• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-11 15:37:21    
குங் இ ச்சி 5

cri

மதுக்கடை முதலாளி மேற்கொண்டு கேள்வி எதுவும் கேட்கவில்லை. மெல்ல மெல்ல கணக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தார்.

நடு இலையுதிர் காலப் பண்டிகை முடிந்த பிறகு, குளிர் நெருங்கியதால் ஜில்லென்று காற்று வீசியது. எல்லா நேரமும் அடுப்புக்கு அருகிலேயே நின்ற போதிலும், பஞ்சு திணித்த சட்டை அணிய வேண்டியிருந்தது. ஒருநாள் பிற்பகல், நான் கண்களை மூடியபடி உட்கார்ந்திருந்த போது, ஒரு குரல் கேட்டது.

"ஒரு கோப்பை மது சூடுபண்ணு."

அது மிகவும் தணிவாக ஒலித்தது. ஆனாலும் மிகவும் பரிச்சயமான குரல். நான் ஏறிட்டுப் பார்த்த போது யாரும் இல்லை. நான் எழுந்து நின்று கதவுப் பக்கம் பார்த்தேன். அங்கே கவுன்ட்டருக்கு கீழே, முற்றத்தை நோக்கியபடி தரையில் குங் இ ச்சி உட்கார்ந்திருந்தான். மெலிந்து போய், முகம் களையிழந்து, பார்க்கவே மிகவும் பயங்கரமாக இருந்தான். கந்தலாக ஒரு சட்டை. அவனுடைய தோளுடன் ஒரு சணல் கயிறால் கட்டித் தொங்க விடப்பட்ட சிறு பாயின் மீது உட்கார்ந்திருந்தான். என்னைக் கண்டதும்,

"ஒரு கோப்பை மது சூடுபண்ணு" என்று திரும்பவும் சொன்னான்.

அப்போது என் முதலாளி கவுன்ட்டர் மீது சாய்ந்தபடியே எக்கிப்பார்த்து,

"யார்? குங் இ ச்சியா? நீ பத்தொன்பது செப்பு பாக்கி வச்சிருக்கே தெரியுமா?" என்றார்.

"அது... அது... அடுத்த தடவை கொடுத்திடறேன். இந்தத் தடவைக்கு பணம் இருக்கு. நல்ல மதுவா கொடுங்க" என்று விட்டுக் கொடுக்காமல் பதில் தந்தான் குங்.

முதலாளி முன்பு போலவே சப்புக் கொட்டியபடியே,

"என்ன குங் இ ச்சி, திரும்பவும் திருடப் போனியா?" என்றார்.

குங் இ ச்சி முன்பு போல வன்மையாக ஆட்சேபிக்கவில்லை.

"கிண்டல் செய்யாதீங்க" என்று மட்டும் சொன்னான்.

"கிண்டலா? நீ திருடாட்டி உன் கால்களை எதுக்கு ஒடிக்கிறாங்க?"

"நான் கீழே விழுந்திட்டேன்" சுரத்தில்லாமல் பதில் சொன்னான். தன் கண்களாலேயே, "அய்யோ, இத்தோட விட்டுருங்களேன்" என்பது போல கெஞ்சினான். அதற்குள் நிறையப் பேர் சூழ்ந்து கொண்டார்கள். எல்லோருக்கும் ஒரே சிரிப்பு. நான் மதுவைச் சூடாக்கி, கொண்டு போய், முற்றத்தில் வைத்தேன். கந்தலான தனது கோட்டுப் பையில் இருந்து நான்கு செப்புகளை எடுத்து, என் கைகளில் வைத்தான். அவனுடைய கைகளைப் பார்த்தேன். சகதி ஒட்டியிருந்தது. தவழ்ந்தபடியே அவன் வந்திருக்க வேண்டும். அதற்குள் மதுவைக் குடித்து முடித்து விட்டு, மற்றவர்களின் சிரிப்புக்கும் கிண்டல்களுக்கும் நடுவே, மெல்ல மெல்ல கைகளை ஊன்றி தவழ்ந்தபடியே சென்று விட்டான்.

அதன் பிறகு குங்கை பார்க்க முடியவில்லை. வருட முடிவில் பலகையை எடுத்த முதலாளி, "குங் இ ச்சி இன்னும் பத்தொன்பது செப்பு பாக்கி வச்சிருக்கான்" என்றார். அடுத்த ஆண்டில் டிராகன் படகு பண்டிகையின் போதும் அதையே திரும்பச் சொன்னார். திரும்பவும் நடு இலையுதிர் காலப் பண்டிகை வந்த போது அவர் சொல்லவில்லை. மற்றொரு புத்தாண்டும் வந்தது. எங்களால் குங் இ ச்சியைப் பார்க்க முடியவில்லை.

அதன் பிறகு எப்போதுமே அவனைப் பார்க்கவில்லை.

ஒரு வேளை நிஜமாகவே செத்துப் போய் விட்டானோ?