
சீனாவில் மிக உயரமான பௌத்த மதக் கோபுரம் அண்மையில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. ஜாங்சு மாநிலத்து சாஞ்சோ நகரில் அமைந்துள்ள இப்புத்தக் கோபுரம், தியென்னின் கோபுரம் எனப்படுகின்றது. பொன் கூரையுடன் கூடிய இக்கோபுரம் 13 அடுக்குகள் உடையது. அதன் உயரம், 153.79 மீட்டர். உள்நாட்டு வெளிநாட்டுப் புத்தப் பெரியார் 108 பேர் அதன் துவக்க விழாவில் திருமறை ஓதிச் சிறப்பித்தனர்.
சீனாவின் குடும்பப் பெயர்கள் சீனாவில் வாங் என்ற குடும்பப் பெயர், அனைத்துக் குடும்பப் பெயர்களின் எண்ணிக்கையிலும் முதலிடம் பெறுகின்றது. 9 கோடியே 28 லட்சத்து 81 ஆயிரம் மக்கள், வாங் குடும்பப் பெயரைக் கொண்டவர்கள்.

இது, நாட்டின் மக்கள் தொகையில் 7.25 விழுக்காடாகும். அடுத்து, லீ குடும்பப் பெயர் 2 ஆம் இடம் பெறுகின்றது. அதன் மக்கள் தொகை, 9 கோடியே 20 லட்சத்து 74 ஆயிரமாகும். இது, நாட்டின் மக்கள் தொகையில் 7.19 விழுக்காடு வகிக்கிறது. 3ஆம் இடத்தில் இருக்கும் சாங் குடும்பப் பெயரின் மக்கள் தொகை, 8 கோடியே 75 லட்சத்து 2 ஆயிரமாகும். நாட்டின் மக்கள் தொகையில் இது 6.83 விழுக்காடு. மக்கள் தொகை 2 கோடியயை மி்ஞ்சிய குடும்பப் பெயர்களின் எண்ணிக்கை, 10 ஆகும். அவை முறையே வாங் (WANG), லீ (LI), சாங் ( ZHANG), லியூ (LIU) , சென் (CHEN), யாங் (YANG), ஹூவாங் (HUANG), சாவோ (ZHAO) , ஊ (WU), சௌ(ZHOU) என்பன. முதல் நூறு குடும்பப் பெயர்களின் மக்கள் தொகை, நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 84.77 விழுக்காடு வகிக்கிறது. சீனாவில் குடும்பப் பெயர் என்பது, தந்தை வழி குடும்பப் பெயராகும். பொதுவாக, ஒருவர் பெயரின் முதல் எழுத்து, கடும்பப் பெயரே.

சீனப் பள்ளிகளில் பெரிதும் அதிகரிக்கும்
உடற்பயிற்சி வகுப்பு சீனாவில், தொடக்க மற்றும் இடைநிலைப் பள்ளிகளில் உடற்பயிற்சி வகுப்புகள் பெருமளவில் அதிகப்படுத்தப் படும் என்று சீனக் கல்வி அமைச்சகம் அண்மையில் அறிவித்துள்ளது. மாணவர்களுக்கான உடல் நல வரையறை முறைமையைச் செயல்படுத்தவுள்ளதாகவும் கல்வியமைச்சசகம் தெரிவித்துள்ளது. புதிய பள்ளிப் பாடத் திட்டத்திற்கிணங்க, சீனாவின் தொடக்கப் பள்ளியில் முதல் மற்றும் 2ஆம் ஆண்டு மாணவ மாணவிகளுக்கான உடற்பயிற்சி வகுப்புகளின் எண்ணிக்கை, மூன்றிலிருந்து நான்காக அதிகரிக்கும். தொடக்கப் பள்ளியின் 3ஆம் ஆண்டு முதல் இடைநிலைப் பள்ளியின் 3ஆம் ஆண்டு வரையான, அதாவது 3ஆம் வகுப்பு முதல் 9 ஆம் வகுப்பு மாணவமாணவிகளுக்கான உடற்பயிற்சி வகுப்புகளின் எண்ணிக்கை, முந்தைய இரண்டிலிருந்து மூன்றாக அதிகரிக்கப்படும். மேல் நிலைப் பள்ளியில் உடற்பயிற்சி வகுப்புக்கான மதிப்பு எண், 11 என்று நிர்ணயிக்கப்படுகின்றது. இது எல்லாப் பாடங்களிலும் மிக அதிகமானது.
நாள்தோறும் ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி நடவடிக்கையில் ஈடுபடுமாறு மாணவர்கள் கோரப் பட்டுள்ளனர். வகுப்பு இடைவேளையின் போது, உடற்பயிற்சி நேரம், 20 நிமிடத்திலிருந்து 30 நிமிடமாக நீட்டிக்கப் பட்டுள்ளது. தவிர, பல்கலைக்கழக நுழைவு தேர்வில் உடற்பயிற்சி வகுப்புக்கான மதிப்பு எண்ணும் உரிய விகிதாசாரத்தில் கூட்டப்படும் என்றும் சீனக் கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.

பசுக்கன்று படியாக்கம் 4 பசுக் கன்றுகளைப் படியாக்கம் செய்வதில் வெற்றி கண்டுள்ளதாக ஆர்ஜென்டின அறிவியலாளர்கள் அண்மையில் அறிவித்துள்ளனர். அத்துடன் இந்தக் குளோனிங் பசுக் கன்றுகளின் மரபணுக்களைச் சீர்திருத்தியுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்காலத்தில்,இந்தப் பசு மாடுகள் தரும் பாலிலிருந்து மனித உடலுக்கு ஏற்ற இன்சுலின் உருவெடுக்கும். நீரிழிவு நோயாளிகள், இத்தகைய பாலைக் குடிப்பதன் மூலம் தங்களுக்குத் தேவையான அளவு இன்சுலினைப் பெறலாம் என்று அவர்கள் தெரிவித்தனர்.
|