முதல் பிரச்சினை சவப் பெட்டி. ஷானின் மனைவியிடம் ஒரு ஜோடி வெள்ளிக் காது வளையங்களும், தங்கமுலாம் பூசப்பட்ட வெள்ளி கொண்டை ஊசியும் இருந்தன. அவற்றை மதுக்கடை முதலாளியிடம் கொடுத்து, பாதி ரொக்கத்துக்கும் பாதிக்கிடனுக்குமாக சவப்பெட்டி வாங்கச் சொன்னாள். அவு உதவ முன்வந்து கையை உயர்த்தினான். ஆனால் வாங் அத்தை அவனை அலட்சியப்படுத்தினாள். அடுத்த நாள் சவப்பெட்டியைத் தூக்குவதற்கு மட்டும் அவன் இருந்தால் போதும். "கிழட்டுத் தேவடியா." சபித்து விட்டு, பற்களைக் கடித்தான். புறப்பட்டுப் போன முதலாளி, மாலையில் திரும்ப வந்து, சவப்பெட்டியை விசேஷமாகச் செய்ய வேண்டியிருக்கிறது என்றும், மறுநாள் காலையில்தான் தயாராகும் என்றும் கூறினார்.
அவர் திரும்பிவந்த நேரத்தில் மற்றவர்கள் எல்லாம் சாப்பிட்டு முடித்துவிட்டார்கள். லூச்சன் பழைய காலத்து கிராமம். ஆகவே, முதலாவது காவல்விசில் ஒலிப்பதற்கு முன்பே எல்லோரும் வீடுகளுக்குப் போய் விட்டனர். அவு மட்டும் குடிப்பதற்காக மதுக் கடைக்குப் போனான். வழியில் குங் கிழவன் ஒரு பாட்டைப் புலம்பத் தொடங்கினான்.
பாவோ கட்டிலில் கிடந்தான் பிணமாக. ஷானின் மனைவி கட்டிலின் விளிம்பில் அமர்ந்தபடி அழுது கொண்டிருந்தாள். தரையில் தறி அமைதியாகக் கிடந்தது. நீண்ட நேரம் அழுது அழுது கண்ணீர் வற்றிப் போய் சுற்றி முற்றிப் பார்த்தாள். இப்படியும் நடக்குமா? இது ஒரு கனவுதான். நாளைக் காலையில் கண்விழிக்கும் போது பாவோ என் பக்கத்தில் முண்டிக் கொண்டு படுத்திருப்பான். 'ம்மா' என்று கூப்பிட்டபடியே புலிக்குட்டிபோல விளையாடத் துன்னி எழுவான்.
குங் கிழவன் பாட்டை நிறுத்தி நீண்ட நேரமாகிவிட்டது. மதுக்கடையில் விளக்குகள் அணைக்கப்பட்டன. நடந்ததை எல்லாம் நம்பமுடியாமல் ஷானின் மனைவி வெறித்துப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தாள். சேவல் கூவியது. கிழக்கு வெளுத்தது. விடியலின் வெள்ளிக் கீற்றுக்கள் ஜன்னலின் விரிசல்கள் வழியே எட்டிப் பார்த்தன.
மெல்ல மெல்ல வெள்ளிக் கிரணங்கள் செம்பு நிறத்துக்கு மாறின. வீட்டுக் கூரையில் சூரியன் சுட்டெரித்தான். யாரோவந்து கதவைத் தட்டும் வரை ஷானின் மனைவி அப்படியே உட்கார்ந்திருந்தாள். சத்தம் கேட்டதும் திடுக்கிட்டு எழுந்து கதவைத் திறக்க ஓடினாள். யாரோ ஒருவன் முதுகில் எதையோ சுமந்தபடி நின்றிருந்தான். அவனுக்குப் பின்னால் வாங் அத்தை.
'ஓ! சவப்பெட்டி வந்து விட்டது!'
அன்று பிற்பகல் வரையிலும் சவப்பெட்டியை மூடமுடியவில்லை. ஷானின் மனைவி அதைப் பார்த்துப் பார்த்து அழுதாள். மூடவிடவில்லை. சவப்பெட்டி மூடப்படுவதை அவளால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. நல்ல வேளையாக, பொறுமையுடன் காத்திருந்து அலுத்துப் போன வாங் அத்தை, வேகவேகமாக முன்னே வந்து, அவளை இழுத்துக் கொண்டு அப்பால் போனாள். உடனே அவசர அவசரமாக சவப்பெட்டியை மூடிவிட்டனர்.
பாவோவுக்காக ஷானின் மனைவி எவ்வளவோ சடங்குகளைச் செய்து விட்டாள். முதல்நாள் காகிதப் பணத்தை எரித்தாள். இன்று காலையில் பெருங்கருணை மறையின் நாற்பத்தி ஒன்பது புத்தகங்களை எரித்தாள். சவப்பெட்டிக்குள் பாவோவை வைப்பதற்கு முன் புத்தம் புது உடைகளை உடுத்தினாள். சவப்பெட்டியில் தலையணைக்கு அருகில் அவனுக்குப் பிரியமான பொம்மைகளை ஒரு சிறு களிமண் பொம்மை, இரண்டு சிறிய மரக்கிண்ணங்கள், இரண்டு கண்ணாடிப் புட்டிகள் வைத்தாள். வாங் அத்தை விரல்விட்டு எண்ணினாள். எதுவும் விடுபட்டுப் போனதாகத் தெரியவில்லை.
அவு அன்று முழுவதும் வரவில்லை.
ஆகவே, இரண்டு சுமை கூலிகளுக்கு மதுக்கடை முதலாளி ஏற்பாடு செய்தார். சவப்பெட்டியை ஊர் இடுகாடுவரை தூக்கிச் சென்று, குழி தோண்டுவதற்காக ஒவ்வொருவருக்கும் 210 செப்புக்காசுகள். கூடமாட ஒத்தாசையாக இருந்த, அனுதாபமாகப் பேசிய அனைவரும் உணவருந்த அழைக்கப்பட்டனர். கூடிய சீக்கிரத்தில் சூரியன் மறையத் தொடங்கினான். விருந்தினர்களும் வீடுகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர்.
|