ஒருவன் தன்னை சதுரங்க ஆட்டத்தில் பெரிய புலி என்று பீற்றிக் கொண்டான் ஒரு நாள் தொடர்ந்து மூன்று ஆட்டங்களிலும் அவன் தோற்றுப்போனான். மறு நாள் அவனுடைய நண்பர் கேட்டான்.
'என்னப்பா, நேத்து எத்தனை ஆட்டம் விளையாடினே?'
'மூணு'
'அப்படியா? நீ எத்தனை ஜெயிச்சே?'
"நானா. இந்தா பாரு மூணு ஆட்டம் விளையாடுனமா. முதல் ஆட்டத்துல நான் ஜெயிக்கலே. ரெண்டாவது ஆட்டத்துல என் எதிராளி தோற்கவில்லை. மூணாவது ஆட்டம் முடியறதுக்கு முன்னாலேயே, இத்தோட முடிச்சுக்கிடலாமான்னு கேட்டேன். அவன் ஒத்துக்கலை என்றான் கெட்டிக்காரத்தனமாக
துட்டுக்கு விளையும் பயிர்
ஒரு கிராமத்தில் ஒரு விவசாயி தனது தோட்டத்தில் கத்தரிக்காய் பயிரிட்டான். என்னதான் அடியுரம், தழையுரம், ரசாயன உரம் எல்லாம் போட்டாலும் செடிகள் நன்றாக வளரவில்லை. சுணங்கிச் சுணங்கி விழுந்து கொண்டிருந்தன. கடைசியில், அந்த ஊரில் இருந்த ஒரு மூத்த விவசாயியிடம் போய் யோசனை கேட்டான். அதற்கு அந்தக் கிழவன் கொஞ்சம் யோசித்துவிட்டு" நீ ஒண்ணு செய்யி ஒவ்வொரு கத்தரிச்செடிக்குக் கீழேயும் ஒரு செப்புக்காசு புதைச்சி வைய்யி நல்லா வளரும்," என்றான்.
'அய்யா, உரம் போட்டுவளராத செடி, துட்டு போட்டா வளர்ந்துருமா? ஒண்ணும் புரியலியே," என்று கவலையோடு கேட்டான் விவசாயி. 'அட பைத்தியக்காரர், பணம் இல்லேன்னா பிணம்னு உனக்குத் தெரியாதா?" என்று சொல்லிச்சிரித்தான் கிழவன்.
உலகமகா பொய்யன்
வூலிங் என்ற ஊரிலே ஒரு உலக மகா பெய்யன் இருந்தான். அவனுடைய அண்டப்புளுகு கேட்டு ஏமாறாதவர்கள் அந்த ஊரில் இல்லை என்று சொல்லலாம்.
ஒரு நாள் சந்தையில் ஒரு கிழவர் அவனைப் பார்த்து விட்டார். அருகில் அழைத்து, 'இந்தாப்பா, நீ ஏதோ பெரிய புளுகனாமே. எங்கே, எங்கிட்ட உன் புளுகு மூட்டையை அவுத்து விடுபார்ப்போம்,' என்று சவால் விட்டார். அதற்கு அவன், "அய்யோ, ஆளை விடுங்க சாமி, எனக்கு இப்போ அதுக்கெல்லாம் நேரமில்லை," என்று சொல்லியபடியே வேகமாக நடந்தான்.
"நில்லுடா, எங்கே ஓடுறே?" என்று இழுந்துப்பிடித்தார்.
"உங்களுக்குத் தெரியாதா? கிழக்கு ஏரி வத்திப்போச்சாம். ஆமைகள் எல்லாம் கரையில் ஒதுங்குதாம். ரெண்டு பிடிச்சிட்டு வந்து கறிசமைக்கலாம்னு," என்று சொல்லிவிட்டு விறுவிறு என்று நடந்தான்.
"அப்படியா சங்கதி, ஆமைக்கறி உடம்புக்கு குளிர்ச்சியாச்சே," என்று கிழவனாரும் நாக்கைச் சப்புக் கொட்டியபடியே அவனுக்குப் பின்னால் விரைந்தார். இருவரும் தலைதெறிக்கும் வேகத்தில் ஏரிக் கரைக்கு வந்து சேர்ந்தனர்.
"ஏரியில் தண்ணீர் நிறைந்து தளும்பிக் கொண்டிருந்தது."
அப்போது தான் கிழவருக்கு உறைத்தது இது பொய்யன் அவிழ்த்து விட்ட புளுகு என்பது.
|