• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-01-15 17:03:49    
செவிக்கு இசையாகும் சீனமொழி

cri

நாம் என்ன சொல்கிறோம் என்பது நமது வார்த்தைகளால் மட்டுமே புரிந்துகொள்ளப்படுவதில்லை, எந்த தொனியில் நாம் அந்த வார்த்தைகளைச் சொல்கிறோம் என்பதும் இந்த புரிதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஏய், இங்கே வா என்று நாம் சாந்தமாக ஒருவரை அழைப்பதற்கும் ஏய் இங்கே வா என்று வெறுப்புடன் அழைப்பதற்கும் வேறுபாடு உண்டு, இல்லையா. இங்கே வார்த்தைகள் மாறவில்லை ஆனால் சொல்லப்படும் விதம் மாறுபடும் போது பொருள் மாறுபடுகிறது. பழம் வேண்டுமா என்பதை கேட்கும் தொனிக்கு ஏற்ப பொருள் மாறுபடும். ஆங்கிலம் உள்ளிட்ட சில மேற்கத்திய மொழிகளிலும் இந்த அம்சம் காணப்படுகிறது. நாம் ஒரு வாக்கியத்தை சொல்லும் விதத்திலான மாற்றம் கேள்வியாகவோ, அல்லது ஆச்சரியம், கோபம் என உணர்வுகளின் வெளிப்பாடாகவோ புரிந்துகொள்ளப்படுகின்றன. ஆனால் இதில் வேடிக்கை என்ன வென்றால், வார்த்தைகளின் பொருளில் என்ந்த மாற்றமும் இல்லை.

பழம் என்றா பழம்தான், இங்கே என்றால் இங்கேதான் ஆனால் வார்த்தைகளை ஒன்று சேர்த்து ஒரு வாக்கியமாக்கி உச்சரிக்கும்போது சற்று கேட்கும் தோரணையை, தொனியை மாற்றினால், நாம் சொல்ல வரும் கருத்து முற்றிலும் மாறுபட வாய்ப்புள்ளது. "ஆ ஹா...வில்லங்கமான எதையோ சொல்லப்போறான்யா இவன்" என்று வடிவேலு பாணியில் யோசிக்க வேண்டாம்.

உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழியாகிய சீன மொழியை கற்கவேண்டும் என்ற ஆர்வம் இன்றைக்கு பல்வேறு நாடுகளில் பரவலாக காணப்படுகிறது. உங்களில் பலருக்கும் இந்த ஆர்வம் இருப்பதை நாம் அறிவோம். சீன மொழியைக் கற்க விரும்பும் பலரும் ஆரம்பத்தில் கொஞ்சம் அதிகமாகவே குழம்பி நிற்பதை காணலாம். இதற்கு சீன மொழியின் தன்மையும் அதன் நெளிவு சுளிவுகள் பொதுவாக பிற நாட்டவருக்கு எளிதில் மனதில் பதியாமையும் முக்கியக் காரணங்களாகச் சொல்லலாம். உதாரணமாக சீன மொழியில் எல்லாமே உச்சரிப்பை பொறுத்தே அமைகிறது. ஒரு எழுத்தின் உச்சரிப்பு ஒலி மாறினால் அந்த எழுத்தொடு இணைந்த மற்ற எழுத்துகளால் உருவான் வார்த்தையின் பொருளே மாறிவிடும் நிலை ஏற்படும். ஹிந்தி மொழி தெரிந்தவர்களுக்கு க என்ற ஒரு எழுத்துக்கு நான்கு ஒலி இருப்பது தெரியும். அதாவது, க(ka), க(kha), க(ga), க(gha) . அதே போலத்தான் சீன மொழியிலும். நான்கு முக்கிய ஒலி அல்லது உச்சரிப்பு தொனிகள் உண்டு. அ என்று எழுத்தை, ஒரே நேர்கோட்டு, சமநிலை உச்சரிப்பாக அ என்றும், மேலெழும் ஓசை கொண்ட ஆ என்றும், வலித்து இழுத்து உச்சைக்கும் ஆ அ என்றும், சரிந்து விழும் உச்சரிப்பில் அ என்றும் நான்கு வகைகள். ஆம் அன்பர்களே சீன மொழி ஒலியின், உச்சரிப்பின் வலிமையால் சிறப்பு பெறும் மொழியாகும். சீன மொழியை ஆங்கிலத்தில் டோனல் லாங்குவேஜ், ஒலிசார் மொழி என கூறுகின்றனர்.

இப்படி ஒலி சார்ந்த, ஒலி அடிப்படையிலான மொழியாக இருப்பதால் சீன மொழியைக் கற்பவர்களுக்கு மட்டும் குழப்பம் ஏற்படுவதில்லை, பொதுவாகவே மனிதர்களின் தலைமைச் செயலகம் என்றழைக்கப்படும் மூளைக்குமே குழப்பத்தை ஏற்படுகிறது என்கின்றனர் சீன அறிவியலர்கள். மனிதர்களின் மூளை இடது வலதாக இரு பாகங்களாக அமைந்துள்ளதை நாம் அறிவோம். பொதுவாக இடது பக்க மூளை பேச்சு, மொழி இவற்றை புரிந்துகொள்ளும் செயல் நடைபெறும் பகுதியாகவும், வலது பக்க மூளை இசையை புரிந்துகொள்ளும் செயல் நடைபெறும் பகுதியாகவும் அறிவியலர்களால் கூறப்படுகிறது. ஆக பேச்சை புரிந்துகொள்ள இடது பக்க மூளை, இசையை புரிந்துகொள்ள வலது பக்க மூளை என்ற அமைவில் நமது தலைமைச் செயலகம் செயல்பட்டுக் கொண்டிருக்க, இந்த செயல்பாட்டை குழப்புகிறது சீன மொழி என்கின்றனர் சீனாவின் கிழக்கு பகுதி அன் ஹூய் மாநிலத்தின் ஹெஃபய்யில் உள்ள

சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள். சீன மொழியின் வார்த்தைகளை உச்சரிக்கக் கேட்கும் மனித மூளை ஒரு நொடியின் 200 பாக அளவில், 200 மில்லி செகன்டில் அதை இசையாக நினைத்துக் கொள்கிறது. பின்னர் சுதாரித்து வார்த்தைகளின் உச்சரிப்பு ஒலியை உணர்ந்து பெயர்க்கத் தொடங்குகிறது என்று சன் லன் தலைமையிலான ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தாய் மொழியாக சீன மொழியை பேசும் சீனர்கள் மேற்கத்தியவர்களை விட மற்ற நாட்டினரை விட அதிகமாக வலது பக்க மூளையை பயன்படுத்துகின்றனர் என்றும் இந்த ஆய்வு உணர்த்துகிறது. இந்த குறிப்பிட்ட ஆய்வில், இசையில் எந்த அடிப்படை பயிற்சியும் இல்லாத 22 இளைஞர்கள் ஒலியில்லா அல்லது பேசா திரைப்படம் ஒன்றை பார்க்கும் அதே வேளையில் அவர்களது கவனம் திரைப்படத்திலிருந்து சிதறாத வகையில் ஆனால் அவர்களுக்கு கேட்கும் அளவில் சீன மொழிச் சொற்கள் வாசிக்கப்பட்டன. அப்படி வாசிக்கப்பட்டபோது இந்த ஆய்வில் பங்குகொண்டவர்களின் மூளையில் ஏற்பட்ட அலைகள் பதிவு செய்யப்பட்டன. அதாவது இந்த சீன மொழிச் சொற்கள் உச்சரித்து அதை கேட்ட 200 மில்லிசெகன்டில், இந்த ஒலி மூளையின் முழு கவனத்தை ஈர்ப்பதற்கு முன்னதாகவே இந்த மூளை அலைகள் ஏற்பட்டன, அதுவும் மூளையின் வலது பக்கத்தில் வலுவான அலைகள் பதிவாயின. இந்த ஆய்வில் பேசா திரைப்படம் பயன்படுத்தப்பட்டது சீன மொழியின் ஒலிசார் தன்மையிலிருந்து ஆய்வில் பங்கேற்றவர்களின் கவனத்தை திசை திருப்பவே. இந்த ஆய்வு பல்லாண்டுகால மூளை தொடர்பான விவாதங்கள், சிக்கல்களுக்கு தீர்வாகவும் அமைவதாக சன் லின் கூறுகிறார். 19ம் நூற்றாணுடு தொடக்கம் இடது பக்க மூளை பேச்சை புரிந்துகொள்ள, வலது பக்க மூளை இசையை புரிந்துகொள்ள என்று பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால் ஏன் இப்படி மூளை பேச்சுக்கு தனியாக, இசைக்கு தனியாக என்று வேலை பிரித்து செய்யவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்கள் சிக்கல்களாக நிற்கின்றன. ஒரு சாரார் பெச்சும், இசையும் இரு வேறு செயல்பாடுகளுக்கு உதவுகின்றன என்பதால் என்று சொல்ல மறு சாரார் பேச்சும் இசையும் இரு வேறு ஒலித்தன்மையுடையவை, இருவேறு ஒலிச் செயல்பாடுகள் என்பதால் என்கின்றனர். இந்நிலையில் இந்த இருசாராரது கருத்துகளுக்கும் இணக்கம் ஏற்படுத்த ஒலிசார் மொழியான சீன மொழியின் தங்களது ஆய்வு உதவும் என்கிறார் சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர் சன் லின்.

சீன மொழி இயற்கையிலேயே இசைத்தன்மையுடையது. சீன மொழியின் எழுத்துக்கள் ஒவ்வொன்றும் நான்கு விதமான உச்சரிப்புகள் கொண்டவை. இந்த ஒலி மாற்ற உச்சரிப்பே மூளையை சீன மொழியைக்கேட்கும் போது இசை எனத் தவறாக யோசிக்க வைக்கிறது என்பதே இந்த அறிவியல் ஆய்வின் கருத்து. செவிக்கும் சிந்தைக்கும் இசையாகவே கேட்கும் சீன மொழியை கற்கும் ஆவல் அதிகம் ஏற்படுகிறதா.