தாராளமாக பார்க்கலாம்.
முதலில் கவிநிலா சீன வானொலி நேயர் மன்றத்தின் பிப்ரவரி மாதத்தின் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை பார்க்கின்றோம்.. நட்பு பாலம் நிகழ்ச்சியின் தொடக்கத்தில் யாருடன் யார் உரையாடப் போகிறார்கள் என்பதை அறிவிக்க வேண்டும். அதே போல் நிகழ்ச்சியின் இறுதியில் யார் பங்கேற்றார்கள் என்பதையும் அறிவிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இரண்டு, புதிதாக துவக்கப்பட்டுள்ள சீனாவின் வரலாற்று மீளாய்வு என்ற நிகழ்ச்சிக்கு வரவேற்பு தெரிவிக்கப்பட்டது. மூன்று சீன அரசு தலைவரின் தென்னாப்பிரிக்க பயணத்திற்கு வாழ்த்து தெரிவிக்கப்பட்ட்து. நான்கு 2007ம் ஆண்டில் எங்கள் மன்ற பணிகள் எவ்வாறு அமைய வேண்டும் என விவாதித்தோம். அடுத்து இலங்கை மட்டக்களப்பு மு.மு.ஹம்தான் அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு பற்றி தெரிவித்த கருத்தை வழங்குகின்றோம். அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 18வது கருத்தரங்கு மாபெரும் விழாவுக்கு சீன வானொலி பிரதிநிதிக் குழு சிறப்பித் தந்தது. கருத்தரங்கு வெற்றியுடன் நடைபோட்டு சிறப்பாக முடிவடைய பாடுபட்ட ஈரோடு நேயர்கள், நிர்வாகிகள், மற்றும் முதல்வர்களைப் பாராட்டுகின்றேன். தவிரவும் இவ்விழாவுற்கு வருகை தந்த 500க்கும் மேற்பட்ட நேயர்களுக்கு என் இனிய இதயம் கவர்ந்த நல் வாழ்த்துக்கள் என்று கவிநிலா சீன வானொலி நேயர் மன்றத்தின் தலைவர் மீனாட்சி பாளையம் கா அருண் தெரிவித்தார். மு.மு.ஹம்தான் 18வது கருத்தரங்கிற்கு தெரிவித்த பாராட்டுக்கு மிக்க நன்றி. அடுத்து தர்மபுரி இல.சின்னபையன் தெரிவித்த கருத்தை வாசிக்கின்றேன். அனைத்திந்திய சீன வானொலி நேயர்கள் மன்றமும் ஈரோடு மாவட்ட சீன வானொலி நேயர்கள் மன்றமும் இணைந்து நடத்திய 18வது கருத்தரங்கு மற்றும் ஐம்பெரும் விழாவில் கலந்து கொண்டேன். விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளைக் கண்டு வியந்தேன். ஏனெனில் நான் அப்பொழுது தான் முதன் முதலாக இத்தகைய கருத்தரங்கில் கலந்து கொண்டேன். இருப்பிலும் கடந்த 5 மாதங்களாக சீன வானொலியின் நேயராக நிகழ்ச்சிகளைக் கேட்டுக் கொண்டிருந்தாலும் கடிதத் தொடர்பு இல்லாமல் இருந்தது எனக்கு ஒரு குறையாகவே இருந்தது. நான் நேயராக மாறி தொடர்ந்து நிகழ்ச்சிகளை கேட்டு கருத்து தெரிவிப்பேன். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் தர்மபுரி இல.சின்னபையன். அடுத்து மழையூர் த.மாலதி தெரிவித்த கருத்து. ஜனவரி 31ம் நாள் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பல்லவி பரமசிவம் தெரிவித்த கருத்துக்கள் ஒலிபரப்பப்பட்டன. அவர் பங்கு கொண்ட நிகழ்ச்சி மூலம் ஈரோட்டில் நடந்த 18வது கருத்தரங்கு பற்றிய முழு விவரங்களையும் அறிய முடிந்தது. கருத்தரங்கு நடைபெறுவதற்கான முன்னேற்பாடுகளும் நடைமுறை விவரங்களும் தமிழ் பிரிவின் நிகழ்ச்சி மூலம் நேயர்களுக்கு வழங்கப்படுவதற்கு மிக்க நன்றி. இந்த நிகழ்ச்சிகள் என்னைப் போன்ற கருத்தரங்கில் கலந்து கொள்ளாத நேயர்களுக்குத் துணை புரிந்தவை. மிக்க நன்றி.
இன்றைய நிகழ்ச்சியின் முதல் பகுதியில் மூன்று நண்பர்கள் அனைத்திந்திய சீன வானொலி நேயர்கள் மன்றத்தின் 18வது கருத்தரங்கு பற்றி கருத்து தெரிவித்தார்கள். அடுத்து பெரிய காலாப்பட்டு பி சந்திரசேகரன் தெரிவித்த கருத்தை பார்க்கின்றோம். எந்த ஒரு வானொலியும் இதுவரை செய்தது இல்லை. இனியும் செய்ய போவதுமில்லை. சீன வானொலிக்கு நேயர்கள் எழுதும் ஆயிரக்கணக்கான கடிதங்களை வாராவாரம் நாள் வாரியாக பிரித்து பின் வரிசைபடுத்தி நேயர்களின் ஊர் பெயருடன் கூறிவருவதைத்தான் சொல்லுகின்றேன். நிலையத்தில் பணியாளர்கள் குறைவாக இருந்தாலும் நேயர்களுக்கு மன நிறைவான நிகழ்ச்சிகள் மிக சிறப்பான முறையில் வழங்கப்படுகின்றன. சீன வானொலிக்கு கோடானு கோடி நன்றிகளை தெரிவிக்கின்றேன். அடுத்து இலங்கை மட்டக்களப்பு இ ரத்தீஷன் எழுதிய கடிதம். எனது பெயர் இ ரத்தீஷன். 14 கோவிந்தன் வீதி மட்டக்களப்பில் வசிக்கும் நான் உங்கள் நிகழ்ச்சியை தவறாது கேட்டு வருகின்றேன். குறிப்பாக எனக்கு பிடித்தவை சீன செய்தி, சீனக் கதை என்பவை. சீன வானொலியின் நேயராக மாற விரும்புகின்றேன். ரத்தீஷன் போன்ற மிக பல இலங்கை நண்பர்கள் எங்களுடன் தொடர்பு கொண்டு புதிய நேயராக விண்ணப்பம் செய்தார்கள். அவர்கள் இனிமேல் நேயர் அணியில் உறுப்பினராகி நிகழச்சிகள் பற்றி கருத்து தெரிவிப்பார்கள். பாராட்டுக்கள். அடுத்து சோலாங்கணல்லூர் தி. குமார் சீன தேசிய இன குடும்பம் நிகழ்ச்சியை கேட்டு தெரிவித்த கருத்தை வழங்குகின்றோம். பண்டைச் சீன தேசிய இனத்துச் சிறுபான்மை இன மக்கள் உணவு உடை மற்றும் பண்பாட்டுடன் வாழ்வதை நேயர்கள் அறிய உரைப்பதைத் தன் பணி என்றே கொண்டது சீன வானொலியே. நிலாமகள் பாடகி ஈ இனம் சூவினம் கம்பிமேல் உலாவரும் உய்கூர் இனம், சாலா இனம், அலாதியாம் அன்ஷீ நடன தூ இனம், தாய் வழி எலாமெனும் மோசோ இன வாழ்வு முறை ஆகியவற்றை அறிந்தேன். சீன சிறுபான்மை தேசிய இனங்களின் வழக்கங்கள் பற்றி இந்த நிகழ்ச்சி மூலம் அறிந்து கொண்டுள்ளேன். மிக்க நன்றி. சேந்தமங்கலம் எஸ் எம் இரவிச்சந்திரன் சீன அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவின் ஆப்பிரிக்க நாடுகளின் பயணம் பற்றி தெரிவித்த கருத்து. பொருளாதாரத்திலும் சமூக வளர்ச்சியிலும் பின் தங்கியுள்ள ஆப்பிரிக்க நாடுகளில் சீன அரசுத் தலைவர் பயணம் மேற்கொண்டமை சிறப்பானதாகும். அங்கு வட்டி இல்லாத கடன் வழங்குவது உள்ளிட்ட பல நிதியுதவிகளைச் சீனா செய்துள்ளது. ஆப்பிரிக்க கண்டத்திற்கு சீனா வழங்கிய உதவி உலகிற்கே பெருமையான விஷயமாகும். உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள். உலகம் நமது என்று சிந்து பாடுங்கள். உழைப்பவர்கள் ஒன்றானால் உலகம் அவர்களின் கையில் என்று ஒரு சிறிய பாடலின் வரிகள் நினைவுக்கு வருகின்றன.
சேந்தமங்கலம் எஸ் எம் இரவிச்சந்திரன் சீன அரசுத் தலைவர் ஹுச்சிங்தாவின் ஆப்பிரிக்க பயணத்திற்கு தெரிவித்த பாராட்டுக்கு மிக்க நன்றி. அடுத்து சீன அரசுத் தலைவர் ஹுச்சின்தாவ் பற்றிய செய்தியை வழங்குகின்றோம். சீனாவில் புத்தாண்டு தினத்தை ஒட்டி அரசுத் தலைவர் ஹுச்சிந்தாவ் வட மேற்கு பகுதி கான்சூ மாநிலத்தின் டேபின் கிராமத்திற்கு பயணம் செய்து லீசாய் குடும்பத்தினருடன் வசந்த விழா கொண்டாடியது மிகவும் மகிழ்ச்சி தர கூடிய செய்தி. பின் தங்கிய மக்களுக்கான திட்டங்களை அறிவிப்பதுடன் அந்த திட்டங்கள் மக்களிடம் போய்ச் சேர்கின்றனவா. அந்த திட்டங்களால் மக்கள் பயன் அடைந்துள்ளார்களா என அறிந்துகொள்ள இது ஒரு நல்ல வாய்ப்பு. நலவாழ்வு பாதுகாப்பு நிகழ்ச்சியை கேட்டு வாழ்வை வளமாக்க வழி பற்றி இராமியம்பட்டி சீ பாரதி தெரிவித்த கருத்து குடும்பப் பிணைப்புகளை அடிப்படையாக வைத்துக் கட்டப்பட்டதே நவீன சமூதாயம் ஆகும். கணவனும் மனைவியும் இதை ஆரம்பித்து வைக்கிறார்கள். அவர்கள் தமது திருமணத்தின் போது நகமும் சதையும் போல் மலரும் மணமும் போல் ஆம்பலும் நீரும் போல் இணைபிரியாது வாழத் திட்டமிட்டு தம்முடைய வாழ்வைத் தொடக்குகின்றனர். அவர்களது அன்பின் பயனாக அருமையான பிள்ளைகளைப் பெற்று வளர்க்கின்றார்கள். அன்பு தவழும் அந்த வீட்டில் இனிய குழந்தைகள் தவழ ஆரம்பிக்கிறார்கள். அன்பு நிறைந்த இனிமையான சூழ்நிலையில் தான் நம் பிள்ளைகள் வளமுடன் வாழமுடியும்.
|