• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-11 19:56:28    
ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு

cri
அறிவியல் முன்னேற்றங்களும், நவீன தொழில்நுட்பங்களும் இன்றைக்கு அதிகரித்துக்கொண்டிருக்கும் உலகில் நாம் வாழ்ந்துகொண்டிருக்கும். ஆலும் வேலும் பல்லுக்குறுதியாக இருந்த நாம் சுவாசப்புத்துணர்ச்சி ஏற்படுத்தும் பற்பசை என்று சொல்லும் விளம்பரத்தின் தாக்கத்தால் பற்பசைகளுக்கு பழக்கிக்கொண்டோம். இன்றைக்கு பச்சை நிறத்தில் நாம் வாங்கிய பற்பசை அடுத்த மாதத்தில் பல வண்ணங்களில், பல சுவைகளில் வரும்போது ஆச்சரியத்தோடு அதையும் வாங்கி பார்த்துவிடுகிறோம். இது விளம்பரங்களின் வெற்றி, விளம்பரங்கள் பரப்புரை செய்யும் இந்த புதிய பொருட்கள், குறிப்பிட்ட அந்த பொருளை தயாரிக்கும் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பட்டுப் பிரிவின் வெற்றி.

"அப்பா அப்பா கடைக்கு போறியா ஆமாம் கண்ணு உனக்கென்ன வேணும் சொல்லு...டாலர் பிஸ்கெட் டாலர் பிஸ்கெட் டாலர் பிஸ்கெட் வேணும்" இது குறைந்தது 30 ஆண்டுகளுக்கு முன்பாக வானொலியில் அடிக்கடி ஒலிபரப்பாகும் விளம்பரம். அன்றைக்கு இப்போது இருப்பது போல பல வகை பிஸ்கெட்டுகள் இருக்கவில்லை, இருந்தாலும் அது விளம்பரப்படுத்தப்பட்டு பரவலாக விற்பனையில் இல்லை. ஆனால் காலப்போக்கில் பிரிட்டானியா, பார்லே போன்ற நிறுவனங்கள் புதிய புதிய பிஸ்கெட்டுகளை தயாரித்து, விற்பனை செய்தன. இனிப்பு உப்பு பிஸ்கெட், சர்க்கரை தடவிய பிஸ்கெட், பல பழச்சுவைகளோடு க்ரீம் பிஸ்கெட் என்று பலப்பல தேர்வுகள் நுகர்வோருக்கு கிடைத்தது. இப்படி புதிய சுவைகளில் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்த எந்த ஒரு நிறுவனமும் செய்யும் பின்னணி வேலைதான் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, ஆங்கிலத்தில் ரிசர்ச் & டிவலப்மென்ட், சுருக்கமாக R & D.

ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு என்பது அவ்வளவு முக்கியமா என்ன? ஏன் ஒரே விதமான பற்பசையை அல்லது ஊட்டச்சத்து பானம் அல்லது சோப்பை பயன்படுத்தும் மக்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்று கேட்பவர்களுக்கு பதில் இதுதான். ஒரே பொருளையோ ஒரே நிறுவனத்தின் தயாரிப்பையோ அல்லது ஒரே தையற்காரரையோ பயன்படுத்துபவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் எண்ணிக்கையில் இவர்கள் குரைவே. மேலும் தற்போது எல்லாமே ஆயத்த அடிப்படை, ரெடிமேட், இன்ஸ்டன்ட் என்ற அதிவேக வாழ்க்கைக்குள் சிக்கிக்கொண்டுள்ள பலருக்கு, குறைவான விலையில், விளம்பரங்களில் இடம்பிடிக்கும் பொருட்களும் சேவைகளும் கிடைக்கும்போது...சிறுவயதில் பயன்படுத்தினேன் என்பதால் அதே தயாரிப்பைத்தான் பயன்படுத்துவேன் என்று நிற்கும் மக்கள் குறைவுதான். இதில் எது நல்லது எது கெட்டது என்று சொல்வதற்கில்லை. வெகுமக்கள் பயன்பட்டு பொருட்கள் அல்லது நுகர்வு பொருட்கள் துறையில் ஈடுபடும் நிறுவனங்கள் பல அதிகம் தங்களது பொருட்களின் விற்பனைக்கும், நிறுவனத்தின் முன்னெற்றத்திற்கும் அதிகம் செல்வழிப்பது இரண்டு முக்கிய அமசங்களுக்குத்தான். ஒன்று மக்களை தங்களது பொருட்களை வாங மூளைச் சலவை செய்யும் விளம்பரம். இரண்டு மூளைச்சலவையின் சாயம் வெளுக்காதபடி அமையும் புதிய புதிய தயாரிப்புகளை உருவாக்கும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு. ஆக கடைத்தெருவில் இன்றைக்கு கண்சிமிட்டும் ஒரு பொருள் பல மாதங்கள் அல்லது சில ஆண்டுகள் வரை குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேப்பாட்டு பிரிவின் ஆராய்ச்சிக்கூடத்தில் உருப்பெறாத பொருளாக எழுத்தும் எண்களுமாக இருந்தது என்பதே உண்மை. நுகர்வு பொருட்கள் என்று மட்டுமல்ல, புதிய மருந்துகள், புதிய மருத்துவ முறைகள் என புத்தாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு முன்னேற்றங்கள் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.

அவ்வளவு ஏன் இன்றைக்கு உலக அளவில் செல்வந்த நாடுகளில் ஒன்றாகவும், வல்லரசு நாடாகவும் உள்ள அமெரிக்கா இந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கென செலவழிக்கும் தொகை எவ்வளவு தெரியுமா, 330 பில்லியன் டாலர். இன்றைக்கு உலகில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறைக்கு அதிகம் செலவழிக்கும், செலவழிக்கும் என்பதைவிட அதிகம் முதலீடு செய்யும் நாடு அமெரிக்காதான். அதற்கு அடுத்த நிலையில் ஜப்பான் 130 பில்லியன் டாலர் முதலீடு செய்கிறது. ஆனால் அந்தத் தொகையை கடந்து வேறு ஒரு நாடு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கென அதிக அளவு முதலீடு செய்யும் இரண்டாவது பெரிய நாடாக இவ்வாண்டு மாறவுள்ளது. அந்த நாடு சீனா என்று யூகம் செய்தவர்களுக்கு பாராட்டு. ஆம் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் அறிக்கை ஒன்று கடந்த ஆண்டைவிட ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறைக்கு 20 விழுக்காடு அதிகத்தொகை முதலீடு செய்து ஜப்பனை முந்தி உலகளவில் இரண்டாவது இடத்தை சீனா பிடிக்கும் என்று கூறியுள்ளது. இவ்வாண்டு கிட்டத்தட்ட 136 பில்லியன் டாலர் தொகையை சீனா ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்யும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

புதிய வகை பொருட்கள், புதிய தொழில்நுட்பம், நவீன கட்டமைப்புகள் என நாட்டை சிறப்புடன் கட்டியமைக்க சீன நாட்டுக்கு இந்த தகவல், அதாவது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான முதலீட்டில் உலகளவில் இரண்டாவது பெரிய நாடாக உள்ள செய்தி, வரவேற்கத்தக்கது என கருதப்படுகிறது. சீனாவின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் தகவலின் படி 2005ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு சீனா 245 பில்லியன் யுவான் அதாவது 30.6 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்தது. அதில் 55 விழுக்காட்டுத் தொகை சீன நடுவணரசால் முதலீடு செய்யப்பட்டது. இந்த தொகைக்கும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் கணிப்பு அல்லது மதிப்பீட்டுக்கும் பெரிய இடைவெளி இருப்பது இருவேறு புள்ளி விபர அணுகுமுறையாக இருக்கக்கூடும் என்பது ஒருபுறமென்றால், இந்த மதிப்பீடு சீனாவுக்கும் சரி மற்ற வேகமாக வளர்ச்சியடையும் நாடுகளுக்கும் சரி, புதிய உந்துசக்தியாக அமைந்து, எதிர்காலத்தில் எட்டவேண்டிய இலக்காக மாறவேண்டும் என்பது மறுபுறம். பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் மதிப்பீடு உண்மையில்லாமல் போனாலும், சீனாவில் தொழில் நிறுவனங்கள் முதல் அரசு நிறுவனங்கள் வரை புத்தாக்க அடிப்படையில் விரிவாக்கம் அடைய முயன்று வருகின்றன என்பது உண்மையே. புத்தாக்கத்தையும், படைப்பாற்றலையும் சீனா வரவேற்று ஊக்கப்படுத்துகிறது. இந்த ரீதியிலான முயற்சிகள் நிச்சயம் கனிதரும். ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறையில் அதிக முதலீடு செய்து, அதையும் திறமையாக செலவழித்து புதிய பல பொருட்களையும், தயாரிப்புகளையும், தொழில்நுட்பத்தையும் உட்புகுத்தினால் முன்னேற்றம் காண்பது நிச்சயம்.