• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-19 10:17:48    
சீன இந்திய நட்புறவு ஆண்டு என்னும் கட்டுரை போட்டி
ஆரணி பொன் தங்க வேலன் எழுதிய கட்டுரை
தலைப்பு சீன இந்திய நட்புறவு வளர என் பணி

cri

பழம் பெருமை

இந்தியாவும் சீனாவும் ஆற்றோர நாகரீகத் தொட்டில்களைக் கண்ட நாடுகள். உலக அதிசயங்களைப் பெற்று ஓங்கிய நாடுகள். நீண்ட பெருஞ்சுவரும், தாஜ்மகாலும் இதற்குச் சாட்சிகளாகக் காட்சியளிக்கின்றன. இவற்றை அறிவதிலும் ஆராய்வதிலும் அவ்வாறு ஆராய்ந்து கண்ட உண்மைகளை எடுத்துச் சொல்வதிலும் நான் பெருமை அடைகின்றேன்.

பெரிய நாடுகள்.

உலக மக்களுக்கு நல்வழிகாட்ட தோன்றிய பெருமான்கள் பலரை ஈன்றெடுத்த நாடுகள் தான் சீனாவும் இந்தியாவும் ஆசியக் கண்டத்தின் மிகப் பெரிய நாடு சீனா. அடுத்த பெரிய நாடாக இந்தியாவும் திகழ்கின்றது. மக்கள் தொகையில் சுமார் 230 கோடியளவு கொண்ட நாடுகளாகக் சீனாவும் இந்தியாவும் திகழ்கின்றன. இருப்பிடம் மற்றும் மக்கள் தொகையின் வளர்ச்சியை கட்டுப்படுத்தி நாட்டு வளர்ச்சியில் அவை நாட்டம் காட்டுகின்றன. "ஒரு தம்பதி ஒரு குழந்தை"என்கிறது சீனா. "ஒளிமயமான வாழ்வுக்கு ஒன்றே போதும்" என்கின்றது இந்தியா. ஆசிய கண்டத்தின் வளர்ச்சிக்கு சகல நாடுகளின் அமைதிக்கு இவ்விருநாடுகளும் நட்புறவுடன் வளர வேண்டும.் இதை வரவேற்பதே என் நோக்கம்.

அமைதி

சீனாவும் இந்தியாவும் பஞ்சசீலக் கொள்கைகளை உருவாக்கிக் கடைபிடித்த நாடுகள். அனைத்து நாடுகளும் அமைதியுடன் வாழ வேண்டும் என்ற குறிக்கோளைப் பெற்ற நாடுகள். போரில் ஈடுபட்டு அழியும் நாடுகள் அமைதியாவதற்கு முயற்சி எடுக்கும் நாடுகள். ஐக்கிய நாடுகள் அவையில் இதன் காரணமாகப் பெருமைபெற்ற நாடுகள். இப்படிப்பட்ட நாடுகளில் வாழும் சீன இந்திய சகோதரர்கள் மிகவும் நட்புணர்வுடன் வாழ வேண்டும். இந்த நட்புணர்வு மேலும் வளர்ச்சியைக் கொடுக்கும்.

வர்த்தகம்

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தமிழக அரசர்கள் சீனாவுடன் வர்த்தக உறவை வைத்திருந்தனர். சீனப் பட்டு தமிழ் நாட்டில் உலாவந்தது. இன்று மென் பொருட்களும் வன்பொருட்களும் சீனாவிலும் இந்தியாவிலும் அதிக அளவில் உற்பத்தியாகின்றன. சீன உற்பத்திப் பொருட்கள் இந்திய அங்காடிகளை அழகு செய்கின்றன. இந்திய உற்பத்திப் பொருள் கண்காட்சி நடத்தி சீனா மகிழ்கின்றது. தொழில் முனைவோர் சீனாவிலிருந்து இந்தியா வருவதும், இந்தியாவிலிருந்து சீனா செல்வதும் பாராட்டுதலுக்குரியது. இந்தியத் தொழிலதிபர்கள் சீனா செல்லவும், சீன தொழிலதிபர்களை இந்தியாவில் வரவேற்கவும் நான் என்றும் தயாராக உள்ளேன்.

அரசியல்

இந்திய சீன அரசியல் தலைவர்கள் அதிகாரிகள் தொழிலதிபர்களிடையே நல்ல பரிமாற்றம் நடைபெற்றுவருகின்றது. அரசியல் தலைவர்களுடைய அமைதி நோக்கம் காரணமாக இரு நாட்டு நட்புணர்வு வலிமை அடைகின்றது. இருநாடுகளும் அரசியல் மட்டத்தில் கைகோர்த்து நடக்கும் போது அமெரிக்கா போன்ற நாடுகள் வியந்து நோக்கும். ஐ.நா அவையில் ஆசியா இமயமாக உயர்ந்து நிற்கும். இதை நான் விரைவில் காண்பேன்.

கல்வி

உயர் கல்வி கற்கும் மாணவர்கள் இந்தியாவிலிருந்து சீனா செல்வதும், சீனாவிலிருந்து இந்தியா வருவதும் நட்புறவை வளர்க்கும். இப்படிப்பட்ட பயிற்சிக்காலத்தில் ஒருவர் பிறநாட்டு பண்பாடு மனித நேயம் இவற்றை உணரமுடியும். இத்தகைய ஆழ்ந்த உறவுடன் கூடிய உணர்வு பலகாலம் நீடிக்கும். இந்திய மாணவர்களைச் சீனா சென்று படிக்கத் தூண்டுவேன்.

சீன வானொலி

சீன வானொலி தமிழ்ப் பிரிவு சீனப் பண்பாடு சீனச் சமூக வாழ்வு, சீனத் தேசிய இனக் குடும்பம், சீன மொழி, சீன மகளிர், சீனாவில் இன்பப் பயணம் போன்றவற்றைத் தமிழ் பேசும் மக்கள் அறியும் வகையில் நிகழ்ச்சிகளை அமைத்து வழங்குகின்றது. இவற்றின் மூலம் சீன மக்களின் பண்பாடு பழக்கவழக்கம் மொழி உணவு, இசை ஆகியவற்றை அறிய முடிகின்றது. மேலும் தமிழர் தங்கள் பண்பாடு, பழக்கவழக்கம் உணவு, மொழி, இசையுடன் ஒப்பிட்டுப் பார்க்கவும் முடிகின்றது. இந்த ஒப்பீட்டுணர்வில் நட்புணர்வு மேலும் வளர்கின்றது. தமிழ் கற்ற சீன மக்களின் பேச்சு தமிழர்களைச் சீன மொழி பேசத் தூண்டுகிறது. எனவே சீன வானொலி நிகழ்ச்சிகளைக் கேட்பதும் சீன வானொலிக்குக் கடிதங்கள் எழுதுவதும் சீன வானொலி தமிழ்ப் பிரிவு மற்றும் இந்திய மொழிப் பிரிவுகளை வலிமை பெறச் செய்வதும் இந்திய சீன நட்புணர்வை வளர்க்கும் வழிகளாக அமையும்.

கங்கா யாங்சி நேயர் மன்றம்

ஒரு வானொலிக்குப் பெருமை சேர்ப்பவை நிகழ்ச்சிகள், நேயர் கடிதங்கள், நேயர்களுக்கும் வானொலிக்கும் உள்ள தொடர்புகள், இவற்றை நன்கு உணர்ந்து சீன வானொலி தமிழ்ப் பிரிவு செயல்படுகின்றது. சீன வானொலியின் 43 மொழி ஒலிபரப்புகளில் தமிழ்ப் பிரிவு சிறப்பு பெற்றுள்ளது. சீன வானொலி தமிழ்ப் பிரிவை வளர்க்க வேண்டும் என்ற அடிப்படையிலும் சீன இந்திய நட்புறவை மேம்படுத்த வேண்டும் என்ற நோக்கத்திலும் தான் கங்காயாங்சி தமிழ் நேயர் மன்றம் துவக்கப்பட்டது. கங்கையும் யாங்சியும் இணையட்டும். சீனமும் தமிழும் இரு நாட்டவர் நாவில் நடம் புரியட்டும். "நாதுலா"எல்லையை திறந்து இந்திய மண்ணும் சீன மண்ணும் கைகுலுக்கட்டும். இந்திய சீன நட்புறவு ஆண்டில் இவ்வளவும் நடக்க நானும் பாடுபடுவேன்.. வாழ்க இந்திய சீன மொழிகள். வளர்க சீன இந்திய நட்புறவு. ஓங்குக உலக அமைதி.