
யு
சுமார் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மஞ்சள் நதிப் பள்ளத்தாக்கில் மாபெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதாம். கட்டுக்கடங்கா வெள்ளம் நதிகளின் கரைகளை உடைத்து, கிராமங்கள் அனைத்தையும் அடித்துச் சென்றது. விளை நிலங்கள் பாழாயின. மக்கள் பலர் உயிரிழந்தனர். தப்பிப்பிழைத்தவர்களோ வீடுவாசல் இழந்து அகதிகளாகி, மலைகளில் தஞ்சம் புகுந்தனர். வேறுபலர் பஞ்சம் பிழைக்க வேறிடங்களை நாடிச் சென்றனர்.

அப்போது யாவ் (Yao) என்பவன் பழங்குடிகள் கூட்டமைப்பின் பேரரசனாக இருந்தான். உடனே எல்லைப் பழங்குடிகளின் மன்னர்களை கூட்டி என்ன செய்து இந்த வெள்ளத்தின் அட்ட காசத்தைக் கட்டுப்படுத்தலாம் என்று ஆலோசித்தான். எல்லோரும் குன் (Gun) என்பவனை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்து வெள்ளைத்தை எதிர்த்துப் போராடும் பொறுப்பைத் தந்தனர். அவன் தொண்டர்களைத் திரட்டி, ஒன்பதாண்டுகள் அரும்பாடுபட்டு, நதியின் வெள்ளப்போக்கைக் கட்டுப்படுத்த பல அணைகளையும், மதகுகளையும் கட்டினான். ஆனாலும் பயனில்லை. ஒரு அணையைக் கட்டி முடித்ததுமே, வெள்ளம் வந்து அணையை அடித்துச் சென்றது. அதனால் கல்லும் மண்ணும் மனலும் எல்லா இடங்களிலும் பரவி, பெருநாசம் விளைந்தது. மக்களுக்கு இன்னல்கள் குறைவதற்குப் பதிலாகக் கூடின.

யு
இதற்கிடையில் முதுமை அடைந்த யாவ், ஆட்சிப் பொறுப்பை ஹுன் என்பவனிடம் ஒப்படைத்தான். அவன் அணைக்கட்டு வேலைகள் நடந்த இடங்களை எல்லாம் நேரில் சென்றுபார்த்தான். குன் மேற்கொண்ட முயற்சிகள் எல்லாம் தோல் வியல் முடிந்ததைக் கண்டதும், அவனை இறகுமலையில் சிறை வைத்தான். பிறகு கொன்று விட்டான். அதன் பிறகு, வெள்ளத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பை யு (Yu) என்பவரிடம் ஒப்படைத்தான். இந்த யு வேறு யாருமல்ல. கடமை தவறியதற்காக கொல்லப்பட்ட குன் பெற்றெடுத்த மகனே.
இந்த யு எப்படிப் பிறந்தான் என்பதற்குப் பல புராணக்கதைகள் உள்ளன. தந்தை குன் கொல்லப்பட்டு மூன்று ஆண்டுகளாகியும் அவனுடைய உடல் அழுகவே இல்லையாம். இதனால் எரிச்சல்பட்ட ஒருவன் குன்னின் உடம்பை வெட்டிய போது, உள்ளே யு குழந்தை இருந்ததாம். இன்னொரு கதையும் சுவையானது. யு வின் தாய் ஒருவகையான காட்டு மரத்தில் பழுத்த ஒரு பழத்தைத் தின்றதும் அவளைக் கருத்திரித்தாளாம். எப்படி இருந்தாலும், அறிவும் ஆற்றலும் பெற்று, ஒப்பாரும் மிக்காரும் இல்லாத வீரனாக்த் திகழ்ந்த யு-வை தேவ குமாரனாகவே மக்கள் நினைத்தனர்.
|