• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-12 17:36:43    
கை-கால் தந்திரம்

cri
மனித உடம்பிலே கைகளும் கால்களுக்கும் வெவ்வேறு பணிகள் உள்ளன. கால்களின் வேலையை கைகளால் செய்ய முடியாது. அதே போல, கைகளால் செய்யப்படும் மிக முக்கியமான பணிகளை கால்களைக் கொண்டு செய்ய முடியாது. ஆனால் கால்களும் கைகளும் உடன்பிறப்புக்கள் என்ற நம்பிக்கை சீனாவில் நிலவுகிறது. இரண்டு மனிதர்கள் சகோதரர்களைப் போல நெருக்கமாகப் பழகினால் ச்சிங் துங் ஷோ ஸு என்கிறார்கள். அதாவது அவர்கள் கைகளையும் கால்களையும் போன்றவர்களாம். தமிழ் நாட்டிலோ தோளோடு தோள் கோர்த்து நிற்கும் தோழர் என்கிறோம். ஒரு பொது நலனுக்காக கைகோர்த்துப் போராடுகிறோம். ஆனால் கால் கோர்த்து போராடுவதில்லை. கால்களைக் கோர்த்துக் கொண்டால் முன்னேறிச் செல்ல முடியாமல் தட்டுத்தடுமாறி கீழே விழுந்து விடுவோம். தண்டனை கொடுக்கும் போது கூட, முதலில் கைகளுக்கு விலங்கு போடுகிறார்கள். தீவிரமான குற்றவாளிகளுக்கு அல்லது பைத்தியங்களுக்குத்தான் கைகளையும் கால்களையும் சேர்த்து விலங்கு போடுகிறார்கள். அவர்களைத் தீய செயலில் ஈடுபட விடாமல் தடுப்பது இதன் நோக்கம் எனலாம்.

ஆனால் சீனாவில் கைகளையும், கால்களையும் இணைத்து பல பழமொழிகள் புழங்கி வருகின்றன. ஒருவரை உட்காரவிடாமல் வேலை செய்யத தூண்ட வேண்டுமானால், ஷோ மாங் ஜியாவ் லுவான்-கைகளில் மும்முரம், கால்களில் தள்ளாட்டம் என்கிறார்கள். வேக வேகமாகச் செல்லும் போது கால்கள் சற்றே தள்ளாடுவது இல்லையா? எதற்கோ பயந்து தலைதெறிக்க, குதிகால் பிடறியில் பட ஓடுகிறோம்.

ஒரு வேலையைக் கூட்டு முயற்சியில் செய்து முடிப்பதற்கு சீனாவில் ஏழு கைகளும், எட்டுக் கால்களும் தேவைப்படுகின்றன. ச்சி ஷோ பா ஜியாவ்-ஆமாம், எட்டுக் கால்கள் எதற்கு? ஏழு கைகள் இருக்கும் போது, ஏழு கால்கள் போதாதா? கால்கள் விரைவுக்கு அடையாளம்.

ஊதாரித்தனமாக செலவு செய்கிறவரை நாம் ஓட்டைக்கை என்கிறோம். உள்ளங்கையில் கூட செல்வரேகை இரண்டு விரல்களுக்கு ஊடாகப் போகுமானால், இவன் கையில் பணம் நிக்காது என்று முடிவுகட்டி விடுகிறோம். மகா கஞ்சனை எச்சில் கையால் காக்கை விரட்டாதவன் என்று பழிக்கிறோம். ஆனால் சீனாவில் 'பெரிய கை பெரிய கால்' என்று ஊதாரியை வர்ணிக்கிறார்கள்-Da Shou Da Jiao நேர்மையான மனிதரை கை சுத்தமானவர் என்கிறோம். சீனாவிலோ கை-கால் சுத்தம்-Shou Jiao Gan Jing என்கிறார்கள். ஆனால் கைகளும் கால்களும் சேர்ந்து விட்டால் ஏதோ தந்திரம் செய்வதாகக் கருதுகிறார்கள்-Zuo Shou Jiao.

இது தான் புரியவில்லை. உடன்பிறப்புக்களாகக் கருதப்படும் கைகளும் கால்களும் ஒன்று சேரும் போது தந்திரம் செய்வதாக ஏன் சொல்ல வேண்டும்?

அதது இருக்க வேண்டிய இடத்தில் தான் இருக்க வேண்டுமோ?