மாடு திருடிய ஒரு கள்ளனை விலங்கு மாட்டி ஊர்மடத்தில் கட்டி வைத்திருந்தார்கள். அந்த வழியாகப் போன அவனுடைய நண்பன் இந்தக் காட்சியைக் கண்டு திடுக்கிட்டான்.
"என்னப்பா? என்ன ஆச்சு? எதுக்கு உனக்கு விலங்கு போட்டு வச்சிருங்காங்க" என்று கேட்டான்.
"என்ன பன்றது? எனக்கு நேரம் சரியில்லே. அன்னைக்கி தெருவழியா போய்க்கிட்டு இருந்தனா தெருவில ஒரு கயிறு கிடந்தது. சரி, பின்னால கைக்காரியத்துக்கு உதவுமேன்னு அந்தக் கயிற்றை எடுத்துக்கிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்" என்றான்.
"சரி, கயிறு எடுத்ததுக்கா இவ்வளவு பெரிய தண்டனை? என்னப்பா இது அநியாயமா இருக்கே?"
"அநியாயம் தான். என்னோட கெட்டகாலம் அந்தக் கயிறறோட இன்னொரு முனையிலே ஒரு மாடு கட்டியிருந்தது. அந்த மாடும் கயிறோட என் வீட்டுக்கு வந்திருச்சு என்றான்."
கடன்காரனின் ஆசை
ஒரு பணக்காரர் தன்னிடம் கடன் வாங்கியவர்கள் அனைவரையும் வீட்டுக்கு வரவழைத்தார்.
"நிஜமாவே நீங்க ஏழைகள்ளா, உங்களால வாங்குன கடனை திரும்பிக் கொடுக்க முடியாட்டி. அடுத்த பிறவியிலே திரும்பித் தரதர சத்தியம் செய்யுங்க. நீங்க எழுதிக் கொடுத்த கடன் பத்திரத்தை தீ வச்சிக் கொளுத்திடறேன்" என்றார்.
ஒருமனிதர் எழுந்து நின்றார். அவர் பணக்காரனிடம் சிறு தொகையை கடனாக வாங்கியவர். அவர் சொன்னார்.
"ஐயா, அடுத்த பிறவியிலே நான் ஒரு குதிரையாப் பிறப்பேன். நீங்க என்மேலே சவாரி செஞ்சு கடனை வசூலிக்கலாம்" என்றார். உடனே பணக்காரர் மனம் மகிழ்ந்து அவர் எழுதிக் கொடுத்த பத்திரத்தை கொளுத்திப் போட்டார்.
இன்னொருவர்—கொஞ்சம் பெரிய தொகை கடனாக வாங்கியவர்—எழுந்து நின்றார்.
"ஐயா, அடுத்த பிறவியிலே நான் மாடாப் பிறந்து உங்களுக்காக ஓடா உழைச்சுத் தேய்வேன். என் உழைப்பில நீங்க கடன் வசூலிக்கலாம்" என்றார்.
பணக்காரனும், "சரி, சரி, பரவாய் இல்லே" என்று கூறியபடியே அவருடைய பத்திரத்தை தீ வைத்துக் கொளுத்தினார்.
மூன்றாவது ஆள் எழுந்தார். அவர் பெரிய தொகையைக் கடனாக வாங்கியவர். அவர் சொன்னார்.
"நான் உங்ககிட்ட வாங்குன கடனை திரும்பிக் கட்டததுக்கு அடுத்த பிறவியிலே நான் உங்களுக்கு தகப்பனா பிறக்கணும்" என்றார். இதைக் கேட்டதும் பணக்காருக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்தது.
"என்ன துணிச்சல் உனக்கு? வாங்குன கடனை திரும்பிக் கொடுக்க வக்கில்லே நீ எனக்கு அப்பனா பிறக்கப் போறியா" என்று கூறியபடியே அடிப்பதற்காக கை ஓங்கினார்.
அதற்குள் அந்த ஆள் சுதாரித்துக் கொண்டு,
"ஐயா, நான் சொல்றதை முழுசா கேளுங்கள்" என்று கூறியபடியே சொல்லத் தொடங்கினார்.
"எனக்கு கழுத்து வரைக்கும் கடன். இந்தப் பிறவியில் உங்களுக்கு என்னால கடனைத் திருப்பித் தர முடியுமான்னு எனக்குத் தெரியலை. மாடா உழைச்சாலும், அல்லது குதிரையா கால் தேயத்தேய ஓடினாலும் உங்ககிட்ட வாங்குன கடனை அடைக்க முடியாது. அதனால அடுத்த பிறவியில் நான் உங்களுக்கு தகப்பனா பிறப்பேன். கடுமையா உழைச்சி, என்மகனாக இருக்கக் கூடிய உங்களுக்காக ஏகப்பட்ட சொத்து சேர்ப்பேன். அதுல இருந்து ஒரு சல்லிக்காசு கூட எடுத்து நான் செலவழிக்க மாட்டேன். நான் அடுத்த பிறவியில் உங்க அப்பனா சாகிற போது, நான் சம்பாதித்த எல்லாச் சொத்தையும் உங்க பேருக்கு எழுதி வச்சிருவேன். அதுல இருந்து நீங்க என்னோட கடனை கழிச்சிக்கிடலாம்."
|