• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2006-12-19 18:43:52    
பேச்சோடு பேச்சாக

cri
மழையும் பெய்யுது மஞ்சள் வெய்யிலும் காயுது என்றொரு தமிழ்த்திரைப்படப்பாடல் ஒன்று உண்டு. கீழ்குந்தா நேயர் கே. கே. போகன், மணமேடு தேவராஜா போன்ற மூத்த நேயர்களுக்கு இது நினைவிருக்கலாம். லேசான தூறல் சாரைசாரையாக இறங்கிக் கொண்டிருக்கும் போதே, வானம் தெளிவாகி, மஞ்சள் நிறத்தில் வெய்யில் அடிக்கும் போது மண்வாசனை மேயெழும்பி வரும். இதைச் சீனாவில் வசந்தகால மழை என்கிறார்கள். Yu Guo Tian Qing-தெளிவான வானில் இருந்து வீழும் மழைத்தூறல்களாம். அப்படி வசந்த மழை பெய்து முடித்தது மே மண்ணில் இருந்து மூங்கில் குருத்துக்கள் முளைவிடுமாம்-YU Hou Chun Sun-மழை பெய்து ஓய்ந்தது மே ஒரே அமைதி. காற்று தணிகிறது. கடல் அலைகள் ஓய்கின்றன. இனி என்ன? அடுத்த காற்று ஆர்ப்பரித்து வரும் முன்னே பாயை விரித்துப் படகைச் செலுத்த வேண்டியது தானே-Yi Fan Feng Shun-இளந்தென்றல் வீசும் அழகான பகல் பொழுதில் நடுக்கடலில் அமைதியான படகுப் பயணம் எவ்வளவு ஆனந்தம்!

ஆனாலும், வானிலையின் போக்கை யார்தான் கணிக்க முடியும்? "வானிலை அறிக்கை! அடுத்த 36 மணி நேரத்திற்குள் தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யக் கூடும்" என்று வானொலி அறிவிப்பாளர் திரும்பத்திரும்ப 36 மணி நேரமும் கூறிக்கொண்டிருப்பார். ஆனாலும், ஒரு மழைத் துளி கூட, மேகத்திரையைக் கிழித்துக் கொண்டு எட்டிக்கூடப்பார்க்காது. ஏனென்றால், Feng Yun Tu Bian-காற்றும் மழையும் தங்களது போக்கைத் திடீர் திடீர் என மாற்றிக் கொள்ளுமாம். அல்லது Qing Tian Pi Li-தெளிவான வானில் இருந்து திடீரென மழை கொட்டுமாம். அதை விட மோசம்-Xue Shang Jia Shuang-நடுக்கும் குளிருடன் கூடவே உறைபனியும் பெய்து உடம்பைக் கடிக்குமாம். துன்பங்கள் மட்டும் தொடராக வந்து கொண்டே இருக்கும். தமிழிலே ஒரு பாடல் உண்டு தெரியுமா?

ஆவின மழைபொழிய இல்லம் வீழ

அகத்தடியாள் மெய்நோவ

அடிமைசாக

மாவீரம் போகுதென்று விதை

கொண்டோட

வழியிலே கடன்காரன் மறித்துக்

கொள்ள

சாவோலை கொண்டொருவன்

எதிரே செல்லத்

தள்ள வொண்ணா விருந்து வரச்

சர்ப்பந்தீண்டக்

கோவேந்தர் உழுதுண்ட கடமை

கேட்கக்

குருக்களோ தட்சணைகள்

கொடு என்றாரே!

-பசுமாடு கன்று போடுகிறது. மழை பெய்ய வீடு இடிகிறது. மனைவிக்கோ காய்ச்சல். வேலைக்காரன் செத்துப் போனான். நிலத்தில் ஈரம் தாய்வதற்கு முன் விதைக்கணுமே என்று ஓடினால் வழியிலே கடன்காரன் வந்து 'எனக்கு பதில் சொல்லிட்டுப்போ' என்று மறிக்கிறான். அந்த நேரம் பார்த்து அடுத்த ஊரில் இருந்து இழவு சொல்ல ஒருவன் வருகிறான். 'போயிட்டு நாளைக்கு வாங்களேன்' என்று சொல்லித் தட்டிக்கழிக்க முடியாத ஒரு விருந்தாளி வருகிறார். என்ன செய்வது? என்று திசைத்து நிற்கும் போது பாம்பு தீண்டுகிறது. இனி உழுது விதைச்ச மாதிரிதான் என்று அலுத்துக் கொள்ளும் வேளையில், நிலவரி கேட்டு கிராம நிர்வாக அதிகாரி வருகிறார். நேரம் காலம் தெரியாமல் கோயில் பூசாரியும் வந்து, "தட்சணை தாரும்" என்று கேட்கிறார்.

அய்யே மெத்தக்கடினம், வாழ்க்கை மெத்தக் கடினம் என்று இராமச்சந்திரக் கவிராயர் பாடிய பாடல் இது. இப்படி ஒரேயடியாக சலித்துக் கொள்ளவும் வேண்டாம். இரவு கழிந்தால் நிச்சயம் பொழுது விடியும்-Tian You Bu Ce Feng Yun, Ren You Dan Xi Huo Fu-வானத்திலே காற்றும் மேகங்களும் மாறி மாறி திரள்வது போல, நல்ல காலமும் கெட்ட காலமும் மாறி மாறி வரும். ஆகவே காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ளலாமே!