
நிலநடுக்கம்
சீனாவில், நிலநடுக்கத்தைக் கண்டறிய உதவும் பாம்புகள்
பாம்புகளின் செயல்பாட்டைக் கண்காணித்து நிலநடுக்கத்தைக் கண்டறியும் புதிய முறைமை ஒன்றைச் சீன அறிவியலாளர்கள் உருவாக்கியுள்ளனர்.
தென் சீனாவின் குவாங் சி சுவாங் இனத் தன்னாட்சிப் பிரதேசத்தின் தலைநகர் நான்னிங்கில் அடிக்கடி நில நடுக்கம் நிகழ்வது வழக்கம். அதே வேளையில் அங்கு ஏராளமான பாம்பினங்களும் உண்டு. எனவே, நான்னிங் நகர நிலநடுக்க ஆய்வுப் பணியகத்தைச் சேர்ந்த நிபுணர்கள், பாம்புகளின் செயல்பாட்டில் ஏற்படும் மாற்றத்தைக் கொண்டு, நிலநடுக்கத்தை முன்கூட்டியே கண்டறிய விரும்புகின்றனர்.

பூமியிலுள்ள எல்லா விலங்கினங்களிலும் பாம்புகள் தான் நிலநடுக்கத்தை மிகக் கூர்மையாக உணரக் கூடியவை என்று நிபுணர்கள் தெரிவித்தனர். பாம்புகள் 120 கிலோமீட்டருக்கு அப்பால் ஏற்படும் நிலநடுக்கத்தை, 5 நாட்களுக்கு முன்னரே கண்டு உணர முடியும். ஆராய்ச்சிக் குழுவினர், அங்குள்ள பாம்புப் பண்ணையிலுள்ள பாம்புகளை வீடியோ மூலம் கண்காணித்தனர். வீடியோ கேமராக்கள், கணினியமைப்புடன் இணைக்கப்பட்டு, 24 மணிநேரமும் பாம்புகளின் செயல்பாட்டைக் கண்காணிக்கும் படியாகப் பொருத்தப்பட்டுள்ளன.
நிலநடுக்கம் ஏற்படுவதை உணர்ந்தால், பாம்புகள் அவற்றின் பொந்துகளிலிருந்து வெளியே வந்து விடும். அப்படிக் கடும் நிலநடுக்கம் நிகழுமானால்,பாம்புகளிடம் வழக்கத்திற்கு மாறான நடத்தைகள் காணப்படும். அப்போது நிலநடுக்கத்திலிருந்து தப்பிப்பிழைக்க அவை சுவருடன் முட்டிமோதும் என்றார்கள் நிபுணர்கள்.

பிரான்சில் சீன மொழி ஆர்வம்
பிரான்ஸ் நாட்டில், மேன்மேலும் அதிகமான இளைஞர்கள் சீன மொழியைக் கற்றுக்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறார்கள். பிரான்சில் இது வரை, சீன மொழியைக் கற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை 12 ஆயிரத்தைத் எட்டியுள்ளது. தவிர, வேறு 2500 பிரெஞ்சு மாணவர்கள், சீனாவில் கல்வி பயில்கிறார்கள். இவர்கள் படித்து முடித்து நாடு திரும்பிய பின், பிரான்சிலான சீன மொழிக் கல்வியை மேம்படுத்துவர் என்பதில் ஐயமில்லை.
தற்போது, பிரான்சின் தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகள் பலவற்றில் சீன மொழிப்பாடம் துவங்கியுள்ளன. ஆனால், சீனமொழி ஆசிரியர்கள் பற்றாக்குறையாக உள்ளனர். எனவே, சீனாவிடமிருந்து சீன மொழி ஆசிரியர்களை உட்புகுத்தப் பிரான்சு விரும்புகிறது. சீனாவும் பிரான்சும் பரஸ்பரம் கல்வித் தகுதியை ஏற்றுக்கொள்வது பற்றிய உடன்படிக்கையும் ஏற்படுத்தப் படும் என்பது குறிப்பிடத்தக்கது.
|