• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-13 07:48:31    
குங் இ ச்சி 2

cri

அதிலிருந்து கவுன்ட்டருக்குப் பின்னால் நாள் முழுவதும் நின்றபடியே வேலை செய்ய வேண்டியிருந்தது. நான் நன்றாகத்தான் வேலை செய்தேன். ஆனாலும் ஒரே மாதிரி வேலை அலுப்புத் தட்டியது. எங்கள் முதலாளியோ கர்ணகடூரமான ஆள். வாடிக்கையாளர்களோ முரட்டுத்தனமானவர்கள். வேடிக்கை விளையாட்டுக்கு இடமே இல்லை. குங் இ ச்சி மதுக்கடைக்கு வரும் போது மட்டும்தான் நான் கொஞ்சம் சிரிப்பேன். அதனாலேயே அவனை இன்னமும் என்னால் மறக்க முடியவில்லை.

நீண்ட அங்கி அணிந்தவர்களில் குங் மட்டுமே நின்றபடி மது குடிப்பான். அவன் தடியான ஆள். ஆனாலும் அவன் சாந்தமாக இருப்பது விநோதமாக இருக்கும். அவன் முகத்தில் சுருக்கங்களுக்கு இடையே நிறைய தழும்புகள். வெள்ளை மயிர் கலந்த தாடி கட்டப்படாமல் அலைபாய்ந்து கொண்டிருக்கும். அவன் அணிந்திருப்பது நீண்ட அங்கிதான். ஆனாலும் ஏகப்பட்ட ஒட்டுத் தையல்கள். ஒரே அழுக்கு. சலவை செய்து பத்து வருசங்களாவது இருக்கும். அவன் பல புதிர்களைப் போட்டபடி பேசுவான். அதனாலேயே அவன் பேசுவது பாதி புரியாது. அவனுடைய வீட்டுப் பெயர் குங். ஆகவே, குழந்தைகளின் நோட்டுப் புத்தகத்தின் முதல் மூன்று எழுத்துக்களைச் சேர்ந்து குங் இ ச்சி என்று பட்டப் பெயர் சூட்டிவிட்டார்கள். அவன் கடைக்கு வரும் போதெல்லாம் எல்லோரும் அவனைப் பார்த்து "வந்துட்டான்யா" என்பது போல சப்புக் கொட்டுவார்கன்.

அப்போது யாராவது ஒருவர்,

"என்ன குங் இ ச்சி, உன் முகத்திலே புதுசா தழும்புகள் தெரியுதே" என்பார்.

அதைச் சட்டை செய்யமாட்டான். குங் கவுன்ட்டருக்கு வந்து இரண்டு கோப்பை மதுவும் சீரகம் போட்டுத் தாளித்த பட்டாணி கடலையும் ஆர்டர் செய்துவிட்டு, ஒன்பது செப்புகள் தருவான். யாராவது ஒருவர் வேண்டுமென்றே உரத்த குரலெழுத்து,

"என்ன எங்கியாச்சம் திருடிட்டு வந்திட்டியா?" என்று சீண்டுவார்கள்.

"ஏம்பா நல்ல மனுசன் பெயரை ஆதாரமில்லாம கெடுக்குறீங்க" என்று கண்களை அகலவிரித்தபடியே பதிலுக்குக் கேட்டான்.

"ஆமாமா, ரொம்ப நல்ல பேருதான். முந்தா நாளு நீ ஹோ வீட்டுல புத்தகத்தை திருடிட்டே. தலைகீழா கட்டிவச்சி அடிச்சாங்க. என் கண்ணால பார்த்தேன்."

இதைக் கேட்டதும் முகம் சிவக்க, நெற்றி நரம்புகள் புடைக்க, முறைப்பாக,

"ஒத்த புத்தகத்தை எடுக்கறது ஒண்ணும் திருட்டு இல்லே. ஒரு புத்தகத்தை எடுக்கிறது ஒரு அறிஞனோட சமாச்சாரம். அதை திருட்டுனு சொல்ல முடியாது" என்று சொல்லி விட்டு, "வறுமையிலும் நேர்மையான பெருந்தகையாளன்," என்னும் கன்பூசியஸ் நூலில் இருந்து மேற்கோள் காட்டுவான். அடுக்கடுக்காக வார்த்தைகளை அள்ளி வீசுவான். எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்போம். மதுக்கடை முழுவதும் களை கட்டிவிடும்.