
சீன மகளிரின் இல்லற வாழ்க்கை குறித்த 2வது கருத்துக் கணிப்பின் முடிவை, அனைத்துச்சீன மகளிர் சம்மேளனம் கடந்த மார்ச் முதல் நாள் வெளியிட்டுள்ளது. இக்கருத்துக் கணிப்பின் படி, சீனாவில், திருமணம் செய்து நிலையான வேலை பெற்றுள்ள பெண் இளம் நிலைப் பட்டதாரிகள் மிகவும் இன்பமாக வாழ்கிறார்கள் என்று தெரிகின்றது. அரசு அலுவலர்கள், நிர்வாக மேலாண்மையாளர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள் போன்றோர், இத்தகைய பெண்களில் அடங்குவர்.
"இல்லற வாழ்வு அல்லது காதல் வாழ்வு இன்பமானதா" என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், கருத்துக் கணிப்புக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 52.4விழுக்காட்டினர், "இன்பமானது" என்று தெரிவித்தனர்.28.8 விழுக்காட்டினர் "சாதாரணமானது" என்று மறுமொழி கூறினர். "இல்லற வாழ்வு மிகவும் இன்பமானது"என்ற பெருமையை, சாங்காய் மாநகரப் பெண்மணிகள் பெற்றிருக்கிறார்கள். அடுத்த படியாக, பெய்ஜிங் 2ஆம் இடம் பெறுகின்றது. சின்தௌ, நின்போ,தியேன்ஜின் ஆகிய நகரங்கள் முறையே 3ஆம்,4ஆம்,5ஆம் இடம்பிடிக்கின்றன.

சீனாவில், 68.5 விழுக்காட்டுப் பெண்கள், தத்தம் குடுபங்கள் மீது மனநிறைவு அடைகின்றனர் என்று கருத்துக் கணிப்பு காட்டியுள்ளது. பெய்ஜிங், சாங்காய், குவாஞ்சோ, சி ஆன் உள்ளிட்ட 20 நகரங்களில் இக்கருத்துக் கணிப்பு மேற்கொள்ளப் பட்டது. கருத்துக்கணிப்புக்குட்படுத்தப்பட்ட பெண்களின் சராசரி வயது 35. அவர்களில் 70 விழுக்காட்டுக்கு மேலானோர் திருமணம் செய்தவர்கள்.
நீரில் மூழ்கக்கூடிய டாங்கி
நீரில் முழுமையாக மூழ்கக் கூடிய டாங்கியைத், தென் கொரியா உலகில் முதல் முறையாக உருவாக்கியுள்ளது.

கருப்புச் சிறுத்தை என்னும் இத்தகைய புதிய தலைமுறை டாங்கி, 55 டன் எடை உடையது. அது நெடுஞ்சாலையில் மணிக்கு 70 கிலோமீட்டர் வேகத்திலும் வயல்வெளியில் 50 கிலோமீட்டர் வேகத்திலும் முன்னேறவல்லது. அதில் 120 மில்லிமீட்டர் விட்டமுடைய தானியங்கிப் பீரங்கி ஒன்று பொருத்தப்படுகின்றது. ஹெலிகாப்டரைத் தாக்கும் ஆற்றல் உடைய இத்தகைய டாங்கியில் பல்வகை முன்னெச்சரிக்கைச் சாதனங்களும் உள்ளன.
தவிர, 4.1 மீட்டர் ஆழம் வரை அது நீருக்குள் மூழ்க முடியும்.நீர் பரப்பில் மிதந்து வந்தவுடனே, அது போரில் இறங்க முடியும்.
இத்தகைய டாங்கி ஒன்றின் விலை,85 லட்சம் அமெரிக்க டாலர்.
|