• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-26 18:28:36    
புதிய முயற்சி

cri
மன்னன் ஷுன் பிறப்பித்த ஆணை வந்த போது, யு திருமணம் முடித்து நான்கு நாட்களே ஆகியிருந்தன. அப்படியும் புதுமனைவியைத் தன்னந்தனியே தவிக்க விட்டுவிட்டு, மக்களின் துயர் துடைக்க காட்டுக்குப் புறப்பட்டான்.

முதலில், தனது தந்தையின் தோல்விக்கு என்ன காரணம் என்பதை ஆராய்ந்தான். பாதிக்கப்பட்ட பகுதிகளை எல்லாம் நேரில் சென்று நுணுக்கமாகக் கவனித்தான். அனுபவமிக்க தொழிலாளர்களிடம் ஆலோசனை கேட்டான். மேலே இருந்து கீழ் நோக்கி வேகமாகப் பாய்ந்து வரும் காட்டாற்று வெள்ளத்தை அணைகட்டி தடுத்து விட முடியாது என்பதைப் புரிந்து கொண்டான். மாறாக, வெள்ள நீரைத் திசை திருப்புவதற்காக குழிகளைக் கோண்டினான், கால்-வாய்களை வெட்டினான். நதி நெடுகிலும் தூர்வாரி, நீர் கடலில் தடையின்றிக் கலக்க ஏற்பாடு செய்தான். அந்தக் காலத்தில், மஞ்சள் நதியின் மேல் வடிநிலத்தில் லாங் மென் என்றொரு பெரிய மலை இருந்தது. அது நீரோட்டத்தைத் தடுப்பதால் வெள்ளப் பெருக்கு ஏற்படுகிறது என்பதைத் தெரிந்து கொண்டான். ஆகவே, மலையைக் குடைந்து ஒரு கால்வாய் வெட்டி, நீரோட்டத்திற்கு வழி செய்யத் தீர்மானித்தான்.

மலையை எப்படிக் குடைவது? யு தெய்வீகவரம் பெற்றவன் அல்லவா? ஒரு பெருங்கரடியாக உருமாறி மலையை முட்டி மோதிக் குடைந்தான். துணைக்கு ஹுவாங் தி பேரரசரின் படையில் இருந்த யிங் லாங் என்னும் துணிச்சல் மிக்க வீரனை அழைத்துக் கொண்டான். கடைசியாக, லாங்மென் மலையைக் குடைந்து கால்வாய் வெட்டினான். காட்டாற்று நீர் கொந்தளிக்காமல் அமைதியாகக் கால்வாயில் வழிந்தோடிக் கடலில் கலந்தது.

மழையோ, வெய்யிலோ, குளிரோ எதையும் பொருட்படுத்தாமல், ஓராண்டின் நான்கு பருவங்களிலும், தொழிலாளர்களுக்கு இடையே ஒரு தொழிலாளியாக யு வேலை செய்தான். அவன் முகம் தகிக்கும் வெய்யிலில் வாடி வதங்கியது. உடம்பு மெலிந்தது. கால்களில் இருந்த மயிர் கூட உதிர்ந்தது. ஆனாலும் அயராமல் உழைத்தான். கடமையே கண்ணாய் இருந்தான். மூன்று முறை தனது வீட்டைக் கடந்து சென்றானாம். ஆனாலும் ஒரு முறை கூட உள்ளே நுழையவில்லை. ஒரு தடவை கடந்து சென்ற போது, வீட்டுக்குள்ளே யுவின் மனைவி மகனைப் பெற்றெடுத்தாள். பிறந்த குழந்தை வீறிட்டழும் குரல் கேட்டது. ஆனாலும் யு எட்டிப்பார்க்கவில்லை.

இவ்வாறாக, பதின் மூன்று ஆண்டுகள் அரும்பாடுபட்டு, வெள்ளத்தின் கொடுமையில் இருந்து மக்களைக் காப்பாற்றினான். பஞ்சம் பிழைக்க அகதிகளாகச் சென்றவர்களும், மலைகளில் தஞ்சம் புருந்தவர்களும் ஊர் திரும்பினார்கள். யுவின் தலைமையில் காட்டை உழுது நாடாக்கினார்கள். வேளாண் விளைச்சல் கொழித்தது. மக்களுக்கு நல்வாழ்வு கிடைத்தது.

யுவின் அருந்திறல் ஆற்றலை உணர்ந்த ஷுன், தனக்குப்பின் அவனை மன்னனாக்கினான். அவனுடைய காலத்திற்குப் பிறகு, மகன் ச்சி (Qi) மன்னான். சீன தேச வரலாற்றில் முதன்முதலாக அடிமை உடைமை வம்சமான ச்சியா வம்சத்தைத் தோற்றுவித்த பெருமையை ச்சி பெற்றான்.