• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-05 16:27:24    
ச்சுவான் சாங் பற்றிய கதை

cri
முதல் ஓரிரு ஆண்டுகள் இந்தியாவின் வடக்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் உள்ள பல்வேறு புகழ் மிக்க பெளத்த மடாலயங்களுக்கு சென்றார். சமஸ்கிருத மொழியைக் கற்றுத் தேர்ந்தார். 631ஆம் ஆண்டின் பிற்பகுதியில் நாளந்தா சென்றடைந்தார். அங்குள்ள புத்தர் கோயில் மிகப் பெரியது. பத்தாயிரத்துக்கும் அதிகமான துறவிகள் அங்கு தங்கி மத ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். நாளந்தா பெளத்த விகாரையின் தலைமைக் குரு சீலபத்ரா நூறுவயதைக் கடந்தவர். அவர் வெகு காலத்திற்கு முன்பே சீடர்களை ஏற்பதையும், சொற்பொழிவு ஆற்றுவதையும் நிறுத்தி விட்டார். ஆனால் ச்சுவான் சாங் புத்தமதத்தில் கொண்டுள்ள ஆழ்ந்த ஈடுபாட்டையும், இடர்கள் பல கடந்து இந்தியாவுக்கு வந்திருக்கிறார் என்பதையும் கண்டு கொண்டதும் தனது கடைசிச்சீடராக ஏற்றார். பதினைந்து மாதங்கள் பெளத்த மறைகளைக் கற்றுக்கொடுத்து விளக்கினார். விரைவிலேயே ச்சுவான் சாங்கின் புகழ் இந்தியா முழுவதும் பரவியது. குரு சீலபத்ராவிடம் விடை பெற்று தென்னிந்தியாவுக்குச் சென்று, நான்காண்டுகள் காஞ்சி புரத்தில் தங்கி புத்தக்கல்வி கற்றார். 640இல் நாளந்தாவுக்குத் திரும்பி, சீனாவுக்குப் புறப்பட ஆயத்தம் செய்தார். நடுவில் கன்யகுப்ஜ மன்னர் ரஜபுத சீலாத்தியா, ச்சுவான் சாங்கைக் கெளரவிக்கும் வகையில் ஒரு மாபெரும் புத்த மறை பட்டி மன்றத்திற்கு ஏற்பாடு செய்தார். அந்த 18 நாள் கருத்தரங்கில் 6000 துறவிகளும் அறிஞர்களும் மட்டுமல்ல, 18 இந்திய தேசங்களின் மன்னர்களும் கலந்து கொண்டனர் மறை நூல் சொற்போரில் எவராலும் ச்சுவான் சாங்கை வெல்ல முடியவில்லை. அவருடைய புகழ் இந்தியா முழுவதும் கொடிகட்டிப்பறந்தது. பல மன்னர்கள் தங்களது அரசவைக்கு வந்து சிறப்பிக்குமாறு அழைத்தனர். ஒரு மன்னரோ, 100 மடாலயங்களைக் கட்டித் தருவதாகச் சொன்னார். ஆனாலும் ச்சுவான் சாங் தாயகம் திரும்புவதில் பிடிவாதமாக இருந்தார். இவ்வளவு தூரம் கஷ்டப்பட்டு இந்தியாவுக்கு வந்து விட்டு, ஏன் செல்கிறீர்கள்? என்று ஓர் இந்தியத்துறவி கேட்ட போது, 'எனது பேரரசர் நல்லவர், அறிஞர். குடிமக்கள் அவருக்கு விசுவாசமாக உள்ளனர். எனது தேசத்தில் பெற்றோர் குழந்தைகளை நேசிக்கின்றனர். குழந்தைகளோ பெற்றோரிடம் பாசமாக உள்ளனர். நீதிபதிகளும் சட்டங்களும் மதிக்கப்படுகின்றனர். நீதியும் நேர்மையும் மனிதாபிமானமும் நிலைநிறுத்தப்படுகின்றன. முதியோர்கள் தெய்வங்களாக வணங்கப்படுகின்றனர். அவர்களின் ஆழ்ந்த அறிவு மதித்துப் போற்றப்படுகிறது,' என்று பதில் சொன்னார்.

17 ஆண்டுகள் கழித்து 645ஆம் ஆண்டில் ச்சுவான் சாங் சீனாவுக்குத் திரும்பினார். மொத்தம் 25,000 கி. மீ பயணித்து, பற்பலப் பெருமைகளுடன் தாயகம் திரும்பிய அவரை, சாங்கன் நகரில், பேரரசர் தைஜோங் சார்பில் தலைமை அமைச்சர் பஃங் சுவான்லிங் எதிர்கொண்டு வரவேற்றார். நகர் முழுவதும் கடைகள் மூடப்பட்டு, அவரை வரவேற்க மக்கள் திரண்டனர். பேரரசர் தைஜோங் தம்முடைய கிழக்குத் தலைநகர் லுவோயாங்கில் ச்சுவான் சாங்கை சந்தித்து 10 மணி நேரத்திற்கு மேல் உரையாடி மகிழ்ந்தார். தமது அரசவையில் பெரிய அதிகாரி பதவியைத் தந்தார். ஆனால் ச்சுவான் சாங் அதை ஏற்க மறுத்து விட்டு, புத்தமறைகளைத் திரட்டி, மொழி பெயர்த்து, விளக்க உரை எழுதும் மாபெரும் பணியில் ஈடுபட்டார்.

இந்தியாவில் இருந்து தம்முடன் 657 மகாயான மற்றும் ஹூனயான சூத்திரங்களையும், பத்துக்கும் அதிகமான புத்த விக்கிரகங்களையும், புத்தர் பெருமானின் 150 அஸ்திகளையும் கொண்டு வந்திருந்தார். தற்போதைய சியான் நகரில் உள்ள வெள்ளை வாத்து விகாரையில் 19 ஆண்டுகள் தங்கி, ஒரு கோடியே 30 லட்சம் எழுத்துக்களைக் கொண்ட 74 சூத்திரங்களை மொழிபெயர்த்து, விளக்க உரை எழுதினார். 'இந்தியா' என்பது இன்று சீன மொழியில் 'இந்த்து' என்று அழைக்கப்படுகிறது. இந்தச் சொல்லை உருவாக்கியவர் ச்சுவான் சாங். சீனாவின் மேற்கும் பகுதியிலும், இந்தியாவிலும் உள்ள 138 தேசங்களில் பயணம் செய்து தாம் பெற்ற அனுபவங்களைத் தொகுத்து, புவியியல், வரலாறு, மொழி, பண்பாடு, மதம், வாழ்க்கை முறை, நாட்டுப்புற இயல் ஆகிய அம்சங்களுடன் ஒரு மாபெரும் நூலை கி. பி. 646ஆம் ஆண்டில் எழுதி முடித்தார். ஆப்கானிஸ்தானின் பாமியான் புத்தர், வெள்ளை வாத்து விகாரை, நாளந்தாமடம் போன்றப ல புகழ் மிக்க தலங்கள் பற்றிய குறிப்புக்கள் அதில் உள்ளன. "ஊகமாக எதையும் சொல்லவில்லை. உண்மையைச் சொன்னேன்," என்று பேரரசர் தைஜோங்கிற்கு எழுதிய கடிதத்தில் ச்சுவான் சாங் குறிப்பிட்டார். அவருடைய குறிப்புக்கள் உண்மையானவை என்பதை பிற்காலத்தில் தொல்லியல் ஆய்வுகளும், அகழ்வாராய்ச்சிகளும் நிரூபித்துவிட்டன.