க்ளீட்டஸ்: அடுத்து காங்கேயம் பி. நந்தகுமார் எழுதிய டிசம்பர் 4ம் நாள் ஒலிபரப்பான சீன் ஔணவு அரங்கம் நிகழ்ச்சி பற்றிய கடிதம். நிகழ்ழ்சியில் கோழிக்கறி சமைப்பது எப்படி என்று சொல்லக் கேட்டதும் எனக்கும் என் மனைவிக்கும் சிரிப்புதான் வந்தது. ஆனால் கலையரசி அன்றைய சமையல் குறிப்பில் சொன்னதைப் போல் காளான் சேர்த்து கோழிக்கறி சமைத்தோம். இதுவரை கோழிக்கறியோடு காளானைக் கலந்து செய்ததில்லை. செய்து பார்த்தபோது சுவை அருமையாக இருந்தது. குறிப்பு வழங்கிய கலையரசி அவர்களுக்கும், சீன வானொலிக்கும் என் நன்றிகள் என்று எழுதியுள்ளார்.
கலை: நந்தியாலம் டி. தணிகாச்சலம் எழுதிய கடிதத்தில் டிசம்பர் 13ம் நாள் ஒலிபரப்பான கேள்வி பதில் நிகழ்ச்சியின் மூலம் நானும் சீன வானொலி நிலையமும் என்ற பொது அறிவுப்போட்டியில் வெற்றி பெற்றவர்கள் பற்றிய அறிவிப்பில் தங்கள் நேயர் மன்றத்தினரின் பெயரும் வாசிக்க கேட்டு மகிழ்ந்ததாகவும் எழுதியுள்ளார். மேலும், அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு ஐம்பெரும் விழாவாக ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்றபோது, தனது மன்றத்தினர் 6 பேருடன் இணைந்து தான் கலந்துகொண்டதாகவும், முந்திய இரவு விடுதியில் தங்களை தமிழ்ப்பிரிவின் தலைவி கலையரசி அவர்கள் சந்தித்து பேசயதாகவும், 15வது கருத்தரங்கு ஆரணியில் நடைபெற்றபோது சந்தித்து பேசிய நினைவுகளைப் போல் இம்முறையும் சந்தித்து பேசும் வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
க்ளீட்டஸ்: கருத்தரங்கு பற்றி ஆரணி நேயர் ஜெ. அண்ணாமலை எழுதிய கடிதத்தில், 18வது கருத்தரங்கில் தமிழ்ப்பிரிவிலிருந்து கலையரசி அவர்கள் நேரில் கலந்துகொண்டு சிறப்பித்தது மகிழ்ச்சியடையவைத்தது என்று குறிப்பிட்டுள்ளார். டிசம்பர் 13ம் நாள் கேள்வி பதில் நிகழ்ச்சியில் நானும் சீன வானொலி நிலையமும் என்ற போட்டியின் வெற்றியாளர்களை அறிவித்தபோது ஆரணி நேயர் மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் இடம்பெற்றதைக் கேட்டு மகிழ்ச்சியடைந்ததாகவும் எழுதியுள்ளார்.
கலை: அடுத்து சென்னை என். ராஜேந்திரன் எழுதிய கடிதம். டிசம்பர் 17ம் நாள் ஒலிபரப்பில் உடல் ஊனமுற்றோர் தொடர்பான கட்டுரை சிறப்பாக இருந்தது. 18ம் நாள் ஒலிபரப்பில் விளையாட்டுச் செய்திகளில் ஆசிய விளையாட்டு போட்டிகள் மற்றும் பரிசு பெற்றவர்கள் பற்றிய தகவல்களை கேட்க உற்சாகமாக இருந்தது. இச்செய்திகளைக் கேட்டதும் நாமும் விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்ற ஆவல் எழுந்தது என்று எழுதியுள்ளார்.
க்ளீட்டஸ்: அடுத்து வேதாரண்யம் பஞ்சநதிக்குளத்தைச் சேர்ந்த 12ம் வகுப்பு மாணவரான தி. மணிகண்டன் அழகு தமிழில் எழுதிய கடிதம். தமிழின் அமிழ்தாய், அறிவின் ஊற்றாய், காற்றாய் என் மனதில் வீசும் சீன வானொலியே, தினமும் நான் கேட்கும் அதிகாலை நேரக் குயில்களின் ஓசையை விட பல மடங்கு இனிமையாய் கொஞ்சும் கிளியாய் பேசி மகிழவைக்கும் உனக்கு நிகர் எவருமில்லை. வருங்காலத்தில் ராணுவத்தில் பணிபுரியும் என்பது என் ஆவல். இந்திய சீன நட்புறவுக்காக நான் பாடுபடுவேன். கற்றது கையளவு கல்லாதது உலகளவு. சீனாவை பற்றி நான் கற்றதும் கேட்டறிந்ததும் சில. மேலும் அறிய சீன வானொலி உதவும் என்று எழுதியுள்ளார்.
|