சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். குழந்தையையும் மருந்துப் பொட்டலத்தையும் ஏந்தியபடி அவளால் மேற்கொண்டு நடக்க முடியவில்லை. சுமை அழுத்தியது. குழந்தையும் நெளிந்து கொண்டே இருந்ததால் பாதை நீண்டு தெரிந்தது. வழியில் ஒரு பெரிய வீட்டின் வாசல்படியில் உட்கார்ந்து சிறிது ஓய்வெடுக்க வேண்டியிருந்தது. வியர்வையில் நனைந்து கசங்கி உடை உடம் போடு ஒட்டிக் கொண்டது. பாவோ ஆழ்ந்து தூங்குவது போல் தெரிந்தது. மெல்ல நடக்கலாம் என்று எழுந்து நின்றபோது அவன் கனமாகத் தெரிந்தான். பின்னாலிருந்து ஒரு குரல்.
அவனை நான் தூக்கிக்கிறேன்.
அது அவு வின் குரல் போல் இருந்தது.
ஏதாவது ஒரு தேவதை கைகொடுக்காதா என்று ஏங்கிய ஷானின் மனைவிக்கு, அவு முன்வந்தது பிடிக்கவில்லை. ஆனால் அவு விடாமல் வற்புறுத்தினான். பலதடவை மறுத்த பிறகு கடைசியில் சம்மதித்தாள். அவன் குழந்தையைத் தூக்குவதற்காக, அவளுடைய மார்பகத்திற்கும் குழந்தைக்கும் இடையே கைகளை நீட்டி எடுத்த போது, தனது மார்பகங்களில் அலை அலையாக வெப்பம் பரவுவதை உணர்ந்தாள். முகம் குப்பெனச் சிவந்தது.
அவர்கள் இரண்டரை அடி விலகியே நடந்தனர். அவு ஏதேதோ சொன்னான். ஷானின் மனைவி பதிலேதும் சொல்லவில்லை. ரொம்ப தூரம் போயிருக்க மாட்டார்கள். ஒரு நண்பனுடன் உணவு அருந்தப் போக வேண்டும் என்று சொல்லி குழந்தையைத் திரும்பக் கொடுத்துவிட்டு அவு போய் விட்டான். நல்ல வேளையாக வீடு அதிகத் தூரத்தில் இல்லை. ஒன்பதாவது வீட்டு வாங் அத்தை தெருவோரமாக உட்கார்ந்திருப்பது தெரிந்தது.
"பிள்ளைக்கு எப்படி இருக்கு? டாக்டர் கிட்ட காட்டினியா?"
"காட்டுனேன் அத்தை. உங்க வயசுக்கு நீங்க எவ்வளவோ பார்த்திருப்பீங்க. இவனைக் கொஞ்சம் பார்த்துச் சொல்லுங்களேன். நீங்க என்ன நினைக்கிறீங்க?"
"ம்..."
"சரியாகிவிடுமா?"
"ம்ம்..."
வாங் அத்தை பாவோவின் உடம்பைப் பார்த்துவிட்டு தலையை இருமுறை அசைத்தாள். பிறகு இரண்டுதடவை தலையைக் குலுக்கினாள்.
பாவோ மருந்து சாப்பிட்டபோது பிற்பகலாகிவிட்டது. அவன் அமைதியாகத் தூங்குவது போல் தெரிந்தது.
பிற்பகலில் திடீரெனக் கண்விழித்து, ம்ம்... என்றழைத்தான். பிறகு கண்களை மூடிக் கொண்டான். தூங்குவது போல் இருந்தது. ரொம்ப நேரம் தூங்கியிருக்க மாட்டான். அவனுடைய முகத்திலும் மூக்கு நுனியிலும் வியர்வைத் துளிகள். அதை அவள் துடைத்த போது கையில் பிசுக்பிசுக் என ஒட்டியது. பயந்து போய் அவனுடைய நெஞ்சைத் தொட்டுப் பார்த்தாள். உடனே தேம்பியழத் தொடங்கிவிட்டாள்.
சிறிது சிறிதாக ஓய்ந்த அவனது மூச்சு முற்றிலுமாக நின்றுவிட்டது. ஷானின் மனைவியின் தேம்பல் ஒப்பாரியாக மாறியது. உடனே ஆட்கள் வரத் தொடங்கிவிட்டார்கள். அறைக்குள்ளே வாங் அத்தை, அவு போன்றவர்களும், வீட்டுக்கு வெளியே மதுக்கடை முதலாளி, மூக்குச் சிவந்த குங் போன்றவர்களும் திரண்டிருந்தனர். காகிதப் பணம் கொளுத்த வேண்டும் என வாங் அத்தை உத்தரவிட்டாள். பிறகு இரண்டு ஸ்டூல்களையும், ஐந்து உடைகளையும் அடமானமாக வைத்து, இரண்டு டாலர்களை வாங்கி வந்தாள். உதவ வந்த அனைவருக்கும் உணவு சமைக்க வேண்டுமே.
|