
எமது செய்தியாளர்களின் பக்கத்தில் அமர்ந்துள்ள Chen Ji Guang முதியவர் பேசுகையில், துங் இன கிராமத்தில் முதியவர்கள் சிறப்பாக மதிக்கப்படுகிறார்கள் என்றார். சில முக்கிய காரியங்களை முதியவர்கள் முடிவு செய்கின்றனர். அவர் கூறியதாவது:
"எங்கள் துங் இன கிராமத்தில் முதியவர் சங்கம் நிறுவப்பட்டுள்ளது. கிராமத்தின் விவகாரங்களை நிர்வகிப்பது, இச்சங்கத்தின் பணியாகும். அன்றி, கிராமத்திலுள்ள பொதுப்பாதுப்பு மற்றும் தீ விபத்து தடுப்புக்கும் அவர்கள் பொறுப்பு ஏற்றுள்ளனர்." என்றார்.
முதியவர்கள், கிராமம் பற்றிய விதிகளை விளக்கிக்கூறி முடிந்ததும், இந்நூறு குடும்ப விருந்து துவங்கலாம்.
துங் இன மக்கள், புளிப்பான உணவுப்பொருட்களைச் சாப்பிட, மிகவும் விரும்புகின்றனர். எனவே, இவ்விருந்தில் புளிக் கறிகள் அதிகம். புளி மீன், புளி இறைச்சி புளி வாத்து இறைச்சி, புளி முள்ளங்கி முதலிய புளி உணவுகள் விருந்தில் முக்கிய இடம்பெறுகின்றன. சாப்பிடுவதற்கு அவை மிகவும் ருசியானவை.
"நூறு குடும்ப விருந்தில்" துங் இனத்தவர், பசை அரிசியால் தயாரிக்கப்பட்ட மதுபானத்தை விருந்தினர்களுக்கு வழங்குவர். மதுபானம் வழங்கும் வடிவம் காண்பதற்கு அற்புதம். பெண்களும் இளைஞர்களும் பாடிக் கொண்டே விருந்தினர்களுக்கு முன் வந்து, விருந்தினர்களின் காதுகளைப் பிடித்து, அவர்களின் வாயில் மதுபானத்தை ஊற்றுவர். இவ்வாறு மதிப்புக்குரிய விருந்தினர்களுக்கு வரவேற்பும் வாழ்த்துகளும் தெரிவிக்க முடியும் என்று அவர்கள் கருதுகின்றனர்.
இவ்விருந்தில், பசை அரிசி மதுபானத்தை குடிப்பதோடு, தனித்தன்மை வாய்ந்த எண்ணெய் தேனீரும் அருந்தப்படுகிறது.
மதுபானமும் எண்ணெய் தேனீரும் குடித்து முடிந்த பின், துங் இன மக்கள் ஆடிப்பாடுவார்கள். விருந்தினர்களும் அவர்களுடன் சேர்ந்து, ஆடிப்பாடி மகிழ்கின்றனர்.
|