யோங்லிங்கின் அம்மா ஒரு தீவிரமான கடவுள் பக்தர். எந்த நேரமும் புத்த மறைகளை ஓதிக்கொண்டே இருப்பாள். காலையில் இருந்து இரவு வரை சதா புத்த நாமம்தான் ஜபிப்பார். யோங்லிங் இதைக் கண்டு எரிச்சல்பட்டார். ஒரு நாள் தனது தாய் வேகவேகமாக புத்த நாமத்தை ஜபித்துக் கொண்டிருந்த போது, ஏதோ கேட்க விரும்புவது போல பாசாங்கு செய்து 'அம்மா, அம்மா' என்று கூப்பிட்டார். அம்மாவும் ஜபிப்பதை நிறுத்தி விட்டு, 'என்ன மகனே,' என்றாள். ஆனாலும் அவர் நிறுத்தாமல் 'அம்மா, அம்மா' என்று கூப்பிட்டுக் கொண்டே இருந்தார். அம்மாவுக்கோ ஒரே எரிச்சல். 'சனியனே, உனக்கு என்னாச்சி இன்னைக்கி,' என்று எரிந்து விழுந்தாள். உடனே யோங்லிங் புன்னகைத்தபடியே, 'அம்மா, சில தடவை உன்னைக் கூப்பிட்டதுக்கே இவ்வளவு கோபப்படுறியே. புத்தர் பெயரை ஒரு நாளைக்கு ஆயிரம் தடவை கூப்பிடுறியே. அவருக்கு எவ்வளவு கோபம் வராது?"
தந்திரக்காரர் சூ
சூ ஒரு பெரிய அறிஞர். ஆனால் தந்திரக்காரர். தம்முடைய நண்பர்களிடம் தந்திரமாகப் பேசி ஏமாற்றுவதில் வல்லவர். அவர் தூரத்தில் வந்தாலே நண்பர்கள் அலறியடித்து ஓடி ஒளிவார்கள். அந்த அளவுக்கு அவருடைய உடம்பெல்லாம் தந்திரம்.
ஒரு நாள் தாங் என்ற மற்றொரு நண்பரைப் பார்க்க சூ போனார். அவரும் பெரிய அறிஞர். இவர் போன நேரம் அவர் தமது படிப்பறையில் உட்கார்ந்து தீவிரமாகப் படித்துக் கொண்டிருந்தார். நண்பர் சூ வந்தது தெரிந்ததுமே, மகிழ்ச்சி அடைந்தார்.
"இந்தோ பாரு சூ. நீ பெரிய தந்திரக்காரன்தான். இன்னைக்கி என்கிட்டே உன் ஜம்பம் பலிக்காது. இங்கபாரு. நான் இந்த அறையில் உட்கார்ந்திருக்கேன். என்ன வெளியே போக வைக்க முடியுமா உன்னாலே? எங்க செஞ்சு காட்டு பார்ப்போம்," என்று சவால் விட்டார்.
'அப்படியா சங்கதி' என்று யோசித்த சூ, கொஞ்ச நேரம் கழித்து, 'வெளியிலே ஒரே குளிரா இருக்குது. பயங்கரமா காத்து வேறவீசுது. வீட்டுக்குள்ளே இருக்கறது தான் உனக்குப் பிடிக்கும். இந்த நேரத்துல நீ வீட்டுக்கு வெளியே நிக்கிறேன்னு வச்சுக்குவோம். இங்க உள்ளாற என்னென்ன வசதிகள் இருக்குதுன்னு நான் சொன்னா. நீ பிடிவாதமா வெளியே நின்னுருவியா? உள்ளே வரணும்ணு நினைக்க மாட்டே?" என்றார் சூ.
இந்தப் பேச்சில் ஒளிந்திருந்த தந்திரத்தைப் புரிந்து கொள்ளாத தாங். உடனே வெளியே போய் நின்று கொண்டு
"எங்கே, இப்ப நீ என்னை வீட்டுக்கு உள்ளே வரவழைக்க முடியுதா. பார்ப்போம்?" என்று சவால் விட்டார்.
உடனே சூ கைகொட்டி சிரித்தபடியே
'நான் தான் உன்னை வீட்டை விட்டு வெளியே போக வச்சிட்டேனே,' என்று கூறினார்.
|