• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-11-27 17:35:32    
கண்கள் எங்கே நெஞ்சமும் அங்கே

cri

கண் கண்டது கை செய்யும், கண்டதே காட்சி கொண்டதே கோலம், கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு. இவையெல்லாம் பழமொழிகள் என்பது நாம் அறிந்திருப்போம். நமது கண்கள் எப்படியெல்லாம் நமது செயல்களை நிர்ணயிக்க முக்கியமாகின்றன என்பதை இந்த பழமொழிகள் உணர்த்துகின்றன. கண்டதும் காதல் என்ற வார்த்தைகளும் நமக்கு மிக நன்றாக பழகிய வார்த்தைகள்தான். அண்ணலும் நோக்கினான் அவளும் நோக்கினாள் இருவருக்கும் காதல் அரும்பியது. ஆக கண்கள் மனிதனின் உணர்வுகளைத் தூண்டவும், உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் கருவிகளாக அமைகின்றன எனலாம். பொதுவாக நண்பர்களோடு இணைந்து உனவு விடுதிக்கு சென்றால், பல வித பதார்த்தங்களை தேர்வு செய்து வரவழைப்பது வழக்கம். இதில் அனைத்தையும் முழுமையாக நம்மால் சாப்பிட முடிவதில்லை. இதை என்னுடைய குறையாக சுட்டிக் காட்ட என் நண்பர் ஒருவர் சொல்லும் வார்த்தைகள் இவைதான். "உனக்கு கண்ணு பெருசு வயிறு சிறுசு". நம்மில் பலர் இப்படி யாராவது சொல்லக் கேட்டிருப்போம். நமது வயிற்று பசிக்கும் கண்களின் திருப்தியடைதலுக்கும் இடையிலான வேறுபாடுதான் இதற்குக் காரணம் எனலாம்.

நமது சிந்தனை, செயல் மற்றும் நமது முடிவெடுத்தலில் இந்த கண்கள் என்ற விழிப்புலனின் தாக்கம் அல்லது பாதிப்பு அதிகம் எனலாம். கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீர விசாரிப்பதே மெய் என்று நமக்கு எவ்வளவு சொல்லிக் கொடுத்தாலும், கண்கள் காணும் காட்சியை நம்புவதைப் போல் வேறு எதையும் நாம் நம்புவதில்லை. உண்மை வேறானாலும், கண்ணால் காண்பதையே நாம் உறுதியாக நம்புகிறோம். ஏதாவது ஒரு புது வேலை அல்லது தொழிலை செய்யும்போது ஆர்வத்தோடு நம்மில் எழும் கேள்வி இதுதான், இந்த வேலை செஞ்சா நாலு காசு பார்க்கமுடியுமா?? இதில் நாலு காசு பார்க்கமுடியுமா என்பது பணம் சம்பாதிக்க முடியுமா என்பதைக் குறிக்கிறது. ஆனால் காசை பார்த்தா காந்தித் தாத்தா போல நாம் சிரிப்போம் என்று ஒரு தமிழ் திரைப்பாடலில் வரும். அதில் சொல்லும் காசை பார்த்தால் சிரிப்பு தானாக வருகிறது என்பது போல் உண்மையிலேயே கண்ணால் காசை பார்த்தால் நமது நடவடிக்கைகள் மாறுகின்றதாக சில ஆய்வுகள் கூறுகின்றன. அமெரிக்காவின் மின்னசோட்டா பல்கலைக்கழகத்தில் மார்கெட்டிங் துறையின் துணை பேராசிரியர் காத்லீன் வோஸ் என்பவரும் அவரது சக பணியாளர்களும் இணைந்து நடத்திய சில ஆய்வுகள் காசை பார்த்தால் மனிதர்களின் சிந்தனையில் காசை உலவவிட்டால் அவர்களது நடவடிக்கைகள் மாறுகின்றன, வேறுபடுகின்றன என்று நிரூபித்துள்ளன. வெறுமனே காசு அல்லது பணத்தின் இருப்பே மக்களை மாற்றிவிடுகிரது. ஆக்கப்பூர்வமான பாதிப்புகளாவும் இருக்கலாம் பாதகமான மார்றங்களாகவும் இருக்கலாம். பணம் காசுக்கு மனிதர்களின் கண்களுக்கு விருந்தாகும்போது, பணம் என்ற கருத்துருவேகூட மனிதர்களிடையே தன்னிறைவுக்கான உணர்வைத் தூண்டி அவர்களது குழு அல்லது சமூக மனப்பான்மையை குறைக்கிறது என்கிறார் காத்லீன் வோஸ்.

உதாரணமாக தனது வீட்டை விட்டு தொலைவில் சென்று படிக்கும் மாணவர் தன்னுடைய தங்கும் அறையை மாற்றும்போது தனது நண்பர்களை, உடன் படிக்கும் மாணவர்களை துணைக்கழைத்து சிரித்து பேசி மகிழ்ந்து, ஒருவருக்கொருவர் உதவும் வழமையில் புதிய அறைக்கு தனது பொருட்களையெல்லாம் கொண்டு சென்றுவிடுவார். ஆனால் ஒரு நல்ல வேலை கிடைத்து நல்ல வருமானம் பெறத் தொடங்கிய பிறகு வீடு மாற்ற வேண்டுமெனில் நண்பர்களை விடுத்து கூலிக்கு ஆள் வைத்து இந்த வேலையை முடித்து விடுவார். இது சிறப்பான தேர்வுதான். விரைவாகவும், எளிதாகவும் ஆட்கள் வீடு மாற்றத்திற்கு தேவையானதை செய்வார்கள், அதேவேளை நண்பர்களோடு சேர்ந்து வீடு மாற்றம் செய்யும்போது கிடைத்த மகிழ்ச்சிக்குரிய தருணங்களும், வேடிக்கையும் கிண்டலும் கலந்த நட்பின் ஆழமும் இழக்க நேரிடும். இதை மானுடவியல் கண்ணோட்டத்தில் பார்த்தால் ஆரம்பத்தில் மனிதனின் நாகரீக வளர்ச்சிக்கு முன்பான காலத்தில் ஒருவரது தேவையை பூர்த்தி செய்ய மற்றவரது உதவி தேவைப்பட்டது. வயிற்றுப் பசிக்கு உணவு சேகரிக்கவோ, வசிப்பதற்கு வீடு கட்டவோ என அனைவருக்கும் யாராவது ஒருவரின் உதவி தேவையாக இருந்தது. ஆனால் காலப்போக்கில் மனிதனின் நாகரீக வளர்ச்சியில் பல்வேறு நடைமுறைகள் மாறின. குறிப்பாக பண்டமாற்று முறை பணம் என்பதை அடிப்படையாகக் கொண்ட கொள்வனவு விற்பனையாக மாறியது. இதனால் மற்றவரின் உதவியில்லாமல் தனக்கு தேவையானதை வாங்கவும் பெறவும்கூடிய வசதி உருவானது. ஆக காலப்போக்கில் காசுள்ளவர்கள், பணம் படைத்தவர்களுக்கு மற்றவர்களின் உதவி அதிகம் தேவைபடவில்லை.

பணத்தை பார்த்தாலே மனிதர்களின் நடவடிக்கை மாறுகிறது என்பதையும் ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது. நான்கு பேர் சேர்ந்து உணவு அருந்த செல்லவோ, தனியாக சென்று பொருட்கள் வாங்கவோ என்ற ரீதியில், குழுவாக அல்லது தனியாக செய்யும் சில செயல்களை அடிப்படையாகக் கொண்ட வினாக்கள் நிறைந்த ஒரு வினாத்தாள் 61 மாணவர்களுக்கு கொடுக்கப்பட்டது. இதில் ஒரு சிலரது மேசைக்கு எதிரே பணத்தின் படமும் ஒரு சிலரது மேசைக்கு மேல் பூக்கள், இயற்கைக் காட்சி ஆகிய படங்களும் வைக்கப்பட்டன. இந்த வினாத்தாளுக்கு விடையளித்தவர்களில் பணத்தின் படத்திற்கு எதிரே அமர்ந்திருந்தவர்கள், பணத்தை அந்த படத்தில் பார்த்தவர்கள் பெரும்பான்மையானோர் தனிப்பட்ட நபர்களாக செய்யும் செயல்களை, தனியாக செய்யும் நடவடிக்கைகளை தெரிவு செய்தனர். மற்றவர்களோ குழுவாக செய்யும் செயல்களை பெரும்பாலும் தங்களது தேர்வாக குறித்திருந்தனர். ஆக பணத்தை பணத்தின் படத்தை கண்டாலே மனிதர்களின் எண்ணங்களும், முடிவுகளும் மாறுகின்றன என்பது கண்டறியப்பட்டுள்ளது.