ஒரு பணக்காரன் தனது வீட்டுக்கு விருந்தாக வந்த ஒரு மனிதனிடம் தனது அருமை பெருமைகளை பீற்றிக்கொண்டிருந்தான். வந்தவனும் வாய் பிளந்தபடி கேட்டுக் கொண்டிருந்தான். கடைசியில் முத்தாய்ப்பாக அந்தப் பணக்காரன் இரண்டு விரல்களை உயர்த்திக் காட்டியபடி,
"சொர்க்கத்துல இருக்கிற சூரியன், சந்திரன் அந்த ரெண்டு மட்டும் தான் இந்த வீட்டுல இல்லே" என்று தற்பெருமையோடு கூறினான். அவன் சொல்லி வாய் மூடவில்லை. வீட்டுக்குள்ளே இருந்து எட்டிப் பார்த்த வேலைக்காரப் பையன்.
"ஐயா, சமையலறையிலே விறகு இல்லே," என்றான்.
உடனே சமாளித்துக் கொண்ட பணக்காரன் மூன்றாவது விரலையும் உயர்த்தி. "இந்த வீட்டுல சூரியன், சந்திரன் அப்புறம் விறகு, இந்த மூணும் மட்டுமே இல்லே" என்றான்.
காணாமல் போன உணவு
ஒரு மனிதன் ஒரு நாள் நண்பன் ஒருவனை விருந்துக்கு அழைத்தான். ஆனால் வீட்டிலே சரியான உணவு இல்லை. ஆகவே ஒருசில உணவு வகைகள் மட்டுமே பரிமாறப்பட்டன. உணவுக்குச்சியை கையில் எடுத்ததுமே, அவை வயிற்றுக்குள் மாயமாய் மறைந்து விட்டன. மேஜை காலியாகக் கிடந்தது. நண்பன் கேட்டான்.
"அப்பா, ஒரு விளக்கு கொண்டு வாயேன்"
'விளக்கா? எதுக்கு?' என்று ஆச்சரியப்பட்டான் விருந்துக்கு ஏற்பாடு செய்தவன்.
"அதுவா, மேஜை மேலே எதையுமே காணோம். அதான் விளக்கேத்தி தேடிப்பார்க்கலாம்னு நினைச்சேன்" என்றார் விருந்தாளி.
ஒளிந்து தின்னும் கறையான்
வீட்டுக்கு வந்த விருந்தாளியைக் கூடத்தில் உட்காரவைத்து விட்டு, வீட்டுக்காரர் அடிக்கடி சமையலறைக்குள் புகுந்து கொண்டார். விருந்தாளிக்கு சந்தேகம்.
'எதுக்காக இந்த ஆள் நம்மளை வரச்சொல்லிட்டு, சமையல் கட்டுல ஒளியுறான்?' மெல்ல எட்டிப்பார்த்தார். அங்கே வீட்டுக்காரர் அவசர அவசரமாக பலகாரங்களை தின்று தீர்த்துக்கொண்டிருந்தார். விருந்தாளி ஓசைப்படாமல் கூடத்திற்குத் திரும்ப வந்து உட்கார்ந்து கொண்டு, ஓங்கிய குரலில்.
'கூடம் ரொம்ப நல்லாக் கட்டியிருக்கே,' என்று பாராட்டினார்.
'பின்னே சும்மாவா?'
ஒவ்வொரு தூணும் பர்மா தேக்குல இழைச்சு இழைச்சுக் கட்டுனதுல்லே,' என்று பெருமைப்பட்டுக் கொண்டார் வீட்டுக்காரர் சமையலறைக்குள் இருந்தபடியே
'ஆனா ஒண்ணு. இவ்வளவு அழகான தூண்களில் கரையான் பிடிச்சிருக்கு,' என்றார் விருந்தினர்.
"கறையானா? இருக்காதே. எங்க இருக்கு?" என்று பதறியபடியே சமையலறையில் இருந்து ஓடிவந்தார் வீட்டுக்காரர்-வாய் நிறைய உணவுப் பண்டங்களுடன். அதற்கு விருந்தாளி
'கறையான் எப்படி கண்ணுக்குத் தெரியும்? அது திங்கிறப்போ எல்லாம் ஒளிஞ்சிக்கிடுதே' என்றார் பதறாமல்.
|