• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-08 22:37:21    
முள்ளை முள்ளால்

cri

நித்தம் நித்தம் நெல்லுச்சோறு நெய் மணக்கும் கத்திரிக்கா, நேத்து வச்ச மீன் குழம்பு என்னை இழுக்குதய்யா...பாடலைக் கேட்கும் போது நம்மில் பலருக்கு நாவில் நீரூரும். சூடான சோறும், ஒரு நாள் கழிந்த மீன் குழம்பும், நெய் மணக்கும் கத்தரிக்காயும் அடடா, அட்டகாசமான பொருத்தம் இல்லையா... ஆனால் ஒரு சிலர் நான் சொல்வதைக் கேட்கும்போதே, ஒரு வித சங்கடமான உணர்வு ஏற்பட்டு, என்ன சுவையோ, என்ன பொருத்தமோ..கத்தரிக்காயையும், மீனையும் எப்படி மக்கள் அவ்வளவு எளிதாக சாப்பிடுகிறார்களோ என்றும் யோசிக்கக்கூடும். ஒரு குறிப்பிட்ட உணவு வகையின் மீதான் ஆர்வம், விருப்பம் என்பது தவிர, ஒரு சில பொருட்கள் நமது உடலுக்கு தோதாக அமைவதில்லை, எல்லோரும் சாப்பிடும்போது தனது உடலுக்கு மட்டும் சில பொருட்கள் தீங்கு ஏற்படுத்தக்கூடியதாக அமைகின்றன என்ற காரணங்களாலும் இந்த சங்கடமான உணர்வும், ஏன் வெறுப்பும் கூட ஏற்படுகின்றது. நாம் குறிப்பிட்ட இந்த சிக்கல், ஒவ்வாமை எனப்படுகிறது. ஆங்கிலத்தில் அலர்ஜி.

ஒவ்வாமையை சுருக்கமாக ஆனால் தெளிவாக விளக்கவேண்டுமென்றால், ஒரு குறிப்பிட்ட பொருளை நம் உடல் ஏற்றுக்கொள்ளாமையின் காரணமான விளைவு எனலாம்.

ஒவ்வாமையில் பல வகை உண்டு அன்பர்களே. உணவுப்பொருட்களில் ஒவ்வாமை, சில மருந்துகளில் ஒவ்வாமை, சுட்டெரிக்கும் சூரிய ஒளிக்கு ஒவ்வாமை, மாசு தூசால் ஏற்படும் ஒவ்வாமை இப்படி பல ஒவ்வாமைகள் உண்டு. இளம் வயதில் கணிதப்பாடத்தைக் கண்டாலே எட்டிக்காயாய் கசக்கும் அனுபவத்தை நீங்கள் தவறாக எண்ணக்கூடாது. அது ஒவ்வாமை அல்ல. எனக்கு தெரிந்த ஒரு நண்பர் சிறிதளவு தூசி இருந்தாலும் குறைந்தது 50 அல்லது 60 முறை தொடர்ச்சியாக தும்மிக்கொண்டே இருப்பார். ஆஸ்துமா கூட ஒவ்வாமையினால் ஏற்படும் நோய் என்று சொல்லலாம். அடியேனுக்கு வெயிலில் அதிக நேரம் இருந்தாலும், கோடையில் பருத்தியாடைத் தவிர வேறு ஆடை அணிந்தாலும் ஒவ்வாமை ஏற்பட்டு தோலில் அரிப்பு ஏற்படுவதுண்டு. உங்களில் பலருக்குக் கூட இந்த வகை அனுபவங்களும், ஒவ்வாமைகளும் இருக்கக்கூடும். ஆனால் உணவு பொருட்கள் சிலவற்றுக்கு ஒவ்வாமை ஏற்படுவதுதான் கொடுமை. நம்மில் பலர் ஒரு சில பொருட்களை உணவில் சேர்த்துக்கொள்ளமாட்டோம், காரணம் அதை உண்பதால் வயிற்றில் கோளாறு ஏற்படுகிறது அல்லது சரியான ஜீரனம் ஏற்படவில்லை என்ற கரணங்களாக நாம் சொல்வோம். பாலடைக்கட்டி சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படுகிறது எனவே நான் தை சேர்ப்பதில்லை, கருவாடு சாப்பிட்டால் ஒத்துக்கொள்ளவில்லை எனவே அதைக் கண்டாலே காத தூரம் ஓடிவிடுவேன் என்றெல்லாம் நம்மில் பலர் சொல்லக்கூடும். இவையெல்லாம் உணவுப்பொருட்களுக்கான நம் உடலின் ஒவ்வாமையே.

பெரியவர்களாகிய நமக்கு இதெல்லாம் அனுபவத்தின் வாயிலாக தெரிந்து நாம் நமக்கு ஒவ்வாத பொருட்களை தவிர்த்துவிடுகிறோம். குழந்தைகளுக்கு ஏற்படும்போது என்ன ஏது என்று கண்டுபிடிக்கவே நமக்கு மண்டை காய்ந்துபோகும். நிகழ்ச்சியைக் கேட்டுக்கொண்டிருக்கும் பெற்றோருக்கும் இந்த நிலை நன்றாக புரியும். இப்படித்தான் அமெரிக்காவில் எலிசபெத் என்ற குழந்தை நிலக்கடலை வெண்ணெய் வைத்து ரொட்டி சாப்பிட்ட போது, திடீரென் மூச்சடைத்து, அவளது சுவாழக்குழாயில் வீக்கம் ஏற்பட்டு சில வினாடிகளில் அவள் உயிருக்கு போராடும் நிலை. இது நடந்தபோது அக்குழந்தைக்கு வயது 14 மாதங்கள் மட்டுமே. ஒரு கடலையின் சிறிய துண்டு அவளது உயிருக்கே அச்சுறுத்தலானது. ஒவ்வாமையால் ஏற்பட்ட விளைவுகளை நீக்கி அவளை மருத்துவர்கள் உயிர் பிழைக்க வைத்தனர். பெரியவர்களான நம்மால் நமக்கு ஒவ்வாத பொருட்களை தவிர்த்து ஒதுங்கியிருக்க முடியும் ஆனால் குழந்தைகளுக்கு இதெல்லாம் எப்படி புரியும்? எவ்வளவு கவனமாக நாம் பார்த்துக்கொண்டாலும், மற்ற குழந்தைகளிடமிருந்தோ அல்லது நண்பர், உறவினர் வீட்டிலோ ஒவ்வாத பொருளை குழந்தை சாப்பிட்டு விட்டால்? யோசிக்க வேண்டிய ஒன்று அல்லவா? மட்டுமல்ல இப்படி ஒவ்வாத பொருள் கண்கூடாக தெரிந்து தவிர்ப்பது ஒன்றும் பெரிதல்ல, ஒருவேளை ஒரு குறிப்பிட்ட உணவில் பல பொருட்களோடு குழந்தைக்கு ஒவ்வாத பொருளும் சேர்த்திருக்க, அதை அறியாமல் நாமும் குழந்தைக்கு சாப்பிடக் கொடுக்க, விளைவு எப்படியிருக்கும்? நினைக்கவே கொஞ்சம் பயமேற்படுகிறது அல்லவா?

ஆக இந்த வினோதமான பிரச்சனையை, அதாவது ஒருவேளை நம்மை அறியாமல் நமகு ஒவ்வாத பொருளை நாம் சாப்பிடப்போக அதனால் ஏற்படும் விளைவுகளை தவிர்ப்பது எப்படி? இந்த திசையில் செய்த யோசனைகளின் தொடர்ச்சியாகவோ என்னவோ, அமெரிக்காவில் ஒரு விசித்திரமான ஆய்வை சில மருத்துவர்கள் மேற்கொண்டனர். நிலக்கடலை, முட்டை உள்ளிட்ட சில பொருட்களுக்கு ஒவ்வாமை கொண்ட சில குழந்தைகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எந்த பொருட்களுக்கு ஒவ்வாமை உள்ளதோ அதே பொருட்களை சிறிய அளவில் சாப்பிடச் செய்து, உடலை அப்பொருட்களுக்கான ஒவ்வமையை தகர்க்க இயலுமா? என்ற கேள்வியை அடிப்படையாகக்கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு, ஆமாம் ஒருவேளை இந்த வகை முயற்சி பலன் தரக்கூடும் என்பதாக உணர்த்தியுள்ளது. அதாவது நம்முடைய பாணியில் சொன்னால், முள்ளை முள்ளால் எடுக்கும் வழிமுறை.

கிட்டத்தட்ட ஈராண்டுகள் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வில் நாம் முன்னர் குறிப்பிட்ட குழந்தை எலிசபெத்தையும் ஈடுபடுத்த அவளது பெற்றோர் உடன்பட்டனர். தைரியமான அந்த பெற்றோரின் முடிவு இன்றைக்கு ஒவ்வாமை தொடர்பான ஆய்வில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்த உதவியிருக்கிறது. ஈராண்டுகால ஆய்வின் பிறகு தற்போது 7 வயது கடந்த எலிசபெத் தவறுதலாக சிறிதளவு நிலக்கடலையை சாப்பிட்டாலும் பெரிதளவு ஒவ்வாமை அறிகுறிகள் ஏற்படவில்லை. இதை அவளது தாய் கேரி தாங்கள் அதிர்சடசாலிகள் என்று மகிழ்ச்சியோடு குறிப்பிடுகிறார்.

ஆனால் இந்த வழிமுறையை நீங்களாக பின்பற்ற வேண்டாம் என்று எச்சரிக்கிறார், இந்த ஆய்வை மேற்கொண்ட டியூக் பல்கலைக்கழக மருத்துவ மையத்தைச் சேர்ந்த மருத்துவர் வெஸ்லி பர்க்ஸ். ஏனென்றால் ஆய்வின் போது குழந்தைகள் மருத்துவர்களின் மேற்பார்வையிலும், ஆய்வுகள் வல்லுனர்களின் கண்கானிப்பிலும் நடைபெற்றன, எனவே ஒருவேளை ஒவ்வாமையின் அறிகுறிகள் தீவிரமானாலும் அதை சரியாக கையாண்டு, குணப்படுத்த உரிய மருத்துவர்களும், நிபுணர்களும் இருந்தனர். நீங்களாக இதை செய்தால் அச்சுறுத்தல், ஆபத்து அதிகம் என்று அவர் எச்சரிக்கிறார். நியாம்தானே!!

இந்த ஆய்வு இன்னும் பரவலாக்கப்பட்டு, பெரிதளவில் மேலதிக ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டால், ஆயிரக்கணக்கில் ஒவ்வாமை பிரச்சனையால் ஏற்படும் அவசர மருத்துவ சிகிச்சை குழப்பங்களும், சில நூறு உயிரழப்புகளும் தவிர்க்க இயலும், என்பது ஆக்கப்பூர்வமான செய்தியாகும். மருத்துவர் வெஸ்லி பர்க்ஸின் கருத்தின் படி இன்னும் 5 ஆண்டுகளில் குழந்தைகளின் உணவு ஒவ்வாமை பிரச்சனைக்கான சிகிச்சை பரவலாக வழங்கப்படக்கூடும். அமெரிக்காவில் மட்டுமே நிலக்கடலைக்கு ஒவ்வாமைகொண்ட 15 லட்சம் பேர் இருக்கின்றனர்.

உலகளவில் இன்னும் எத்தனை லட்சம் பேர் இன்னும் வேறு பொருட்களுக்கு ஒவ்வாமை கொண்டிருக்கின்றனரோ.

ஆக இந்த ஆய்வு இன்னும் பரவலாக்கி, முள்ளை முள்ளால் எடுக்கும் வழிமுறையில் ஒவ்வமை ஏற்படுத்தும் பொருளையே அதற்கு எதிர் மருந்தாக பயன்படுத்தி, முற்றாக ஒவ்வாமையை நீக முடியாமல் போனாலும், ஒவ்வாமையால் ஏற்படும் பாதிப்புகளைக் கட்டுப்படுத்தினாலே மக்கள் பலர் நிம்மதி பெருமூச்சி விடுவர்.