ஆசிய வளர்ச்சி வங்கி-சீன ஒத்துழைப்பு
cri
சீனாவுடனான ஒத்துழைப்பை ஆசிய வளர்ச்சி வங்கி மேலும் வலுப்படுத்தி, சீனாவின் வறிய பிரதேசங்களில், அடிப்படை வசதிக் கட்டுமானத்திற்கும், எரியாற்றலின் சிக்கன பயன்பாடு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட பணிகளுக்கும் ஆதரவளிக்கும். சீனாவில் உள்ள ஆசிய வளர்ச்சி வங்கியின் முதன்மை பிரதிநிதி Toru Shibuichi அண்மையில் சீன வானொலி நிலையத்தின் செய்தியாளருக்கு பேட்டியளிக்கையில் இவ்வாறு கூறினார். சீனாவில் வறுமை பிரச்சினையை தீர்ப்பதற்கு மேலும் உதவிடும் பொருட்டு, அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், சீனாவிற்கு 300 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள கடனை வழங்கவுள்ளதாக ஆசிய வளர்ச்சி வங்கி அண்மையில் அறிவித்தது. தற்போது, சீனாவில் சுமார் 10 கோடிக்கு அதிகமானோர் சர்வதேச வறுமை கோட்டின் கீழ் வாழ்ந்து வருகின்றனர். சீனாவில் வறுமை ஒழிப்புப் பணியில் உள்ள சவால் இன்னமும் கடினமானது என்று Toru Shibuichi கூறினார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள், ஆசிய வளர்ச்சி வங்கி சீனாவிற்கு வழங்கும் கடனில் 80 விழுக்காட்டுத் தொகை மத்திய மற்றும் மேற்கு பகுதியில் ஒதுக்கீடு செய்யப்படும். சீன கிராம வளர்ச்சி மீதான ஆதரவை ஆசிய வளர்ச்சி வங்கி அதிகரிக்கும் என்று அவர் தெரிவித்தார்.
|
|