• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-18 19:13:54    
குளு குளூ அண்டார்டிகா

cri

நாம் வாழும் பூமி 7 முக்கியக் கண்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவை எவை என்று நம்மைக் கேட்டால் ஆசியா, ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, ஐரோப்பா, அண்டார்டிகா என்று வேகமாகச் சொல்லிவிடுவோம். நிலத்தை கூறுபோட்டு, எல்லைகளை வரைந்து நாடு, பிரதேசம், உன்னுடையது, என்னுடையது என்று அழகாக பிரித்து வரைபடத்தில் வண்ணங்களால் பிரித்து காட்டும் மகத்துவம் மனிதர்களின் சிறப்பு. ஆக அண்டார்டிகா தவிர்த்து மற்ற ஆறு கண்டங்களையும் மனிதன் கூறுபோட்டு, பிரித்து நாடுகளாக, நாட்டின் உரிமை பிரதேசங்களாக வைத்துள்ளான்.பூமியின் 90 டிகிரி மேற்கு முதல் 150 டிகிரி மேற்கு வரையிலான நில அலகு மட்டுமே எந்த ஒரு மனிதராலும் உரிமை கோரப்படாத நிலமாக இருந்து வந்துள்ளது. அது எங்கே இருக்கிறது என்றால், அண்டார்டிகாவில்தான். 1959ம் ஆண்டுக்கு முன்பு வரை என்னவோ பலரும் அண்டார்டிகாவின் சில பகுதிகளை தங்களுக்கு சொந்தம் என கூறி வந்தனர் என்பது உண்மை. அதை மற்ற நாடுகள் சரிதான் போப்பா என்று ஏற்க மறுக்கவும் செய்தன. ஆனால் இன்றைய தினத்தில் எந்த நாடும் உரிமைகொள்ளாத அல்லது உரிமை கோராத ஒரே இடமாக இருப்பது அண்டார்ட்டிகா கண்டம்தான். அதற்குக் காரணம் 1959ல் உருவாக்கப்பட்ட அண்டார்டிக் ஒப்பந்த முறை என்ற உடன்பாடு மற்றும் அது தொடர்பான ஆவணங்களின் தொகுதியே ஆகும். முன்னாள் சோவியத் யூனியன், அமெரிக்கா உள்லிட்ட 12 நாடுகள் அண்டார்டிகாவை அறிவியல் பாதுகப்பிடமாக, அறிவியல் ஆய்வுகள் மற்றும் சுற்றுசூழல் பாதுகாப்பு பணிகள் மேற்கொள்ளப்பட ஒப்புக்கொண்டன. மட்டுமல்ல அண்டார்டிகாவில் எந்த ராணுவ நடவடிக்கையும் செய்யக்கூடாது என்றத் தடையும் விதித்தன. பனிப்போர் காலத்திற்கு பிறகான முதல் ஆயுத கட்டுபாட்டு உடன்படிக்கை இது என்றும் கூட சொல்லலாம்.

என்னடா கொஞ்சம் இடம் கிடைத்தாலும் ஒரு குடிசையை போட்டு, நிலத்தை சுற்றி வளைத்து உரிமை கொண்டாடும் மனிதன் அவ்வளவு பெரிய அண்டார்டிகா கண்டத்தை விட்டுவிட்டானா என யோசிக்க வேண்டாம். மனிதர்கள் வசிப்பதற்கு, குடியேறுவதற்கு ஏற்ற சூழல் அங்கே இல்லை என்பதால்தான் அனேகமாக இன்றைக்கு அண்டார்டிகா மனித சஞ்சாரமற்ற கண்டமாக இருக்கிறது. உலகின் மிகக் குளிரான, மிக அதிகம் காற்று வீசக்கூடிய, அதிகம் காய்ந்துபோன அதாவது பசுமையற்ற கண்டம் அண்டார்டிகாதான். பனிக்கட்டியை திரைப்படங்களிலும், தொலைக்காட்சியிலும் பார்த்த நமக்கு அண்டார்டிகா 98 விழுக்காடு பனியால் சூழப்பட்டது என்று சொன்னால் கொஞ்சம் மிரட்சியாகத்தான் இருக்கும். ஆம் இந்த பனிசூழ் அண்டார்டிகா தென் துருவத்தில் அமைந்துள்ள ஒரு வெண்ணிற ஆடை போர்த்திய இயற்கை பேரெழிலாள். அண்டார்டிகாவின் 44 விழுக்காட்டு மிதக்கும் பனிப்படலம் காற்றில் அசையும் வெண்ணிற ஆடையாக காட்சியளிக்கிறது.

புவியியல் பாடம் போல் இருக்கிறதா நேயர்களே. தொடர்ந்து கவனியுங்கள் அண்டார்ட்டிகாவை சூழ்ந்துள்ள அல்லது போர்த்தியுள்ள பனிப்படலத்தின் சராசரி அடர்த்தி என்ன தெரியுமா. நீங்கள் உங்கள் குடும்பத்தினர் அனைவரது கரங்களையும் இணைத்து இவ்வளவு என்று சொல்ல நினைத்தாலும் உங்கள் கணிப்பு தவறாகவே இருக்கும். அண்டார்ட்டிக்காவை போர்த்தியுள்ள பனிப்படலத்தின் சராசரி அடர்த்தி 2.5 கிலோ மீட்டர். உலகின் 70 விழுக்காட்டு சுத்தமான நீர், குடிக்கக்கூடிய நீர், இந்த அண்டார்டிகாவின் பனிப்போர்வையாகவும், அதைச் சூழ்ந்து நிற்கும் பனிப்பாறைகளாகவும் உள்ளன. இந்த அடர்த்தியான பனிப்போர்வைக்கு பல ஆயிரம் மீட்டருக்கு அடியில் 70க்கும் மேலான ஏரிகள் உள்ளன. பனிப்பாறைகளுக்கு கீழே உறைந்து கிடக்கும் பல ஏரிகளில் 35 மில்லியன் ஆண்டுகளுக்கு மேலாக பனி மூடிக்கிடக்கும் ஏரிகளும் உண்டு. பூஜ்ஜியத்துக்கு கீழ் 85 லிருந்து பூஜ்ஜியத்துக்கு கீழ் 90 டிகிரி செல்சியஸ் வரை கூட இங்கே வெப்பநிலை அல்லது குளிர் நிலை இருக்கும். கோடைக்காலத்தில் பூஜ்ஜியத்துக்குக் கீழ் 50 அல்லது 60 டிகிரி இருக்கும். ஆக உலகின் மிகக் குளிரான, குளு குளூ அண்டார்டிகாவை பற்றி இவ்வளவு தகவல்கள் நாம் கூறக் காரணம், மனித குலம் எதிர்நோக்கும் உலக வெப்ப ஏறலை அதிகமாக, வேகமாக, அனுபவித்து வருவது இந்த அண்டார்டிகா என்பதும், உலக வெப்ப ஏறலுக்கான முன்னெச்சரிக்கை மையமாக அண்டார்டிகா மாறியுள்ளது என்பதுதான்.

சுனாமி வருவதற்கு முன் தகவல் தருவதற்கென முன்னெச்சரிக்கை மையம் அமைக்கப்படுவது போல், உலக வெப்ப ஏறலின் தீவிரத்தையும், அதன் விளைவுகளையும் நமக்கு முன்கூட்டியே அறிவிக்க அண்டார்டிகா உதவுகிறது. ஆம், அண்டார்டிகா பிரதேசத்தின் மேலான வளி மண்டலத்தில்தான் ஓசோன் படலத்தில் அதிக அளவிலான சேதம் ஏற்பட்டுள்ளது. அதன் காரணமாக பல்வேறு விளைவுகள் மற்றும் பாதிப்புகளுக்கு அண்டார்டிகா முகம் கொடுத்துக் கொண்டிருக்கிறது. அதை எல்லாவற்றையும் விட முக்கியமான கவனத்தை பிடிப்பது என்னவென்றால், அண்டார்டிகாவிலான எந்த ஒரு சின்ன மாற்றமும், உலகின் பருவ நிலையை, கால நிலையை குறிப்பிடத்தக்க அளவு பாதிக்க்கூடியது என்பதுதான்.

உலகின் 90 விழுக்காட்டு பனிப்படலும் சரி, 70 விழுக்காட்டு குடிநீரும் சரி இந்த தென் துருவக்கண்டத்தில் உள்ளது என்ற உண்மை அங்கே ஏற்படும் வெப்பமடைதலின் விளைவான பனி உருகுதல், உலக அளவில் கடல் நீரின் மட்டத்தை உயர்த்தும் என்ற கசப்பான உண்மையை நினைவூட்டுகிறது. தற்போது அங்கே வசந்தகாலம். துருவப்பகுதி என்பதால் தினமும் 24 மணி நேரமும் சூரிய ஒளி வீசிக்கொண்டிருக்கிறது. சூரியனின் ஒளி, அதிலும் ஓட்டை விழுந்த ஓசோன் போர்வையைத் துளைத்து புற ஊதாக் கதிர்களாய் வீசும் சூரிய ஒளி, பனியை உருகத்தான் செய்யும். அண்டார்டிகாவைச் சூழ்ந்த கடலின் பனிப்பாறைகளின் படிவங்கள் விரிசல் விழத்துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதெல்லாம் உலக வெப்ப ஏறலின் தெளிவான அடையாளங்கள், சமிக்ஞகள் இல்லையென்றாலும், அண்டார்டிகா மற்றும் ஆர்ட்டிக் பிரதேசங்கள்தான் அத்தைகைய சமிக்ஞைகளை தேடவேண்டிய இடங்கள், காரணம் சிறிதளவு வெப்பமான காலநிலை கூட உருகும் பனிக்கட்டியை நீரில், அதாவது கடலில் அமிழச்செய்து உருகச்செய்து, நிலத்தில் வாழும் உயிரினங்களுக்கும், உலக வெப்பநிலைக்கும் குழப்பங்களை, சிக்கலை, பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்கிறார் அமெரிக்க தேசிய அறிவியல் கழகத்தைச் சேர்ந்த டாம் வாக்னர்.

அண்டார்டிக் நிலவியல் அகழ்வு திட்டத்தின் மூத்த அறிவியலாளர்களில் ஒருவரான ராஸ் பாவல் என்பவர், அண்டார்டிகாவின் கடந்த காலத்தை திரும்பி பார்ப்பதன் மூலம் உலக வெப்ப ஏறல் மற்றும் காலநிலை மாற்றம் பற்றி தெரிந்துகொள்ள முடியும், இதுவும் ஒரு வழிமுறை என்கிறார். அதாவது கிட்டத்தட்ட 10 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக அண்டார்டிகா எப்படி இருந்தது என்பதை அறிந்து, அதிலும் எப்போதெல்லாம் அண்டார்டிகா சூடாக, கதகதப்பாக இருந்தது என்பதை அறியவேண்டும், காரணம் நாம் அண்டார்டிகாவின் வெப்பமான ஒரு காலகட்டத்தில் நுழையப்போகிறோம் என்கிறார் ராஸ். ஆக அண்டார்டிகாவின் பனிப்படலங்களில், கடல்பிரதேசத்தில் அக்ழ்வு செய்து முந்தைய வெப்பமான காலங்கள் விட்டுச்சென்ற தடயங்களைத் தேடிக்கொண்டிருக்கிறது ராஸ் உள்ளிட்ட அறிவியலர்கள் அணி.

குளு குளு அண்டார்டிகாவில் இத்தனை சங்கதிகள் இருக்கிறது. கிட்டத்தட்ட 4000 அறிவியலர்கள் பல்வேறு ஆய்வுகளை இந்த கண்டத்தில் இருந்தபடி நடத்திக்கொண்டிருக்கின்றனர். பனியே உருவான அண்டார்டிகாவின் பனிப்போர்வை விலகினால், அதாவது பனி உருகத்தொடங்கினால் என்ன ஆகும்...யோசித்து பார்த்தால் வயிற்றை பிசைகிறது. அடுத்த முறை ஐஸ்கிரீம் சாப்பிடும் போது நம்மில் ஒரு சிலருக்காவது அண்டார்டிகாவின் நினைவு வரும் என்று நம்புகிறேன்.