• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-09 15:08:23    
வட சீனாவின் கடற்கரை நகரான தாலியென் நகரம்

cri

தாலியென் நகரம், சீனாவில் நீரூற்றுக்களும் சதுக்கங்களும் மிக அதிகமாக இருக்கும் நகரம் மட்டுமல்ல, மக்கள் வசிப்பதற்கு தகுதி மிக்க நகரமாகவும் ஐ.நாவால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

வட சீனாவின் ஒரு தீபகற்பத்தின் தென் முனையில் அமைந்துள்ள தாலியென் நகரத்தின் மூன்று பக்கங்கள் கடலால் சூழப்பட்டுள்ளன. நீல நிற ஆகாயம், பளிங்கு போன்ற கடல் நீர், வெண்ணிற மணல், கறுப்பு நிற கடற்பாறை ஆகியவை இங்குள்ள கடற்கரை காட்சியின் சிறப்பு.

தாலியென் நகரம் மிகவும் சுத்தமானது. புல் தரைகள் சங்கிலித் தொடர் போல, 4 பக்கங்க களிலும் நீண்டுள்ளன. ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ள வீதிகளில் நடந்துசெல்லும் பயணிகள் அருகிலுள்ள கடலைக் காணலாம்.

தாலியென் நகரில் பாதைகள் ஏற்ற தாழ்வாக இருக்கின்றன. இதனால், சீனாவில் சைக்கிள் மிகவும் குறைவான நகரங்களில் ஒன்றாகத் தாலியென் நகரம் திகழ்கின்றது. ஆனால், வேறு இடங்களிலிருந்து வரும் பயணிகள் சைக்கிள் மூலம் சுற்றுலா மேற்கொள்வதற்கு இது வசதி தருகின்றது.

செப்டெம்பர் திங்களில் தாலியென் நகரின் காலநிலை குளிர்ச்சியாக உள்ளது. பயணிகள் வாடகை சைக்கிளைக் கொண்டு சுற்றுலா மேற்கொள்ளலாம். ஒரு சகாவுடன் இணைந்து பயணம் மேற்கொள்ள விரும்பினால், இரட்டை வாடகை சைக்கிள்களில் ஏறி, கடற்கரை பாதையில் சென்ற வண்ணம் இயற்கைக் காட்சியைக் கண்டுகளிக்கலாம். இது உடல் நலத்துக்கும் நன்மை பயக்கும்.

சதுக்கப் பண்பாடு, தாலியெனின் ஒரு தனிச்சிறப்பு. சிங்ஹைய் வளை குடா சதுக்கமும் ஹைய்சியுங் சதுக்கமும் கடலுக்கு அருகில் அமைந்துள்ளன. கடலையும் கடற்கரையில் அமைந்துள்ள சிற்பங்களையும் கண்டுகளிக்கலாம்.

சாங்பா சதுக்கத்தில் குன்றுக்குச் சென்றுவரும் மின் வண்டிகளைக் காணலாம். பத்துக்கும் அதிகமான சதுக்கங்களும் சுமார் 100 வீதிப் பூங்காக்களும் நகரில் பல்வேறு மூலைகளில் அமைந்துள்ளன.

பசுமையான புல், அழகான மலர்கள், வெண்ணிறப் பறவைகள், நீரூற்று, சிற்பம், ஜப்பானிய மற்றும் ரஷிய பாணியில் கட்டப்பட்ட கட்டடங்கள் ஆகியவற்றைக் கண்டுகளிக்கும் பயணிகள் நிழற்படக் கருவிகளைக் கொண்டு படம் பிடிக்கின்றனர்.

தாலியென் சதுக்கத்தில், சிங்ஹைய் வளை குடா சதுக்கம் பார்வையிடத் தக்கது என்று இந்நகரில் பிறந்து வளர்ந்த இளைஞர் சாங்வுன் கூறினார்.

எங்களுக்கு எதிரேயுள்ள இந்தச் சதுக்கம், சிங்ஹைய் வளை குடா சதுக்கம் என்று அழைக்கப்படுகின்றது.

அதன் பரப்பளவு, 17 லட்சத்து 60 ஆயிரம் சதுர மீட்டர். சீனாவில் மிகப் பெரிய சதுக்கம் இது என்று கூறலாம். நாங்கள் இந்தத் திசையிலிருந்து முன் நோக்கிப் பார்த்தால், கீழே ஒரு சூரிய காந்தி உருவ நீரூற்று.

அதற்கு முன், சிற்பமுடைய மாபெரும் தூண். பின்னர் கடற்கரை. எங்கள் முன் பக்கத்தில் தாலியென் நகரின் சின்னமாகத் திகழும் செப்புச் சிற்பம் ஒன்று உள்ளது. தாலியென் நகரம் நிறுவப்பட்ட 100வது ஆண்டு நிறைவை ஒட்டி, இந்தச் செப்புச் சிற்பம் நிறுவப்பட்டது என்றார் அவர்.

தாலியென் நகரின் நவீன பொருட்காட்சியகம், சிங்ஹைய் வளைகுடா சதுக்கத்தில் அமைந்துள்ளது. இந்த நரை நிறக் கட்டடம், நவீன பாணியில் கட்டப்பட்டது. தாலியென் நகருக்கு வரும் பயணிகள் நிச்சயம் இதைப் பார்வையிடுவார்கள். இந்தப் பொருட்காட்சியகத்தின் தலைவர் லியூ செங்வெய் கூறியதாவது,

1899ஆம் ஆண்டு முதல் இதுவரையிலான கடந்த 100 ஆண்டுகளில் தாலியென் நகரில் ஏற்பட்ட மாற்றங்களை இந்த நவீன பொருட்காட்சியகம் பிரதிபலித்துள்ளது. குறிப்பாக, சீர்திருத்த மற்றும் வெளிநாட்டுத் திறப்புக் கொள்கை நடைமுறைக்கு வந்த கடந்த சுமார் 20 ஆண்டுகளில், இந்நகரில் தொழிற்துறை, வேளாண்துறை, சுற்றுலாத் துறை ஆகியவற்றின் வளர்ச்சியைக் காட்டுகின்றது.

முழு கட்டடத்தின் பரப்பளவு 30 ஆயிரத்து 400 சதுரமீட்டர் ஆகும். பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள இடத்தின் பரப்பளவு 15 ஆயிரம் சதுரமீட்டர் ஆகும் என்றார் அவர்.

உருக்கால் கட்டப்பட்ட இந்தப் பொருட்காட்சியகத்தின் 4 பக்கங்களிலும் கண்ணாடிகள் போடப்பட்டுள்ளன. இந்தப் பொருட்காட்சியில் 4 அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. அவை, நகரத் தோற்றம், விரைவாக வளரும் பொருளாதாரம், புதுமை உணர் வூட்டும் நகரம், மீளாய்வும் முன்னாய்வும் என்பனவாகும்.