• சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்• 外国人在中国
நிகழ்ச்சி நிரல்
ஒலிபரப்பு நேரம்
China Radio International
செய்திகள்
வெளிநாட்டுச் செய்திகள்
செய்தித் தொகுப்பு

இன்பப் பயணம்

பண்பாடும் கதையும்

சமூக வாழ்வு

அறிவியல் உலகம்

சீன தேசிய இன குடும்பம்

நல வாழ்வுப் பாதுகாப்பு

விளையாட்டுச் செய்திகள்
(GMT+08:00) 2007-04-25 11:05:43    
சோப்பு 1

cri

வடக்கு ஜன்னல் வழியாக சரிவாக வந்து விழுந்த வெய்யிலுக்கு முதுகைக் காட்டியபடி உட்கார்ந்து, தன்னுடைய எட்டுவயது மகளுடன் சேர்ந்து இறந்த முன்னோர்களுக்காக காகிதப் பணத்தை ஒட்டிக் கொண்டிருந்தாள். ஸு மின்னின் மனைவி. அப்போது எமதுவாக யாரோ நடந்துவரும் கேன்வாஸ் காலணிகளின் அழுத்தமான காலடி ஓசை கேட்டது. அவளுக்குத் தெரியும். கணவன் தான் வந்து கொண்டிருக்கிறான்.

ஆனாலும் கவனிக்காதது போல உட்கார்ந்தபடி காகிதப் பணத்தை ஒட்டிக் கொண்டிருந்தாள். காலணிகளின் அழுத்தமான ஓசை நெருங்கி நெருங்கிவந்து அவன் பின்னே நின்றது. வேறு வழியில்லாமல் போகவே நிமிர்ந்து தனது கணவன் ஸு மின்னைப் பார்த்தாள். அவனோ குனிந்தபடியே தனது நீண்ட அங்கியன் உள்புற சட்டைப் பைக்குள் கையை விட்டு எதையோ துழாவிக் கொண்டிருந்தான்.

கையை கஷ்டப்பட்டு வெளியே எடுத்த போது அதில் ஒரு சிறிய நீளவட்ட பொட்டலம் இருந்தது. மனைவியிடம் கொடுத்தான். அவள் அதை வாங்கி, என்னவென்று சொல்ல முடியாத ஒரு வாசனையை முகர்ந்தாள். ஆலில் எண்ணெய் வாசனை போலிருந்தது. அதன் பச்சைக் காரித உறையில், பற்பல சின்னச்சின்ன வடிவங்களுடன் ஒரு பெரிய பொன்னிற முத்திரை காணப்பட்டது. அதைப் பறிக்க மகள் ஸியு ஓடிவந்தாள். ஆனால் அம்மா அவளை அப்பால் தள்ளிவிட்டாள்.

"கடைக்குப் போயிருந்திங்களா?" அந்தப் பொட்டலத்தைப் பார்த்தபடியே கேட்டாள்.

"ம்ம்... ஆமா..." அவளுடைய கையில் இருந்த பொட்டலத்தை உற்றுப்பார்த்தபடியே சொன்னான்.

பச்சைக் காகித உறை பிரிக்கப் பட்டது. உள்ளே கூரியகாந்தி பச்சை நிறத்தில் ஒரு மெல்லிய தான் சுற்றப்பட்டிருந்தது. அதையும் பிரிப்பதற்கு முன்பே உள்ளே இருந்த பொருள் என்ன என்பதை அதுவே காட்டிக் கொடுத்தது. அதுவும் சூரியகாந்தி பச்சையில் கடினமான பளபளப்பான கட்டியாக இருந்தது. இப்போது மெல்லியதாள் கிரீம் கலரில் காணப்பட்டது. விவரிக்க முடியாத ஆலில் வாசனை இப்போது ரொம்பவே காட்டமாக இருந்தது.

ஒரு குழந்தையை வாரி எடுத்து முத்தமிடுவது போல அவள் அந்த சோப்பை மூக்கிற்கு அருகே கொண்டு போய் முகர்ந்தபடியே.

"ஆகா, இது உண்மையிலேயே அருமையான சோப்பு" என்றாள்.

"ஆமா. இனிமே நீ இதை தேய்த்துத்தான் குளிக்கணும்." என்று சொன்னபடியே அவளுடைய கழுத்தை அவன் பார்த்த போது அவள் கன்னம் சிவந்தது. சில நேரங்களில் கழுத்தை—குறிப்பாக காதுக்குப் பின்னால்—தடவும் போது விரல்களில் ஏதோ சொர சொரப்பாகத் தட்டுப்படுகிறது. பல ஆண்டுகளாக சேர்ந்து படையாக அப்பிக் கொண்டிருக்கும் அழுக்கு என்று அவளுக்குத் தெரியும். ஆனால் அலட்சியப்படுத்தி வந்தாள். இப்போது கணவன் இதை உற்றுப் பார்க்கிற போது, வெட்கம் பிடுங்கித் தின்றது. அதுவும் அபூர்வமான வாசனை உடைய பச்சை நிற வெளிநாட்டு சோப்பை பார்க்கிற போது, காது மடல்கள் ஜிவ்வெனச் சிவந்தன. இரவு உணவை முடித்துக் கொண்ட பிறகு, இந்த சோப்பைத் தேய்த்து நன்றாகக் குளிக்கணும் என்று மனதுக்குள் தீர்மானித்துக் கொண்டாள்.