• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-09-28 17:56:10    
சீனத்துச் சிந்தனையாளர் கன்பூஃசியஸ்

cri
ஒரு முறை தைஷான் மலையடிவாரக் காடுகள் வழியே ஒரு ஆசிரியர் தனது மாணவர்களை அழைத்துச் சென்று கொண்டிருந்தார். அவர் கொஞ்சம் வித்தியாசமானவர். வகுப்பறைக் கல்வியில் அவருக்கு நம்பிக்கை இல்லை. ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது என்பதை அவர் அறிந்திருந்தார். ஆகவே எதையுமே நேரில் பார்த்துத் தான். தெரிந்து கொள்ள வேண்டும். கண்ணாரக் காண்பதே மெய் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் மாணவர்களுக்கு இயற்கைக் கல்வி புகட்டிக் கொண்டிருந்தார். அப்போது வழியில் இருந்த ஒரு கல்லறை அருகே ஒரு பெண் அமர்ந்து ஒப்பாரி வைத்துக் கொண்டிருந்தாள். "பெண்ணே யாரம்மா நீ ஏன் அழுகிறாய்?"என்று பரிவோடு விசாரித்தார் ஆசிரியர்."ஐயா எனது மாமானாரையும் என் கணவரையும் என் மகனையும் இங்கே உள்ள புலிகள் அடித்துத் தின்று விட்டன. இது அவர்களுடைய கல்லறை" என்றாள். உடனே பதறிப் போய் "நீ வேறு எங்காவது போய்விட வேண்டியது தானே. இங்கே ஏன் இருக்கிறாய்?உன்னையும் புலிகள் அடித்துத் தின்று விடாதா"?என்று சொன்னார் ஆசிரியர். அதற்கு அந்தப் பெண் மிகவும் நிதானமாகப் பதில் சொன்னாள். "ஐயா இங்கே உள்ள அரசாங்கம் புலிகளைப் போலக் கொடூரமானதல்ல". உடனே ஆசிரியர் மாணவர்களைப் பார்த்து "பார்த்தீர்களா இதுதான் கருணை என்பது. குறித்துக் கொள்ளுங்கள். இரக்கமற்ற மன்னன் ஆளும் நாட்டில் வாழ்வதற்கு மக்கள் விரும்பமாட்டார்கள். நாட்டை ஆள்கின்ற அரசன் தனது குடிமக்களிடம் இரக்கத்தோடு நடந்து கொள்ள வேண்டும்". மாணவர்கள் கருணை என்றால் என்ன என்பதை நேரில் கண்டு புரிந்து கொண்டனர். பேயாட்சி செய்தால் பிணந்தின்னும் சாத்திரங்கள் என்று இதைச் சற்றே வேகமாகக் கூறியவர் நமது பாரதி அல்லவா?

மாணவர்களுக்கு இவ்வாறு இயற்கை வழிக் கல்வி புகட்டியவர்தான் கன்பூஃசியஸ்.

சீனப் பெருஞ்சுவர்

சீனத்துப் பட்டு

சீனத் தேயிலை

தலைவர் மாவோ என்று சீன தேசம் கொண்டுள்ள பற்பல அடையாளங்களில் ஒன்றுதான் கன்பூஃசியஸ். சீன மக்களின் கல்விக்கண் திறப்பதற்குக் காரணமானவர். கண்ணாரக் காண்பதே மெய் என்ற தத்துவத்தைப் பரப்பியவர். எதையும் நம்ப வேண்டுமானால் அதை முதலில் பார்க்க வேண்டும் என்ற கோட்பாடு இவருடையது. நமது தமிழ் மூதாதையர் களோ அதை விட ஒருபடி மேலேபோய் கண்ணாரக் காண்பதும் பொய் காதாரக் கேட்டபதும் பொய். தீரவிசாரித்து அறிவதே மெய் என்றனர். தமிழக மேடைகளில் ஒரு காலத்தில் கன்பூஃசியஸை மேற்கோள் காட்டிப் பேசாத பேச்சாளர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு உலகெங்கும் கன்பூஃசியஸ் சிந்தனைகள் பரவியுள்ளன. இந்தச் சாதனையின் பின்னணியில் கடுமையான உழைப்பும் அறிவு வேட்கையும் உள்ளன.்

கி.மு.551ம் ஆண்டில் இன்றைய ஷான்தோங் மாநிலத்தில் உள்ள ச்சுபுஃ என்ற ஊரில் ஒரு சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர் கன்பூஃசியஸ். குழந்தைப் பருவத்தில் இருந்தே கடினமாக உழைத்து படித்ததால் இருபது வயதில் அரசாங்கத்தில் ஒரு குட்டி அதிகாரியானார். அவருடைய அறிவும் அயரா உழைப்பும் முப்பது வயதுக்குள் அவரைப் பிரபலமாக்கின. பல மாநிலங்களுக்குச் சென்று தமது ஆட்சி முறைக் கருத்துக்களை மன்னர்களிடையே பரப்பினார். ஆனால் அவர் கூறியது யாவும் விழலுக்கு இறைத்த நீராயின.

செவிடன் காதில் ஊதிய சங்கு போலத் தமது கருத்துக்கள் எடுபடவில்லை என்பதைப் புரிந்து கொண்ட கன்பூஃசியஸ் முழுமூச்சாக கல்விப்ப பணியில் ஈடுபடுவதெனத் தீர்மானித்து அரசாங்க வேலையை உதறித் தள்ளினார். சீனக் கல்வி வரலாற்றிலேயே முதன் முதலாக ஒரு தனியார் பள்ளியைத் தொடங்கினார். பல பெற்றோர்கள் தங்களது குழந்தைகளைக் கன்பூஃசியஸிடம் அனுப்பினர். அவர் எல்லோரையும் ஏற்றுக் கொண்டு கல்வியறிவு புகட்டினார்.

யான் ஹுயா என்ற ஒரு இளைஞன் அவரிடம் சேர்ந்து கல்விகற்க விரும்பினான். ஆனால் அவன் குடும்பம் ஏழைக் குடும்பம். அன்றாட உணவுக்கே வருமானம் இல்லாமல் திண்டாடிய அந்தக் குடும்பத்தால் குரு தட்சணை கொடுக்க முடியவில்லை. ஒரு முறை கன்பூஃசியஸ் பாடம் நடத்திக் கொண்டிருந்த இடத்திற்குச் சென்றான். ஒரு பெரிய மரத்தடியில் அமர்ந்த படி கன்பூஃசியஸ் உரையாற்றிக் கொண்டிருந்தார். ஒருவர் எத்தகைய குடும்பத்தில் பிறந்தவராக இருந்தாலும் பரவாயில்லை. 10 இறைச் சித்துண்டுகளைக் கொண்டு வந்து தத்தாலே போதும். குருதட்சணையாகப் பெற்றுக் கொண்டு அவர்களைச் சீடர்களாக ஏற்பேன் என்று கன்பூஃசியஸ் கூறியது அவனுடைய காதுகளில் விழுந்தது. உடனே தனது இரு நண்பர்களையும் அழைத்து வந்து கன்பூஃசியஸ் பள்ளியில் சேர்ந்து கொண்டான்.

கன்பூஃசியஸ் கல்வி கற்பிப்பதோடு நின்று விட வில்லை. மாணவர்கள் எப்படிப் படிக்கிறார்கள் என்பதையும் நுணுக்கமாகக் கண்காணித்தார். ஸை யூ என்ற மாணவன் வகுப்பில் அடிக்கடி தூங்கி விழுந்து கொண்டிருந்தான். அதே வேளையில் தன்னைப் பற்றித் தற்பெருமையோடு தம்பட்டம் அடித்துக் கொண்டான். ஒரு முறை பாடம் நடத்தி முடித்த கன்பூஃசியஸ் மாணவர்களுக்கு வாசிப்புப் பயிற்சி கொடுத்தார். வழக்கம் போல அவன் தூங்கி விழுந்தான். மேசை மீது தலை சாய்த்து குறட்டை விட்டுத் தூங்கினான். கோபம் கொண்ட கன்பூஃசியஸ் அவனைத் தட்டியெழுப்பி "நீ ஒரு மக்கிப் போன மரக்கட்டை. அதிலே சிற்பம் செதுக்க முடியமா? நீ ஒரு குட்டிச் சுவர். அதிலே வெல்ளை யடித்தால் ஒட்டுமா?"கடுமையான வார்த்தைகளால் சாடினார்.

"ஆசிரியர் இனிமேல் நான் தூங்க மாட்டேன்"என்று ஸை யூ வருத்தப்பட்டு கூறினான். "இது வரை மற்றவர்களின் பேச்சை நம்பினேன். இனிமேல் பேச்சை விட அது செயல்படுத்தப்படுவதையே பார்ப்பேன்"என்று கூறிவிட்டு அகன்றார்.

ஒரு முறை வெய் மாநிலத்திற்கு சொற்பொழிவுப் பயணமாகச் சென்றார் கன்பூஃசியஸ் கூடவே அவருடைய மாணவர்களும் சென்றனர். வழியிலே கவிதை ,அறநெறி, அரசு, ஆட்சி முறை என்பன போன்ற பல கருத்துக்களைப் பற்றி பேசினார். கன்பூஃசியஸின் அறிவுத்திறன் கண்டு வியந்த மாணவர்கள் அவர் எப்படிப்படித்தார் என்றறிய விரும்பினார்கள்.

"முதலிலே ஒரிடத்தில் அமர்ந்து கண்டதையும் சிந்தித்துக் கொண்டிருந்தேன். உணவு உறக்கத்தை கூட மறந்தேன். அப்படியொரு சிந்தனை ஆனால் பயனில்லை. எனக்கு ஒன்றும் தெளிவாகப் புரியவில்லை. பிறகு கையில் கிடைத்த நூல்களை எல்லாம் எடுத்து வாசிக்கத் தொடங்கினேன். அந்த வாசிப்பும் பயன் தரவில்லை. கடையில் மூளையைப் பயன்படுத்தாமல் வெறுமனே ஒரு இயந்திரம் போல வாசிப்பது பயனற்றது என்பதைப் புரிந்து கொண்டேன். அதே வேளையில் யதார்த்தத்தை விட்டு விலகி சிந்தித்தபடி புத்தகங்களை வாசிக்காமல் இருந்தால் பல விஷயங்கள் புரியாமல் போகும். ஆகவே கற்றதை எல்லாம் அவ்வப்போது மறு ஆய்வு செய்ய வேண்டும் என்பதைப் புரிந்து கொண்டேன். வாசிப்பும் சிந்தனையும் ஒரே வேளையில் நடைபெற வேண்டும். கற்றறிந்த கோட்பாடுகளின் வழியில் சிந்தித்து நடப்புப் பிரச்சினைகளை ஆராய்ந்தால் முன்னேற்றம் காணலாம்"என்று கன்பூஃசியஸ் விளக்கினார்.

73 வயது வரை வாழ்ந்த கன்பூஃசியஸிடம் 3000 மாணவர்கள் கல்விகற்றனர். அவர்களில் 72 பேர் உலகப்புகழ் பெற்ற தலைமாணாக்கர்களாகத் திகழ்ந்தனர். கல்விப் பணி மூலம் தமது அரசியல் கருத்துக்களைப் பரப்பினார். அவை சீனாவின் நிலப் பரப்புத்துவ சமூதாயத்தில் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தன. அவருடைய மாணவர்கள் குருவின் கருத்துக்களைத் தொகுத்தனர். அதுவே கன்பூஃசியஸ் சிந்தனை என்று உலகப் புகழ் பெற்ற நூலானது. இன்றைய இருபத்தோறாம் நூற்றாண்டிலும் கண்பூஃசியஸை மறந்து விட்டு சீனாவைப் பற்றிச் சிந்திக்க முடியாது என்ற நிலை உருவாகிவிட்டது. சீனாவில் ஒரு பிரிவினர் கண்பூஃசியஸ் கற்பித்த முறைப்படி பள்ளிகளில் பாடம் கற்பிக்க வேண்டும் என்று வாதாடுகின்றனர். மாணவர்கள் மனப்பாடம் செய்ய வேண்டும் என்று சொல்லி ஷாங்கையில் ஒரு கண்பூஃசியஸ் பள்ளியைத் திறந்தனர். அதிலே சில மாணவர்கள் சேர்ந்தனர். ஆனால் சீன அரசாங்கம் கண்பூஃசியஸ் மீது பெருமதிப்புக் கொண்டுள்ள போதிலும் அந்தப் பள்ளிக்கு அனுமதி வழங்க வில்லை. நவீன கல்வி முறையில் நடைபோட்டு உலக நாடுகளுக்கு இணையாக வளரும் வேளையில் பிற்போக்குத் தேவையில்லை என்று சீன அரசு தீர்மானித்துவிட்டது. அதேவேளையில் வெளிநாடுகளில் கண்பூஃசியஸ் கல்லூரிகளை நிறுவி சீன மொழிக் கல்வியைப் பரப்பி வருகின்றது.