திபெத்தியல் ஆய்வு பற்றிக் கேட்டேன். திபெத்தியல் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர்களை பற்றி அறிந்துகொண்டேன். அதேபோல் ஈராக்கின் புதிய அரசு எதிர்நோக்கிய சவால்கள் என்ற செய்தித் தொகுப்பு மிகவும் அருமையாக இருந்தது என்று எழுதியுள்ளார்.
வாணி: அடுத்து புதுவை பாகூர் வானவில் ஆனந்த் மே 23ம் நாள் பெய்சிங் பல்கலைக் கழகத்தில் அன்னான் முக்கிய உரை என்ற செய்தித் தொகுப்பு குறித்து எழுதிய கடிதம். அண்டை நாடுகளுடன் ஆக்கபூர்வ ஒத்துழைப்பு, வறுமை ஒழிப்பு மற்றும் தலைமை தாங்கும் பண்பு, பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றை ஒருங்கே கொண்டிருப்பதுடன், ஐ.நா சபைக்கும் சீனாவுக்குமிடையே நல்லுறவு இருப்பதையும் அன்னான் அவர்கள் குறிப்பிடும்போது பெருமிதமாக இருந்தது என்று எழுதியுள்ளார்.
|