நடுக்கும் குளிர்காலத்தில் ஒரு நாள் இரவு, ஒரு பணக்காரர் பெரிய விருந்து அளித்தார். அந்த விருந்துக்கு பெரிய பெரிய மணிதர்களை அழைத்தார். கூடவே, தனது உறவினர் ஒருவரையும் அழைத்தார். அந்த உறவினரோ பாவம் ஏழை. உடுத்த சரியான உடைகள் இல்லை அதிலும் குளிர்காலத்திற்கு வேண்டிய கம்பளி கோட் இல்லவே இல்லை. என்ன செய்வது? வெறும் சட்டை மட்டும் அணிந்து கொண்டு வந்தார். ஆடம்பரமாக உடை உடுத்திய மற்ற விருந்தினர்கள் தமது வறுமையைப் பார்த்து சிரிப்பார்களே என்று பயந்தார். உடனே ஒரு விசிறியைக் கையில் எடுத்து, அடிக்கடி விசிறிக் கொண்டார். யாராவது பக்கத்தில் வந்தால், உடனே தனக்குத் தானே விசிறியபடியே,
"ஸ்" என்ன வெப்பம்! என்ன வெப்பம்!" என்று கூறிக் கொண்டார். இதைக் கண்டதும் ஒரு விருந்தினர்.
"என்னங்க இது, குளிர்காலத்துல, அதுவும் ராத்திரியிலே வெப்பம்னு சொல்றீங்களே," என்று கிண்டலடித்தார்.
"ஐயா, உங்களுக்குத் தெரியாது. குளிர்காலத்துல கூட எனக்கு ஜில்லுனு காத்து உடம்புல பட்டுக்கிட்டே இருக்கணும். இல்லேனா வேர்த்துக் கொட்டும்," என்று கூறி சமாளித்தார்."
அது வீட்டுக்காரரின் காதில் விழுந்தது. அவர் அந்த ஏழை உறவினரைப் பார்த்து, இந்த நேரத்துல எதுக்கு வீட்டுக்கு போறீங்க? இங்கேயே தங்குங்களே," என்று கேட்டுக் கொண்டார். 'உங்களுக்கு ஜில்லுனு காத்து வீச ஏற்பாடு செய்றேன்,' என்று கூறியபடியே, குளத்தை ஒட்டி இருந்த ஒரு சின்ன அறையை ஒதுக்கிக் கொடுத்தார்.
அன்றைக்குப் பார்த்து இரவில் குளிர் கடுமையானது. சிலுசிலுவென வாடைக் காற்று வீசியது. இதனால் குளத்தில் நீர் அலைகள் தோன்றி, மேலும் குளிர் நடுக்கியது. வீட்டுக்காரரோ மெல்லிய போர்வை ஒன்றை மட்டுமே கொடுத்திருந்தார். அது குளிர்தாங்கவில்லை. அந்த ஏழை உறவினர் என்ன செய்தார் தெரியுமா? போர்வையை நன்றாக உடம்பில் கட்டிக்கொண்டு குளத்தங்கரையில் வேகவேகமாக நடக்கத் தொடங்கினார். அப்படியாவது உடம்பில் சூடு ஏறட்டுமே என்ற நினைப்பு தான். ஆனால் வேகவேகமாக நடந்த போது, கால் தடுமாறி குளத்தில் விழுந்து விட்டார். அந்தச் சத்தத்தைக் கேட்ட வீட்டுக் காரர் எட்டிப்பார்த்து,
"என்னய்யா? என்ன ஆச்சு? இந்த ராத்தில் நேரத்தில் குளத்துக்குள்ளே என்ன பண்றீங்க?" என்று கேட்டார்.
அந்த ஏழை உறவினர் விட்டுக் கொடுக்காமல் பேசிச் சமாளித்தார்.
"ஹி, ஹி" உங்களுக்குத் தான் தெரியுமே எனக்கு வெப்பம்னா ஆகாது, நீங்க ஒதுக்கிக்கொடுத்த அறைக்குள்ளே கதகதப்பா இருந்தது. அதான் குளத்துல ஒரு முங்கு போட்டு, உடம்பை சில்லுனு ஆக்கலாமேன்னு பார்த்தேன்."
|