• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-10-31 08:51:30    
காலக் கண்ணாடி

cri
ஒரு முறை தனது அமைச்சரவையைக் கூட்டிய பேரரசன் தை ஜோங் சொன்னான். என்னுடைய ஆயுத சாலையிலே ஏராளமான வில்களும் அம்புகளும் இருக்கின்றன. எனக்கு இளரத்தம். ஆகவே நிறைய ஆயுதங்களைச் சேர்த்து வைத்திருக்கிறேன். என்னிடம் இருக்கும் அம்புகள்தான் மிகவும் நேர்த்தியானவை என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அவற்றைப் பார்த்த சில அம்புத் தயாரிப்பாளர்கள் தரமற்றவை என்று ஒதுக்கித் தள்ளி விட்டனர். இந்த அம்புகள் நேராகப் பறந்து போய் எதிரிகளைத் தாக்காது என்று கூறிவிட்டனர். அம்புகளைச் செய்வதற்குப் பயன்பட்ட மரம் வலுவானதாக இருந்தாலும், அது நேராக வளரவில்லை; எனவே அதில் செய்யப்பட்ட அம்பு நேராகப் பறக்காது என்று காரணம் சொன்னார்கள். எனது எதிரிகளை வீழ்த்திய அம்புகளைப் பற்றியே எனக்குச் சரிவரத் தெரியாத போது, நாட்டை ஆளும் முறை பற்றி எனக்கு என்ன தெரியும்? ஆகவே, அமைச்சர்களே, பயப்படாமல் உங்கள் மனதில் தோன்றும் கருத்துக்களைச் சொல்லுங்கள் என்றான்.

அவனுடைய அமைச்சர்களிலேயே மிகவும் துணிச்சலானவர் வெய் செங். ஆனால் இவர் முதலில் பட்டத்து இளவரசனோடுதான் இருந்தார். அப்போதே சின் மாகாண இளவரசனின் ஆற்றலை உணர்ந்த அவர், "தம்பியைத் தட்டி வையுங்க," என்று பட்டத்து இளவரசனுக்கு யோசனை கூறினார். ஆனால் அவன் கேட்கவில்லை. தனக்கு எதிராக யோசனை கூறிய வெய் ஜெங்கை அப்போதே அழைத்த தை ஜோங், தனது மற்ற இரண்டு சகோதரர்களிடையே கலகத்தை மூட்டும்படி கேட்டுக் கொண்டான். "நான் சொன்ன யோசனையை பட்டத்து இளவரசர் கேட்டிருந்தா நீங்க இந்த நேரம் இங்க இருக்க மாட்டீங்க," என்று பயப்படாமல் பேசினார். ஆனாலும் அவரைத் தண்டிக்காமல் ஆலோசகர் பதவியில் அமர்த்தினான். பிறகு தலைமை அமைச்சருக்கு நிகராக ஆக்கினான். நம்பகமான ஆளாக தன்பக்கத்தில் வைத்துக் கொண்டான்.

இவ்வாறு திறமைசாலிகளாகத் தேர்ந்தெடுத்து அரசன் பதவிகளை வழங்கியது கண்டு அவனுடைய அடிவருடிகளுக்குப் பொறுக்கவில்லை. ஆண்டாண்டு காலமாகவே அரசனுக்குத் துதிபாடுகிறோம். நம்மைக் கவனிக்காமல் யார்யாருக்கோ பதவி தருகிறாரே என்று புலம்பினார்கள். அவர்களைப் பார்த்து பேரரசர் தை ஜோங் சொன்னான். "நாட்டை நிர்வாகம் செய்வதற்குத்தான் அமைச்சர்களை நியமிக்கிறேன். இந்த வேலைக்கு கூஜாதூக்கிகளை எப்படி நியமிப்பது?"

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்றாய்ந்து

அதனை அவன்கண் விடல்"

என்ற வள்ளுவர் வாக்கினுக்கு ஏற்ப, தக்காரைத் தகுந்த பதவியில் தக்கவைத்த காரணத்தால், எல்லா அமைச்சர்களும் அதிகாரிகளும் தாங் வமிசத்திற்காக விசுவாசமாக உழைத்தனர்.

வெய் ஜெங் தமது வாழ்நாளில் துணிச்சலுடன் மன்னனையே அதட்டிப் பேசியவர். ஆனாலும், அவர் மரணமடைந்த போது, பேரரசன் தை ஜோங் தனது அமைச்சரவைக் கூட்டத்தில் பேசினான்.

"நாம் சரியாக உடை உடுத்தியிருக்கிறோமா என்று வெண்கலக கண்ணாடியில் பார்த்துத் தெரிந்து கொள்கிறோம். வரலாற்றுக் கண்ணாடியில் ஒரு தேசத்தின் எழுச்சியையும் வீழ்ச்சியையும் பார்க்கிறோம். மனிதர்களைக் கண்ணாடியாகப் பாவித்துப் பார்த்தால், நாம் செய்வது சரியா, தவறா என்பது புரிந்து விடும். இப்போது வெய் ஜெங் இறந்து விட்டார். நான் எனது விசுவாசமான கண்ணாடியை இழந்து விட்டேன்."

ஆயிரத்தில் ஒருவன் தானே இந்த அரசன்!