 கடந்த ஞாயிறன்று ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் பிரிவின் இறுதியாட்டம் விறுவிறுப்பாக நடந்தது. உலகத் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள சுவிட்சர்லாந்து நாட்டு ரோஜர் ஃபெடரர், 5வது இடத்தில் உள்ள சிலி நாட்டு ஃபெர்னான்டோ கொன்சாலஸை 7 - 6, 6 - 4, 6 - 4 என்ற நேர் செட்களில் வென்று ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன் கோப்பையை தனதாக்கினார். கிரான்ட் ஸ்லாம் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் அதிக பரிசுப்பணமும், புகழும் பெற்றுத்தரும் உலகத்தர டென்னிஸ் போட்டிகளில் 2007ம் ஆண்டு ஆஸ்திரேலியன் ஓபன் சாம்பியன் பட்டத்தையும் சேர்த்து மொத்தம் 10 பட்டங்களை வென்றுள்ளார் ஃபெடரஸ் எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் ரோஜர் ஃபெடரர். கடந்த 4 ஆண்டுகள் காலத்தில் இந்த அசுர வேக வெற்றிக் கோப்பைகள். இதுவரை அதிக பட்ட கிரான்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றவர் அமெரிக்காவின் பீட் சாம்ப்ராஸ். அவர் வென்றவை மொத்தம் 14. அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் ராஜர் ஃபெடரர் இந்த எண்ணிக்கையை எட்ட வாய்ப்பு உண்டு. ஆனால் இவ்வாண்டின் இதர கிரான்ட் ஸ்லாம் போட்டிகளான ப்ரிட்டனின் பிம்பிள்டன், பிரெஞ்சு ஓபன், அமெரிக்கன் ஓபன் ஆகிய பட்டங்களையும் அடுத்த ஆண்டு ஜனவரியில் ஆஸ்திரேலியன் ஓபன் பட்டத்தையும் அவர் வென்றாக வேண்டும். தற்போதைய நிலையில் அவரது வெற்றி அணிவகுப்பை தடுத்த நிறுத்தக்கூடிய வீரர்கள் குறைவே. சாதனைகளை குவித்தபடி வெற்றிகளைதோளில் சுமந்து வேகமாக சென்று கொண்டிருக்கிறார் ரோஜர் ஃபெடரர்.
|