'சீன-இந்திய நட்புறவு' தொடர்பான போட்டிக்கான கட்டுரை
cri
இமயமலை மற்றும் திபெத் பீடபூமியால் சீனாவும் இந்தியாவும் பிரிக்கப்பட்டிருந்தாலும், கடந்த ஈராயிரம் ஆண்டுகளுக்கும் மேலான ஆழ்ந்த நட்பும், நல்ல புரிந்துணர்வும் இருந்து வருகின்றது. சுமார் 3500 கி.மீ. எல்லையுடைய அண்டை நாடுகளான சீனாவும் இந்தியாவும் மக்களைத் திரட்டி ஏறக்குறைய சமகாலத்தில் விடுதலை அடைந்து, மக்களின் நலனையே நோக்கமாகக் கொண்டு, வளர்ச்சிப் பாதையில் வெற்றி நடைபோட்டு வருகின்றன. 1914ம் ஆண்டிலேயே சீனாவும் இந்தியாவும் சிம்லா உடன்படிக்கையை உருவாக்கி ஒத்துழைப்பிற்கு நல்ல அடிப்படையிட்டன. சீனா விடுதலை அடைந்தவுடன் இந்தியா அங்கீகரித்தது, கடந்த நூற்றாண்டின் நடுப்பகுதியில் "இந்தி-சீனி பாய் பாய்" என்ற முழக்கம் இந்தியா முழுதும் ஓங்கி ஒலித்து, சீன-இந்திய நட்புணர்வை உலகிற்கு பறைசாற்றியது. இடையில் ஏற்பட்ட எல்லைப் பிரச்சினை போன்ற கசப்புணர்வு மறைந்து, நல்லுறவு வரலாற்றின் சிறந்த காலக்கட்டத்தில் நுழைந்துள்ளது. இறுக்கம் தளர்ந்து இணக்கமான சூழ்நிலை உருவாக்கி நட்புறவு இருநாடுகளின் தலைவர்களின் விருப்பமாக மட்டுமல்ல இரு நாடுகளின் 200 கோடிக்கும் அதிகமான மக்களின் ஆழ்ந்த அசைக்க முடியாத விருப்பமாகவும் ஆகிவிட்டது. பொருளாதாரத் துறையில்: மக்கள்தொகை, புவியியல் அமைப்பு, நிலப்பரப்பு போன்ற ஒற்றுமையுள்ள இருநாடுகளுக்கும் இடையே , பொருளாதார ஒத்துழைப்புக்கு அளவற்ற வாய்ப்புக்கள் உள்ளன. கடந்த 18 ஆம் நூற்றாண்டில் இந்தியாவும் சீனாவும் உலகின் ஒட்டு மொத்த உற்பத்தியில் சுமார் 57 விழுக்காட்டை வகித்தன. ஒன்றின் தேவையை மற்றது நிறைவு செய்யும் வகையில் வர்த்தகம் மேலும் விரிவாக்கப்பட்டால் முந்தைய நிலையை விரைவில் கொண்டு வரலாம். பண்டைய பட்டுப்பாதையில் இடம்பெற்றிருந்த நாதுல்லா கணவாய், அண்மையில் மீண்டும் வர்த்தகத்திற்காக திறந்து வைக்கப் பட்டிருப்பதன் மூலம் நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. அதனைத் தொடர்ந்து பண்டைக்கால வர்த்தக வாயில்கள் பலவற்றை இருநாடுகளும் திறக்க வேண்டும். எனது தாத்தா காலத்தில் சீனாக் கற்கண்டு, சீனப் பட்டாசு போன்றவை எல்லாக் கடைகளிலும் கிடைத்தன. தற்போது சீன மின்னணுப் பொருட்களே இந்திய சந்தைகளில் அதிகம் கிடைக்கின்றன. இந்நிலையை மாற்றி அனைத்து இரகப் பொருட்களும் இந்தியச் சந்தையில் கிடைக்கவும் அவற்றுக்கு இணையாக இந்தியப் பொருட்களும் சீனாவில் கிடைக்கவும் பாடுபட வேண்டும். உலக வர்த்தக அமைப்பில் முக்கியப் பிரதிநிதிகளான சீனாவும் இந்தியாவும் வளரும் நாடுகளின் நலனுக்கு ஓங்கிக் குரல் கொடுக்க வேண்டும். தோகா சுற்றுப் பேச்சு வார்த்தைக்குப் பின், உலக பொருளாதார அமைப்பு நாடுகளிடையே இன்னும் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே இந்த நட்புறவு ஆண்டில் சீனாவும் இந்தியாவும் நெருக்கமாக ஒத்துழைத்து உலக வர்த்தக அமைப்பின் குறிக்கோள் வெற்றி பெற பாடுபட்டு உலகப் பொருளாதார வளர்ச்சியின் குவிமையங்களாக மாற வேண்டும். 2020ம் ஆண்டில் சீனாவும் இந்தியாவும் உலகில் இருபெரும் பொருளாதார வல்லரசுகளாகும் எனப் பல்வேறு அமைப்புக்கள் ஆருடம் கூறியுள்ளன. அரசியல் துறையில்: அதிகமான மக்கள் தொகை கொண்டிருக்கும் சீனாவும் இந்தியாவும் ஏறக்குறைய ஒரே மாதிரியான அரசியல் நிலைமையை கடந்த காலங்களில் கொண்டிருந்தன. ஒரே காலக்கட்டத்தில், மக்களின் ஆற்றலைத் திரட்டி இரண்டு நாடுகளும் விடுதலை பெற்றதோடு மக்களின் நலனையே முக்கிய இலக்காகக் கொண்டு வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பெரிதும் பாடுபட்டு வருகின்றன. உலக நலனுக்கு அச்சுறுத்தலாக இருந்த பனிப்போர் கடந்த நூற்றாண்டிலேயே முடிந்து விட்ட நிலையில் இந்தியாவும் சீனாவும் நெருங்கி ஒத்துழைத்தால் உலக அரசியலில் முக்கிய இடம் வகிக்கலாம். இந்தியா-சீனா-ரஷ்யா முத்தரப்பு ஒத்துழைப்பு பற்றி அவ்வப்போது குரல் எழுப்பப்படுகிறது. எனவே மூன்று நாடுகளிடையேயும் நெருங்கிய கூட்டாளி உறவை ஏற்படுத்தவும் பாடுபடலாம். பண்டைக்கால நண்பனான இந்தியாவுக்கு சீனா முழுமையான ஆதரவைத் தெரிவிக்க வேண்டும். மேலும், ஐ.நா தலைமைச் செயலர் பதவியில் ஆசியர் ஒருவர் பணியாற்றி நீண்டகாலம் ஆகிவிட்டது. தற்போது இந்தியர் ஒருவர் போட்டியிடும் நிலையில், சீனா முழு ஆதரவு தெரிவித்தால் இந்தியர்கள் அனைவரும் பெரும் மகிழ்ச்சி அடைவார்கள். மேலும் 45 உறுப்புநாடுகளைக் கொண்டிருக்கும் உலக அணு ஆற்றல் அமைப்பில் இந்தியாவுக்கு இதுவரையில் இடம் இல்லை. உலகின் 6வது அணு வல்லரசாக மாறிய இந்தியாவுக்கு இடம் இல்லாதது முரண்பாடாக உள்ளது. இவ்வமைப்பில் இந்தியா சேருவதற்கு அமெரிக்கா எப்போதும் தடையாக உள்ளது. இந்நிலையை மாற்ற சீனா தனது நட்புக் கரத்தை நீட்ட வேண்டும். இதுபோன்ற நட்பு நடவடிக்கைகள், சீனாவும் இந்தியாவுக்கும் இடையே நெருக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சிறிதும் ஐயமில்லை. தெற்காசிய வட்டார ஒத்துழைப்பு நாடுகள் கூட்டமைப்பில் சீனா சேரவும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா சேரவும் இரு நாடுகளும் கூட்டு முயற்சிகளை எடுக்க வேண்டும். இதன் மூலம் பன்முகத் தொடர்பு வலுப்பட்டு, நல்லுறவு மேலும் வளர ஏதுவாகும். வட்டார ஒத்துழைப்பு உலகளாவிய ஒத்துழைப்புக்கு ஆணிவேராக அமையும். வேளாண் துறையில்: அதிக மக்கள் தொகையைக் கொண்ட சீனாவும் இந்தியாவும் வேளாண் துறையில் அயராது பாடுபட்டு, மக்களின் உணவுத் தேவையை முழுமையாக நிறைவு செய்துள்ளன. இந்நிலையில் பயிர் உற்பத்தி, தோட்டக்கலை, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நோய்க் கட்டுப்பாடு, நீர்ப்பாசனம், வீரிய விதை உற்பத்தி, பயனற்ற நிலத்தை உபயோகப்படுத்துதல் பாலைவனமயமாக்க தடுப்புப் போன்ற துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும். பொதுவாக, சீன விவசாயிகள் வசதி படைத்தவர்களாகவும், இந்திய விவசாயிகள் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களாகவும் இருக்கின்றனர். இந்நிலையை மாற்ற, சீனா தனது பட்டறிவை இந்தியாவுக்கு கற்றுத் தர வேண்டும். பாதுகாப்புத் துறையில்: கடந்த காலங்களில் சீனாவும் இந்தியாவும் மேலை நாடுகளின் சுரண்டலுக்குட்பட்டு செல்வத்தை மட்டுமல்ல செல்வாக்கையும் இழந்தன. விடுதலைக்குப் பின்னர், அயராத முயற்சிகள் மூலம் இரு நாடுகளும் தற்போது பொருளாதார வல்லரசுகளாக மாறிக் கொண்டிருக்கின்றன. தற்போது ஒன்றுக்கொன்று அச்சுறுத்தல் என்ற வார்த்தை பொருளற்றதாகி இருநாடுகளும் நெருங்கிய பாதுகாப்பு ஒத்துழைப்பை மேற்கொள்ளும் நிலையில் உள்ளன. அக்சய் சின் மற்றும் அருணாசலப் பிரதேசம் போன்ற நெருடல்கள் இருந்தாலும், அந்தப் பிரச்னைகள் எதிர்காலத்தில் நட்புடன் மறக்கப்படாலாம். பண்டைக்காலத்தில் இந்தியாவின் கெளடில்யர் எழுதிய அர்த்தசாஸ்திரம் என்ற நூலும், சீனாவின் பண்டைக்கால பிங்பாஃ என்ற நூலும்,போர்க்கலை பற்றியும், நாட்டின் பாதுகாப்பு பற்றியும் ஏறக்குறைய ஒரே மாதிரியான கருத்துக்களை தெரிவிக்கின்றன. பண்டைக் காலத்திலேயே பாதுகாப்பு பற்றி இருநாடுகளும் ஒத்த சிந்தனையைக் கொண்டிருந்ததை இவை காட்டுகின்றன. தற்போது கூட பெய்ஜிங்கில், இருநாடுகளின் எல்லைப் பிரச்னை தொடர்பான எட்டாவது சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இதுபோன்ற பலசுற்றுப் பேச்சுவார்த்தை மூலம், நுண்ணுணர்வுப் பிரச்னைகள் யாவும் தீர்க்கப்படும் என நம்புகின்றேன். இருநாடுகளின் இராணுவமும் கூட்டுப் பயிற்சியை மேற்கொள்ளும் என இந்த வாரத்தில் இந்திய இராணுவத் தளபதி திரு.ஜெ.ஜெ.சிங் தெரிவித்துள்ளார். இதுபோன்ற பயிற்சிகளும் இருதரப்பு உறவை வளர்க்கும் என்பதால், தொடர்ந்து இவற்றை நடத்த வேண்டும். பண்பாட்டுத் துறையில்: பண்பாட்டுச் சிதிலங்களை குறிப்பாக உலக அதிசயங்களை ஏராளமாகக் கொண்டிருக்கும். சீனாவும், இந்தியாவும் சுற்றுலாத் துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதும் இன்றியமையாதது. பண்டைக் காலத்தில் இந்தியாவையும் சீனாவையும் இணைத்த பட்டுப் பாதை மீண்டும் உயிர் பெற்றால், சுற்றுலாத் துறையும் வளமடையும். கடல் மட்டத்திலிருந்து 14200 அடி உயரத்தில் உள்ள நாதுலாக் கணவாய் திறக்கப் பட்டவுடன், புதுதில்லியையும் பெய்ஜிங்கையும் இருப்புப் பாதை இணைக்கும் கற்பனை என்னுள் விரிந்தது. அந்த நாளை நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். சுற்றுலாத் துறையை வலுப்படுத்தி இருநாடுகளின் பல்வேறு இடங்களில் மேலும் பல துணைநிலைத் தூதரகங்கள் திறக்கப்பட வேண்டும். பிற நாட்டவர்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவில் பயணம் மேற்கொள்ளும் சீனர்களின் எண்ணிக்கையும் சீனாவில் பயணம் மேற்கொள்ளும் இந்தியர்களின் எண்ணிக்கையும் மிகக் குறைவாகவே உள்ளன. பரிமாற்றங்கள் மூலம், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த வேண்டும். விசாக் கட்டுப்பாடுகள் படிப்படியாக குறைய வேண்டும். கல்வித் துறையில்: அமெரிக்கா போன்ற சில மேலை நாடுகளின் அறிவியல் மூளையாக சீனர்களும் இந்தியர்களும் செயலாற்றுகின்றனர். கல்வியாளர்களின் பரிமாற்றத்தை வலுப்படுத்த வேண்டும். மாணவர்களைப் பரிமாறும் வகையில் இரு நாடுகளின் புகழ்பெற்ற பல்கலைக் கழகங்கள், பரிமாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். சீனாவிலும் இந்தியாவிலும் ஆண்டுதோறும் ஏராளமான தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் கல்வியாளர்கள் தோன்றிக் கொண்டே இருக்கின்றனர். அவர்களுக்கு உரிய வாய்ப்புக்கள் அளிக்கப்பட்டால், சீனாவும் இந்தியாவும் மேலும் சிறந்த எதிர்காலத்தைப் பெறும். எனவே வேலைவாய்ப்புப் பிரச்னையை அகற்றி, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க சீனாவும் இந்தியாவும் நெருங்கி ஒத்துழைக்க வேண்டும். என்னால் என்ன முடியும்? இதுவரையில் நட்புறவை வலுப்படுத்த சீனாவும் இந்தியாவும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி எனது விருப்பத்தை தெரிவித்த நான் இனி என்னால் என்ன செய்ய முடியும் என்பது பற்றியும் தெரிவிக்க விரும்புகிறேன். கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சீன வானொலி தமிழ்ப்பிரிவின் தீவிர நேயராக இருக்கும் நான் சீன-இந்திய நட்புறவு பற்றிய பிரச்சாரத்தை நண்பர்களிடமும் உறவினர்களிடம் மேற்கொள்வேன். சீன வானொலியைக் கேட்பது கூட சீன-இந்திய நட்புறவின் ஒரு பகுதிதான் என்பதால் செயல்பாட்டில் வேகத்தைக் கூட்டி, மேலும் அதிகமானோருக்கு சீன வானொலியை அறிமுகம் செய்வேன். இந்திய சீன நட்புறவுக் கழகம் நாடு தழுவிய அளவில் ஏற்கனவே நிறுவப்பட்டிருந்தாலும், அதன் தமிழகக் கிளை இதுவரையில் அமைக்கப்பட்டதாகத் தெரியவில்லை. எனவே, இந்திய சீன நட்புறவுக் கழகத்தின் தமிழகக் கிளையை நிறுவ உரிய முயற்சிகளை மேற்கொள்வேன். அந்த முயற்சிகள் வெற்றி பெற்ற பின்பு, மாவட்டம் தோறும் சீன இந்திய நட்புறவுக் கழகத்தை நிறுவ நடவடிக்கைகளை எடுப்பேன். சீன வானொலியின் பிரதிநிதிக்குழு இப்போது அடிக்கடி இந்தியாவுக்கு வருகின்றது. அதைப் பயன்படுத்தி சீன நண்பர்களின் உதவியுடன், சீன-இந்திய நட்புறவின் அவசியம் பற்றி நல்ல பிரச்சாரம் செய்ய முடியும். ஏற்கனவே, பிரதிநிதிக்குழுவின் பயணங்களின் போது பல்வேறு செய்தி ஊடகங்கள் மூலம் நல்ல விளம்பரமும் நல்லுணர்வும் கிடைத்திருக்கின்றது. எதிர்காலத்தில் தலைமை நேயர் மன்ற கருத்தரங்குகளை பயன்படுத்தி, சீன-இந்திய நட்புறவு பற்றிய பிரச்சாரத்தை வலுப்படுத்துவேன். கடந்த 2004 ஆம் ஆண்டில், நண்பர்களுடன் இணைந்து, இருசக்கர வாகனங்களின் மூலம் 2 நாட்களில் சுமார் 750 கிலோ மீட்டர் தூரம் பயணித்து ஏழு மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமான நேயர்களை சந்தித்தேன். எதிர்காலத்திலும் இதுபோன்ற பயணங்களை மேற்கொள்வேன். மக்களிடையே சீன-இந்திய நட்புறவின் முக்கியத்தை எடுத்துரைப்பேன். குறிப்பாக, 2008 பெய்ஜிங் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறும்போது எங்கள் பயணம் அமையலாம். அரசு மற்றும் பொதுமக்களின் வரவேற்புடன் எங்களின் பயணம் முழு வெற்றி அடையும் என நம்புகின்றேன். சீன-இந்திய நட்புறவின் சின்னமாக, தனி இணைய தளம் ஒன்றை நிறுவும் யோசனையும் எனக்கு உண்டு. தற்போது சீன வானொலி தமிழ்ப்பிரிவு நேயர்களுக்காக நண்பர்களுடன் இணைந்து 'சீன வானொலி மன்றம்' என்ற காலாண்டிதழை வெளியிடுகிறேன். எதிர்காலத்தில் இதை திங்களிதழாக மாற்றி, நட்புறவு தொடர்பான செய்திகளை அதிக அளவில் இடம்பெறச் செய்வேன். சீன-இந்திய நட்புறவின் மீது ஆழ்ந்த ஈடுபாடு எனது இரத்தத்திலேயே ஊறிவிட்டது. இந்த மாறா உணர்வைப் பயன்படுத்தி காலமெல்லாம் சீன-இந்திய நட்புறவுக்கு முழுமூச்சுடன் பாடுபடுவேன். வளர்க சீன-இந்திய நட்புறவு! வளவனூர் புதுபாளையம் எஸ் செல்வம்
|
|