• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-04 20:23:49    
இயற்கையோடு இசைவாக

cri

தமிழகத்தின் பலபகுதிகள் சில நாட்களுக்கு முன்பு வரை மழை பெய்துகொண்டிருந்தது.இப்போதும் கூட மப்பும் மந்தாரமுமாக, சில்லென்ற காற்று வீசி மேகம் கருத்து இதோ இப்போதே பொழிகிறேன் பார் என்பதாக சில இடங்களில் மழை மேகங்கள் வட்டமிட்டுக்கொண்டிருக்கின்றன. கோடைக்கால வெய்யிலும், மாரிக்கால சிலிர்ப்பான நீர்த்துளிகளாக பொழியும் மழையும் தமிழகத்து மக்கள் அனுபவிக்கும் இயற்கையின் இருவகை அரங்கேற்றங்கள் எனலாம். வெய்யிலும் இல்லாமல் மழையும் இல்லாமல் லேசான குளிரை மார்கழி, தை மாதங்களில் அனுபவிப்பது இயற்கையின் இலவச இணைப்பாக வரும் நிகழ்ச்சி எனலாம். ஆனால் உலகின் பல பகுதிகளில் தெளிவாக உய்த்து உணரக்கூடிய நான்கு பருவங்கள், நான்கு வகை தட்ப வெப்ப சூழ்நிலைகளாக இயற்கை ஒவ்வொரு வருடமும் 4 வகை நிகழ்ச்சிகளை அரங்கேற்றுகிறது. வசந்த காலம், கோடைக்காலம், இலையுதிர்காலம், குளிர்காலம் என்பதாக இயற்கை அன்னை வித விதமாக ஆடையுடுத்தி எழிலாய் காட்சி தருவதை இந்த பகுதிகளில் காணமுடியும். அந்த வகையில், கோடைக்காலக் காற்றையும், மழைக்கால சிலிர்ப்பையும் சுகித்த நமக்கு இங்கே முதன்முறையாக குளிர்கால அனுபவம். அடடா சொந்தக் கதையை சொல்ல வந்தீரோ?? என்று கேட்கும் நேயர்களுக்கு, நிச்சயம் இல்லை என்பதே பதில்.

சீன பாரம்பரிய மருத்துவத்தின் படி, பருவ நிலையிலான மாற்றங்களை மதிப்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான சமநிலையை நிலைநிறுத்த உதவும். மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான இந்த சமநிலையும், மனிதனின் உடலுக்குள்ளேயுள்ள அவயங்களுக்கிடையிலான உட்புற சமநிலையும் மனிதர்களை சுகவீனம் அடையாமல் காக்கிறது என்பது நம்பிக்கை.

இந்த இயற்கைசார், ஒட்டுமொத்த கருத்தமைவும், கண்ணோட்டமும் பருவநிலை மாற்றங்களுக்கு ஏற்ப நம்மை நாமே தயார் செய்து, உடல் நலனை சீராக வைத்துக்கொள்ள உதவும் என்கிறார் ஜி லியாங்சென் எனும் வல்லுனர். 79 வயதாகும் ஜி லியாங்சென் தனது 21வது வயது முதல் சீன மருத்துவத்தை செய்து வருகிறார். சிறு வயது முதலே சீன போர்க்கலைகளான டாய்ச்சி பகூவா ஷிங்யி ஆகியவற்றை பயிற்சி செய்தவர். சீன பாரம்பரிய மருத்துவராக மட்டுமல்லாது, சீன பாரம்பரிய மருத்துவ வரலாற்றிலும் ஆர்வம் கொண்ட சீன பண்பாட்டு அறிவாளராகவும் ஜி லியாங்சென் இருக்கிறார். உடல் நலனை சீராக பேணிக்காப்பது என்பது சீனப் பாரம்பரிய மருத்துவத்தில் மட்டுமல்ல, சீன பண்பாட்டிலும் நெருங்கிய தொடர்புகொண்டது என்கிறார் ஜி லியாங்சென். அவரது அனுபவத்தின் படி, மனித வாழ்க்கையை உயிராற்றலை பேணிக்காக்க மூன்று வழிமுறைகள் உள்ளன என்று இவர் நம்புகிறார். உணவு, மருத்துவம் மற்றும் ச்சி எனும் முக்கிய உள்ளாற்றை பேணுதல். பருவ நிலை மாற்றங்களுக்கு ஏற்ப இந்த வழிமுறைகளிலான முக்கியத்துவமும், முதன்மையும் மாறுபடவேண்டும் என்கிறார் ஜி லியாங்சென். குளிர்காலத்தில் மக்கள் தங்களது ஆற்றலை, சக்தியை பாதுகாக்கவேண்டும், சேமிக்கவேண்டும் அவ்வண்ணமே தங்களது உள்ளார்ந்த யின் சக்தியையும் பேணவேண்டும். சீனர்களின் நம்பிக்கையின்படி சக்தி அல்லது ஆற்றல் இருவடிவங்களாக, இருவகைகளாக உருவாக்கப்பட்டுள்ளது. யின் மற்றும் யாங் சக்திகள். யின் சக்தி அமைதியாக, ஓய்வாக இருக்கும்போதான் சக்தி, இது மெதுவானது, உள்ளார்ந்தது. யாங் சக்தி அசைவுகள் அல்லது நகர்வொடு தொடர்புடையது வேகமானது.

ஆக குளிர்காலத்தில் யாங் சக்தியை செயல்படுத்த சில மிதமான உடற்பயிற்சிகளையும் செய்யவேண்டும், அமைதியாக இருந்து யின் சக்தியையும் பேணவேண்டும் என்கிறார் ஜி லியாங்சென்.

ஜி லியாங்சென்னின் கருத்துப்படி சீனர்களுக்கும் மேற்கத்தியர்களுக்கும் இடையில் முக்கிய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக மேற்கத்தியவர்களுக்கு அதிகம் யாங் சக்தியும், சீனர்களுக்கு அதிகம் யின் சக்தியும் உள்ளதாக அவர் குறிப்பிடுகிறார். ஆக மேற்கத்தியவர்களின் உடல் யாங் சக்தியின் செழுமையால் சற்றே முரட்டுத்தன்மையை உடலுக்கு அளித்து குளிருக்கு ஏற்ப உடல் வெப்பமடைய உதவுகிறது. ஆனால் சீனர்களை போல அவர்களுக்கு பொறுமையும் நிதானமும், வளைந்துகொடுக்கும் தன்மையும் இல்லை என்கிறார் இவர்.

உணவு வகைகளில், அசைவ உணவு சாப்பிடுபவர்கள் ஆட்டிறைச்சியை சேர்த்துக்கொள்ளலாம். இயற்கையில் வெப்பமான உணவாக ஆட்டிறைச்சி கருதப்படுகிறது மேலும் ரத்தம் மற்றும் உடல் திரவங்கள் ஊற உதவக்கூடியது என்று நம்பப்படுகிறது.

இது தவிர கார் அரிசி எனப்படும் பழுப்பு நிற அரிசிக்கஞ்சி, சோளம், கேழ்வரகு ஆகியவற்றையும் உணவில் சேர்த்துக்கொள்ளலாம். தமிழகத்தில் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மார்கழிப்பனி பெய்ய சற்று குளிரடிக்கத்தான் செய்யும், எனவே நான் சொல்லும் குறிப்புகள் நிச்சயம் பயனுள்ளதாக அமையும் என்பது நம்பிக்கை.

நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று தமிழில் ஒரு பழமொழி உண்டு. அதாவது நாம் சாப்பிடும் அனைத்தையும் நன்றாக மென்று சாப்பிட வேண்டும். ஆனால் நம்மில் பலர் நாம் எதையும் சாப்பிடலாம், நொறுங்கத் தின்றால் போதும் நூறு வயது நிச்சயம் என்று நினைப்பதுண்டு. ஆனால் உண்மையில் நமது உடலுக்கு ஏற்றதா இல்லையா, தட்ப வெப்ப நிலைக்கு ஏற்றதா இல்லையா இதையெல்லாம் நாம் கவனித்தில் கொண்டு நாம் சாப்பிடும் பொருட்களை முடிவு செய்யவேண்டும். அமிழ்தமும் விடமாகலாம், விடமும் மருந்தாகலாம். அது எப்படி உட்கொள்ளப்படுகிறது என்பதே முக்கியம். எனவே கண்டதையும் சாப்பிடும் வழக்கத்தை மாற்றவேண்டும். உங்களுக்கு பிடித்திருக்கலாம், உங்களுக்கு ஏதும் ஆகாது என்று நீங்கள் நினைக்கலாம் ஆனால் தட்ப வெப்பச் சூழலும், பருவ நிலையின் மாற்றங்களுக்கு உங்களுடைய விருப்ப உணைவை உங்களுக்கு எதிராக செயல்படச் செய்ய வாய்ப்புள்ளது என்பதை மறக்கக்கூடாது. ஆனால் மருத்துவ வல்லுனர் ஜி லியாங்சென் ஒரு படி மேலே சென்று பல்சுவை உணவுப் பிரியர்களின் மனம் சோர்வடையாமல் இருக்க ஆறுதலாக அவர் சொல்வது. சரி எல்லாவற்றையும் சாப்பிடுங்கள் ஆனால் அளவோடு சாப்பிடுங்கள் என்கிறார் அவர். அளவோடு என்றால் குறைவாக என்று அர்த்தம். ஏன் இப்படி சொல்கிறார் இவர் என்று கேட்கத் தோன்றும். அதற்கு அவர் கூறும் காரணம். ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட உணவை சாபிடவேண்டும் என்ற ஆவல் தோன்றிவிட்டால் அதை அவர் சாப்பிடுவது நல்லதுதான் காரணம், அவரது ஆவல் ஒருவேளை அவரது உடலின் தேவையாகவும் அமையக்கூடும் என்கிறார்.

மனிதர்கள் தங்களது உள்ளார்ந்த ஆற்றலான ச்சி ஆற்றலை நிலை நிறுத்தி, தங்களது உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி, உணவு பழக்கத்தில் உரிய மாற்றங்களை செய்து, நலமான வாழ்க்கை நடத்தினால், குறிப்பாக உரிய நேரத்தில் உண்டு, உறங்கி, விழித்து, பணியை ஒழுங்கமைவோடு செய்தால் உடல் நலத்தோடு நன்றாக வாழலாம். பருவ நிலை மாற்றங்களையும், வேறுபட்ட சூழலில் வசிக்கவேண்டிய நிலை ஏற்பட்டால் அதையும் சமாளிக்கும் ஆற்றலையும் வளர்த்துக்கொள்ளலாம் என்கிறார் ஜி லியாங்சென்.