• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-20 10:53:34    
குங் இ ச்சி 3

cri

குங் இ ச்சி இலக்கியங்களைப் படித்திருக்கிறான். ஆனால் அரசாங்க உத்தியோகத் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்பதை வம்புப் பேச்சில் இருந்து தெரிந்து கொண்டேன். பிழைக்க வழி இல்லாமல் பிச்சை எடுக்க வேண்டிய நிலை. நல்ல வேளையாக அவனுடைய கையெழுத்து நன்றாக இருந்தது. அலங்காரமாக எழுதுவான். புத்தகங்களைப் படி எடுத்துசம்பாதிக்க முடிந்தது. ஆனால் அவனுடைய கெட்ட காலம்—அவனிடம் பல குறைகள். குடிப்பது அவனுக்கு மிகவும் பிரியமானது. அப்புறம் அவன் ஒரு சோம்பேறி. சில நாட்கள் வேலை செய்துவிட்டு காணாமல் போய்விடுவான். புத்தகங்கள், காகிதம், தூரிகைகள், மைக்கூடு எல்லாவற்றையும் எடுத்து கொண்டு மாயமாய் மறைந்து விடுவான். இப்படி பல முறை நடந்து விட்டதால், அவனுக்கு யாருமே படி எடுக்கும் வேலை கொடுக்க விரும்பவில்லை. வேறுவழியின்றி அவ்வப்போது திருடத் தொடங்கினான். எங்கள் மதுக்கடையிலோ ரொம்பவும் நல்ல பிள்ளையாக நடந்து கொண்டான். உடனுக்கு உடனே பணம் கொடுத்து விடுவான். எப்போதாவது அவன் கையில் பணம் இல்லாத போது வெளியில் வைக்கப்பட்டிருக்கும் பலகையில் கடன்காரர்களின் பட்டியலில் அவனுடைய பெயரும் சேர்ந்து கொள்ளும். ஒரு மாதத்திற்குள் கடனை அடைந்து விடுவான். பலகையில் பெயர் அழிக்கப்படும்.

பாதிக்கோப்பை மது குடித்ததுமே குங் நிதானமாகி விடுவான். அப்புறம் யாராவது ஒரு கேள்வி போடுவார்கள்.

"குங் இ ச்சி, உனக்கு நிஜமாவே வாசிக்கத் தெரியுமா?"

இது ஒரு கேள்வியா என்பது போல அலட்சியமாக அவனை குங் பார்ப்பான். அப்படியும் விடமாட்டார்கள்.

"எப்படிடா, நீ கீழ்நிலைத் தேர்வுல கூட பாஸ் பண்ணலை?"

இந்த கேள்வி அவனை தடுமாறச் செய்யும். சங்கடத்தில் நெளிவான். முகம் வெளிறிப் போய். புரியாத சில வாசகங்களை இலக்கியத்தில் இருந்து எடுத்துவிடுவான். எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்போம். மதுக்கடை முழுவதுமே குலுங்கும்.

அப்படிப்பட்ட நேரங்களில் நானும் சிரிப்பில் சேர்ந்து கொள்வேன். முதலாளி திட்டமாட்டார். அவரே சில சமயம் குங்கிடம் சில கேள்விகளைக் கேட்டு சிரிப்பை உண்டாக்குவார். அவர்களிடம் பேசிப் பயனில்லை என்பதைப் புரிந்து கொண்டு, சிறுவர்களான எங்களிடம் பேசத் தொடங்கிவிடுவான். ஒரு தடவை என்னிடம்,

"நீ பள்ளிக்குப் போயிருக்கிறாயா?" என்று கேட்டான்.

நான் தலையசைத்ததும், "சரி, உனக்கு நான் ஒரு பரீட்சை வைக்கிறேன். சீரகம்... இது எப்படி எழுதுவே?"

ஒரு பிச்சைக்காரன் எனக்கு பரீட்சை வைப்பதா? என்று நினைப்பு எனக்கு. அந்தப் புறமாக திரும்பிக் கொண்டேன். அவனை அலட்சியப்படுத்தினேன். சிறிது நேரம் பொறுத்திருந்து பார்த்தான்.

"உனக்கு எழுதத் தெரியாதா? எப்படி எழுதறதுன்னு நான் காட்டுறேன் பாரு. இந்தா... இந்த எழுத்துக்களை எல்லாம் மறந்திடக் கூடாது. பின்னாடி நீ சொந்தமா கடை வைக்கிற போது, கணக்குவழக்கு எழுதத் தெரியணும்லே."