வேகமாக வளரும் மேற்கு சீனாவின் பொருளாதாரம்
cri
சீ.வா.நி. வணக்கம் நேயர்களே, இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சியில் வேகமாக வளரும் மேற்கு சீனாவின் பொருளாதாரம் பற்றி கூறுகின்றோம். அறிவிப்பாளர், மேற்குச் சீனாவின் 2வது பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சி 2006ஆம் ஆண்டு நவம்பர் 29ம் நாள் முதல் டிசெம்பரி 2ம் நாள் வரை, சீனாவின் செங்து நகரில் கோலாகலமாக நடைபெற்றது. இப்பொருட்காட்சியின் தலைப்பு, மூலவளம், புத்தாக்கம், ஒத்துழைப்பு என்பதாகும். 2005ஆம் ஆண்டு டிசெம்பர் 8ம் நாள் முதல் 11ம் நாள் வரை மேற்கு சீனாவின் முதலாவது பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சி யுன்னான் மாநிலத்து KUN MING நகரில் நடைபெற்றது. இப்பொருட்காட்சியில் 1520 கோடி யுவான் மதிப்புள்ள ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டன. இத்தகவலைச் சீனக் கம்யூனிஸ்ட் கட்சி யுன்னான் மாநிலக் கமிட்டியின் பிரச்சாரத் துறைத் தலைவரும் யுன்னான் மாநிலத்து பண்பாட்டு அமைப்பு முறையின் சீர்திருத்த மற்றும் பண்பாட்டுத் துறை வளர்ச்சியின் தலைமைக் குழு அலுவலகத் தலைவருமான ஹுவாங் ஜுயுன் எமது செய்தியாளரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
முதலாவது பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சி பெரும் செல்வாக்கை ஏற்படுத்தியதோடு, மேற்கு பகுதியின் வளர்ச்சியைத் தூண்டுவது, அனைத்து சீன மக்களும் நாட்டின் மேற்கு பகுதி வளர்ச்சியில் கவனம் செலுத்துவது, மேற்கு சீனாவின் வளர்ச்சியைப் பல்வேறு நாடுகள் கவனிப்பது ஆகியவற்றில் ஆக்கப்பூர்வமான பங்கையும் ஆற்றியுள்ளது. இதனால், யுன்னான் மாநிலம் பண்பாட்டு யுன்னான் என்ற வேண்டுகோளை முன்வைத்து, நாட்டின் பண்பாட்டுத் துறை வளர்ச்சியில் முன் மாதிரிப் பங்கை ஆற்றியுள்ளது. மேற்கு சீனாவின் பண்பாட்டுத் துறை வளர்ச்சி வரலாற்றில் ஒரு மைல் கல்லாகத் திகழும் முதலாவது பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சி, அதன் எதிர்காலத்துக்கு ஆழ்ந்த செல்வாக்கை ஏற்படுத்தியுள்ளது. முதலாவது பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சிக்கும் இரண்டாவது பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சிக்குமிடையில் பல பொது அம்சங்கள் உள்ளன. அதாவது அவை இரண்டும் பண்பாட்டின் மூலம் மக்களின் கவனத்தைத் தம் பக்கம் ஈர்த்து, அவர்களுக்கு தார்மீகச் செல்வத்தைக் கொண்டுவருவதோடு, பொருட்காட்சி மூலம் சீனாவின் மேற்கு பகுதியை மக்கள் அறிந்துகொண்டு, அதற்கு ஆதரவும் உதவியும் அளிப்பதற்கும் இவை துணை புரிகின்றன. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்சுவான் மாநிலக் கமிட்டிப் பிரச்சாரத் துறையின் நிரந்தரக் குழுவின் துணைத் தலைவரும் மேற்கு பகுதிப் பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சியகத்தின் நிர்வாகக் குழுவின் அலுவலகத் தலைவருமான hou xiong fei எமது செய்தியாளரிடம் கூறியதாவது,
சீனக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்சுவான் மாநிலக் கமிட்டி மற்றும் அரசின் ஆதரவைப் பெற்று, சீன மத்தியக் கமிட்டி மற்றும் அரசின் தொடர்புடைய வாரியங்களின் தலைமையில், ஸ்சுவான் மாநிலத்தின் தொடர்புடைய வாரியங்கள், ஸ்சுவான் மாநிலத்தின் பல்வேறு நகரங்கள் மற்றும் தன்னாட்சிப் பிரதேசங்கள் ஆகியவற்றின் கூட்டு முயற்சிகள் மூலம் இந்தப் பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சி நடைபெற்றது என்றார் அவர். நடப்புப் பொருட்காட்சியை நடத்தும் ஸ்சுவான் மாநிலம் நீண்டப் பண்பாட்டு வரலாறும் செழிப்பான தேசிய இனப் பண்பாடும் உடைய மாநிலம் ஆகும். மேற்கு சீனாவின் 12 மாநிலங்கள், தன்னாட்சிப் பிரதேசங்கள் மற்றும் மாநகரில் இம்மாநிலத்தின் பொருளாதாரம் ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்துள்ளது. இதன் விளைவாக, இரண்டாவது பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சியில் ஸ்சுவான் மாநில காட்சியகத்தில் வைக்கப்பட்ட பொருட்கள் தரமானவை. அவற்றின் தனிச்சிறப்புகள் தெளிவானவை. பரிந்துரை செய்யப்பட்ட பண்பாட்டுத் துறைத் திட்டப்பணிகள் பலவிதமானவை. அவையனைத்தும் நாட்டின் 9 முக்கிய பண்பாட்டுத் துறைத் திட்டப்பணிகளின் கோரிக்கைக்கிணங்கச் செவ்வனே தேர்ந்தெடுக்கப்பட்டவை. இதனால், சந்தையில் நுழையும் வாய்ப்பு அவற்றுக்குக் கிடைத்தது. தவிர, ஸ்சுவான் மாநிலம் மேம்பாடான மனிதப் பண்பாட்டுச் சூழ்நிலையைக் கொண்டுள்ளது. மக்கள் அதில் கவனம் செலுத்துகின்றனர். அதை வளர்ச்சியுறச் செய்ய வேண்டும் என்று விருப்பமும் தெரிவித்துள்ளனர். இத்தகைய பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சியை நடத்துவதன் மூலம், மேற்கு பகுதியின் பண்பாட்டு வளர்ச்சியைத் தூண்டி, அதன் உள்ளடக்கங்களையும் செல்வாக்கையும் பிரச்சாரம் செய்து விரிவாக்கி, மேற்கு சீனாவின் பண்பாட்டுத் துறை படிப்படியாக நாடு முழுவதிலும் உலகிலும் பரவத் துணை புரிய வேண்டும் என்பது ஸ்சுவான் மாநிலம் இப்பொருட்காட்சியை நடத்தியதன் நோக்கம் ஆகும். செங்து நகரிலிருந்து வந்த ஆசிரியர் தியெனும் அவருடைய மனைவியும் இந்தப் பொருட்காட்சியை நுணுக்கமாகப் பார்வையிட்டதோடு, நிழற்படங்களையும் எடுத்தனர். ஆசிரியர் தியென் கூறியதாவது,
அனைத்து காட்சியகங்களும் தத்தமது தனிச்சிறப்புகள் கொண்டுள்ளன. செங்து அகம் சற்று பெரியது. செங்துவில் நீண்ட காலமாக வாழ்ந்துவரும் நான், இந்நகரை நன்கு அறிந்துகொள்வது இன்றே முதல் தடவை. இந்தப் பொருட்காட்சி மூலம், மேலும் அதிகமானோர் எமது செங்துவை அறிந்துகொண்டு வருகை தருவார்கள். செங்துவின் எதிர்காலம் மேலும் அருமையாக இருக்கும் என நான் நம்புகின்றேன் என்றார் அவர். நகரவாசிகளுக்குப் பொருட்காட்சி இலவசமாகத் திறந்துவிடப்படுவது இதுவே முதல் முறையாகும். இருப்பினும், அதன் பயனை அலட்சியம் செய்ய முடியாது என்று செங்து நகரவாசி சியு அம்மையார் எமது செய்தியாளரிடம் கூறினார். அவர் மேலும் கூறியதாவது,
எமது செங்து பற்றி, குறிப்பாக அதன் வரலாறு பற்றி பலருக்குத் தெரியாது. இந்தப் பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சி நடைபெறுவது இன்றியமையாதது என்றார் அவர். 4 நாள் நீடித்த இப்பொருட்காட்சியில் பண்பாட்டுத் திட்டப்பணிகளுடன் தொடர்புடைய 88 ஒத்துழைப்பு உடன்படிக்கைகள் கையொப்பமிடப்பட்டுள்ளன. அவற்றின் மொத்த மதிப்பு, சுமார் 2218 கோடி யுவான் ஆகும். 1600 கோடி யுவான் என்ற குறிக்கோளை இது தாண்டியுள்ளது. மேற்கு சீனாவின் 3வது பண்பாட்டுத் துறைப் பொருட்காட்சி சீனாவின் உள் மங்கோலியத் தன்னாட்சிப் பிரதேசத்தில் நடைபெறும் என்ற தகவலை இரண்டாவது பொருட்காட்சியிலிருந்து எமது செய்தியாளர் அறிந்துகொண்டார். பல்வேறு வட்டாரத்தினர் இதை ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். நேயர்கள் இதுவரை, வேகமாக வளரும் மேற்குச் சீனாவின் பொருளாதாரம் பற்றி கேட்டீர்கள். இத்துடன் இன்றைய மக்கள் சீனம் நிகழ்ச்சி நிறைவு பெறுகின்றது. வணக்கம் நேயர்களே.
|
|